உள்ளடக்கத்துக்குச் செல்

அல் - சால்ட் நகரம், ஜோர்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்-சால்ட் ( ஆங்கிலம்: Al-Salt ) என்பது மேற்கு மத்திய ஜோர்டானில் உள்ள ஒரு பண்டைய விவசாய நகரம் மற்றும் நிர்வாக மையமாகும்.[1] இது அம்மானில் இருந்து எருசலேம் செல்லும் பழைய பிரதான நெடுஞ்சாலையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 790 முதல் 1,100 மீட்டர் உயரத்தில் உள்ள பால்கா மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் ஜோர்தான் பள்ளத்தாக்குக்கு அருகில் மூன்று மலைகளின் வளைவுகளில் கட்டப்பட்டுள்ளது. மூன்று மலைகளில் ஒன்றான சபல் அல்-காலா 13 ஆம் நூற்றாண்டின் பாழடைந்த கோட்டையின் தளமாகும். இது பால்கா கமாகாணத்தின் தலைநகரம். கிரேட்டர் சால்ட் நகராட்சியில் சுமார் 97,000 மக்கள் வசிக்கின்றனர் (2006)

வரலாறு

[தொகு]

இந்த நகரில் எப்போது குடியேற்றம் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இது பேரரசர் அலெக்சாண்டரின் ஆட்சியின் போது மாசிடோனிய இராணுவத்தால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. பைசாந்தியன் காலங்களில் இந்த நகரம் சால்டஸ் என்று அழைக்கப்பட்டது மற்றும் ஒரு மறைமாவட்டத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட திருச்சபை மாவட்டம் ஆகும். அந்த நேரத்தில், இந்த நகரம் ஜோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ள பிரதான குடியேற்றமாகக் கருதப்பட்டது. இந்த குடியேற்றம் மங்கோலியர்களால் அழிக்கப்பட்டு பின்னர் மம்லுக் சுல்தான் பைபர்களின் (1260–1277) ஆட்சியின் போது மீண்டும் கட்டப்பட்டது மற்றும் உதுமானிய பேரரசின் காலத்தில் மீண்டும் ஒரு பிராந்திய தலைநகராக மாறியது. 1830 களின் முற்பகுதியில், சால்ட் மீண்டும் தாக்கப்பட்டது, இந்த முறை பாலஸ்தீனத்தில் உதுமானியர்களுக்கு எதிரான பிரச்சாரங்களில் எகிப்திய அரசப் பிரதிநிதி இப்ராகிம் பாசா நடத்திய தாக்குதலின் போது ஏற்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜோர்தான் நதி அப்பால் கிழக்கு நோக்கி தங்கள் வர்த்தக வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக வணிகர்கள் நாப்லசிலிருந்து வந்தபோது சால்ட் உச்சம் அடைந்தது. அவர்களின் வருகையின் விளைவாக, இந்த காலகட்டத்தில் ஒரு எளிய கிராமத்திலிருந்து சால்ட் விரைவாக விரிவடைந்தது, பல கட்டடக்கலை ரீதியாக நேர்த்தியான கட்டிடங்களைக் கொண்ட ஒரு நகரமாக, பல கவர்ச்சிகரமான தேன் நிற உள்ளூர் கல்லிலிருந்து நாப்லுசி பாணியில் கட்டப்பட்டுள்ளன. இந்த சகாப்தத்தில் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்கள் தற்போதுவரை உள்ளன.

விவசாயம்

[தொகு]
மலைப்பாங்கான பீடபூமிகளில் அமைந்துள்ள சால்ட் நகரம்

ஜோர்டானில் சால்ட் அதன் வளமான மண் மற்றும் அதன் பழம் மற்றும் காய்கறி அறுவடைகளின் தரம், குறிப்பாக ஆலிவ், தக்காளி, திராட்சை மற்றும் பீச் ஆகியவற்றால் புகழ் பெற்றது. சால்ட் நகரம் ஒரு குறிப்பிட்ட வகை திராட்சையின் வேரை சுல்தானகத்திற்கு கொடுத்ததாக ஊகிக்கப்படுகிறது.   [ மேற்கோள் தேவை ] ரோமானிய பேரரசின் சால்டோஸ் நகரத்திலிருந்து சால்ட் என்ற பெயர் உருவானதாக கருதப்படுகிறது.

வாடி சூயிப் (செத்ரோ பள்ளத்தாக்கு) சால்ட் நகரத்தின் மிகப்பெரிய விவசாய தளங்களில் ஒன்றாகும், இது பெரிய விவசாய பகுதிகளைக் கொண்ட பள்ளத்தாக்கு ஆகும் தனியாருக்குச் சொந்தமான பெரும்பாலான பண்ணைகள் இந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன; இங்கு முதன்மை பயிர்கள் திராட்சை, ஆலிவ் மற்றும் தொங்கும் பழங்களைக் கொண்ட மரங்கள் என்பனவாகும்.

கல்வி

[தொகு]

சால்ட் 1918 ஆம் ஆண்டிலிருந்து ஜோர்தானின் பொது முதல் மேல்நிலைப் பள்ளி உட்பட பல பள்ளிகளையும், 1800 களில் இருந்த பல தனியார் பள்ளிகளையும் கொண்டுள்ளது, அதாவது இலத்தீன் பள்ளி மற்றும் கத்தோலிக்க பள்ளி. காது கேளாதோருக்கான ஹோலி லேண்ட் நிறுவனத்தின் இலாப நோக்கற்ற கல்வி மையம் உட்பட. நகரத்தைச் சுற்றி இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன: 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அல்-பால்கா செயல்முறை சார்ந்த பல்கலைக்கழகம் மற்றும் அம்மான் நகரை சால்ட்டுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அல்-அக்லியா அம்மான் பல்கலைக்கழகம் (அம்மான் தேசிய பல்கலைக்கழகம்) போன்றவை.

அருங்காட்சியகம்

[தொகு]

சால்ட்டின் தொல்பொருள் மற்றும் நாட்டுப்புற அருங்காட்சியகம், சால்கோலிதிக் காலத்திலிருந்து இஸ்லாமிய சகாப்தம் வரையிலான கலைப்பொருட்கள் மற்றும் அப்பகுதியின் வரலாறு தொடர்பான பிற பொருட்களையும் காட்சிப்படுத்துகிறது. நாட்டுப்புற அருங்காட்சியகத்தில் பெதோயின் மற்றும் பாரம்பரிய உடைகள் மற்றும் அன்றாட நாட்டுப்புற பொருட்கள் வழங்கல் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "சால்ட் - அரசு இணையம்". Archived from the original on 2017-10-19. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.