திராட்சைப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்புத் திராட்சை

திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினிகர், வைன், திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.

திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6-லிருந்து 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கருநீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன.

திராட்சை, சிவப்பு அல்லது பச்சை
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்288 kJ (69 kcal)
18.1 g
சீனி15.48 g
நார்ப்பொருள்0.9 g
0.16 g
புரதம்
0.72 g
உயிர்ச்சத்துகள்
தயமின் (B1)
(6%)
0.069 mg
ரிபோஃபிளாவின் (B2)
(6%)
0.07 mg
நியாசின் (B3)
(1%)
0.188 mg
(1%)
0.05 mg
உயிர்ச்சத்து பி6
(7%)
0.086 mg
இலைக்காடி (B9)
(1%)
2 μg
கோலின்
(1%)
5.6 mg
உயிர்ச்சத்து சி
(4%)
3.2 mg
உயிர்ச்சத்து ஈ
(1%)
0.19 mg
உயிர்ச்சத்து கே
(14%)
14.6 μg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(1%)
10 mg
இரும்பு
(3%)
0.36 mg
மக்னீசியம்
(2%)
7 mg
மாங்கனீசு
(3%)
0.071 mg
பாசுபரசு
(3%)
20 mg
பொட்டாசியம்
(4%)
191 mg
சோடியம்
(0%)
2 mg
துத்தநாகம்
(1%)
0.07 mg
Other constituents
Fluoride7.8 µg

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

திராட்சை வகைகள்[தொகு]

பன்னீர் திராட்சை,அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது‌‌),அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ்,மாணிக்சமான்,சோனாகா,சரத்(விதையில்லாதது‌‌).

மண் மற்றும் தட்பவெப்பம்[தொகு]

நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிர கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை.தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும்.

நிலம் தயாரித்தல்[தொகு]

பன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3மீட்டர் இடைவெளியில் தோண்டவேண்டும். மற்ற ரகங்களுக்கு 1*1*! மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்டவேண்டும்.குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்[தொகு]

செடிகள் நட்ட உடனேயும்,மூன்றாவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் காட்ட வேண்டும். கவாத்து செய்வதற்கு ஒரு நாள் முன்பும்,அறுவடைக்கு ஒரு நாள் முன்பும் நீரை நிறுத்த வேண்டும்.

கொடிகள் வளர்ப்பு முறை[தொகு]

நடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளி விடவேண்டும். பின்பு வளரும் பக்கக்கிளைகளை எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி,கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும்.[1] பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ளக்கொடியை பந்தலுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நெருக்கமாகு பழங்கள் உள்ள திராட்சைக் குலைகளில் 20 சதவீதம் பட்டாணி அளவு, இருக்கும் பொழுது நீக்கவேண்டும்.

பூச்சி பாதுகாப்பு[தொகு]

வண்டுகள்[தொகு]

இரண்டு அல்லது மூன்று முறை பாசலோன் 35 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்கள்[தொகு]

டைமித்யேட் 30 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மாவுப்பூச்சிகள்[தொகு]

டைமித்யேட் 25 இசி அல்லது மானோகுரோட்டாபாஸ் 36wsc ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளித்தோ கட்டுபடுத்தலாம்.மாவுப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் புள்ளி வண்டுகளை செடி ஒன்றுக்கு பத்து வீதம் விட்டு கட்டுபடுத்தலாம்.

தண்டு துளைப்பான்[தொகு]

இதைக் கட்டுபடுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் 0.1சதம் கலந்து தண்டு பகுதி முழுவதும் தடவி விடவேண்டும்.

நூற்புழுக்கள்[தொகு]

ஒரு கொடிக்கு 60 கிராம் கார்போபியூரான் 3ஜி அல்லது 20 கிராம் ஆல்டிகார்ப் குருணைகள் அல்லது 200 கிராம் வேப்ப புண்ணாக்கு இட்டு பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். மருந்து இட்டு 15 நாட்களுக்கு மண்ணை கிளறக்கூடாது.

சாம்பல் நோய்[தொகு]

0.4 சதம் நீர்த்த கந்தகம் தெளித்து அல்லது கந்தக் தூள் ஒரு எக்டரக்கு 6 முதல் 12 கிலோ அளவில் தூவி கட்டுப்படுத்தலாம். ஆந்ரகுனோஸ் மற்றும் அடிச்சாம்பல் நோய் : ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது ஏதாவது ஒரு காப்பர் பூஞ்சாணக்கொல்லி 0.25 சதவிகிதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். 1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம். காப்பர் சல்பெட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.

திராட்சை மதுபானங்களின் வகைகள்[தொகு]

பெரும்பான்மையான திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை,

  • வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா-வை சேர்ந்த ""விட்டிஸ் லபுர்ஸ்கா""
  • வட அமெரிக்காவை சேர்ந்த ""விட்டிஸ் ரிபர்சியா""
  • தென்கிழக்கு அமெரிக்காவிருந்து மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து பரவியுள்ள மஸ்காண்டியன் எனப்படும் ""லிட்டிஸ் ருட்டுண்டிபோலியா""
  • ஆசியாவை சேர்ந்த "லிட்டிஸ் அமெரென்சிஸ்"

திராட்சைக் கொடிகள்[தொகு]

வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்திய தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிபேரா (Vitis vinifera) என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், விட்டிஸ் லபுருஸ்கா (Vitis labrusca), விட்டிஸ் ரிப்பாரியா (Vitis riparia), விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா (Vitis rotundifolia), விட்டிஸ் அமுரென்சிஸ் (Vitis amurensis) போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்.

பரவலும் விளைச்சலும்[தொகு]

லெபனானில் உள்ள ஐத்தா அல் பூக்கர் என்னும் ஊரில் உள்ள ஒரு திராட்சைத் தோட்டம்
திராட்சைக் கொடிகள்

உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சை உற்பத்தி நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.

கீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கைப் பரப்பளவின் அடிப்படையில் திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்
நாடு பரப்பளவு (km²)
 எசுப்பானியா 11,750
 பிரான்சு 8,640
 இத்தாலி 8,270
 துருக்கி 8,120
 ஐக்கிய அமெரிக்கா 4,150
 ஈரான் 2,860
 உருமேனியா 2,480
 போர்த்துகல் 2,160
 அர்கெந்தீனா 2,080
 சிலி 1,840
 ஆத்திரேலியா 1,642
 ஆர்மீனியா 1,459
வருடத்தின் அடிப்படையில் அதிகம் திராட்சை உற்பத்தி செய்யும் நாடுகள்
(மில்லியன் மெற்றிக் தொன்களில்)
தரவரிசை நாடு 2009 2010 2011
1  சீனா 8,038,703 8,651,831 9,174,280
2  இத்தாலி 8,242,500 7,787,800 7,115,500
3  ஐக்கிய அமெரிக்கா 6,629,198 6,777,731 6,756,449
4  பிரான்சு 6,101,525 5,794,433 6,588,904
5  எசுப்பானியா 5,535,333 6,107,617 5,809,315
6  துருக்கி 4,264,720 4,255,000 4,296,351
7  சிலி 2,600,000 2,903,000 3,149,380
8  அர்கெந்தீனா 2,181,567 2,616,613 2,750,000
9  ஈரான் 2,305,000 2,225,000 2,240,000
10  ஆத்திரேலியா 1,797,012 1,684,345 1,715,717
உலகம் 58,521,410 58,292,101 58,500,118
மூலம்: ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

வேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது.

திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர காபோவைதரேற்று, டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

விதையில்லா திராட்சை[தொகு]

தற்போது திராட்சை பயிரிடு முறையில் விதையில்லா திராட்சை உற்பத்தி முறையே பெரும்பங்கு வகிக்கிறது.திராட்சை பயிரானது அதன் கிளைகளை வெட்டி உடலவழி இனப்பெருக்கம் செய்யப்படுவதால், விதையிலா திராட்சை இனப்பெருக்கத்திற்கு எவ்வித சிக்கலை இருப்பதில்லை.திராட்சை தாவரத்தின் விதை வழி பயிரிடலிலும் அல்லது ஆரம்ப கட்ட கருவினை பத்திரமாக எடுத்து திசு வளர்ப்பு செய்து புதிய தாவரங்களை உருவாக்குவதிலும் விதை வழி பயிரிடும் விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். விதையிலா திராட்சை பயிரிட பல ஆதாரங்கள் உள்ளன, மற்றும் அனைத்து வர்த்தக ரீதியாக திராட்சை பயிரிட பின்வரும் மூன்று ஆதாரங்களில் ஒன்றிலிருந்து பெறப்படுகிறது:

  • தாம்சன் சீட்லெஸ் (Thompson Seedless)
  • ரசியன் சீட்லெஸ் (Russian Seedless) மற்றும்
  • பிளாக் மொனுக்கா (Black Monukka)

மேற்கண்ட முன்று நிறுவனங்களும் விடிஸ் வினிபெரா ( Vitis vinifera) என்ற திாட்சை வகையின் உற்பத்தியாளர்களாவர். தற்போதைய நிலவரப்படி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட விதையில்லா திராட்சை இனங்கள் உள்ளன. அவற்றுள் சில ஐன்செட் சீட்லெஸ் (Einset Seedless), பெஞ்சமின் கன்னல்சுவின் முதன்மை விதையிலா திராட்சை, ரிலையன்சு மற்றும் வீனசு போன்ற திராட்சை இனங்கள் வடகிழக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஒன்றாரியோ கடுமையான குளிர் காலநிலையை தாங்கி வளர்வதற்குரிய தகவமைப்பைப் பெற்ற சிறப்பு விதையில்லா திராட்சைத் தாவரங்களாகும்.

உலர்ந்த திராட்சை[தொகு]

உலர்ந்த திராட்சை

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

திராட்சைச் சாறு[தொகு]

திராட்சைச் சாறு

திராட்சையை நசுக்கிப் பிழிந்து திரவமாக மாற்றுவதன் மூலம் திராட்சைச் சாறு பெறப்படுகிறது. இச்சாறு நொதிக்கவைக்கப்பட்ட பின்னர் வைன், பிராந்தி என்ற மது வகைகளும் வினிகர் என்ற காடியும் உற்பத்தி செய்யப்படுகின்றன. காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைச்சாற்றில் இயற்கையாக அதில் இருக்கும் ஈஸ்டு என்ற நொதியுயிரி நீக்கப்படுவதால் நொதித்தல் நடைபெறாது. மேலும் அச்சாற்றை உறையவைத்தால் சாராயம் (ஆல்கஹால்) இருப்பதில்லை. மதுத் தொழிற்சாலையில் திராட்சை சாறானது 7 முதல் 23% திராட்சைப் பழக்கூழ் , தோல், தண்டு மற்றும் விதைகளைக் கொண்ட மஸ்த் (must) (நொதியேறாப் பழச்சாறு) என்ற கலைவை தயாரிக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் திராட்சைச் சாறுகளில் கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள கன்கார்டு வகை திராட்சை சாறும், நைஜீரியா திராட்சை வகையிலிருந்து பெறப்படும் வெள்ளை திராட்சை சாறும் பொதுவான வகைகள் ஆகும்.இவை இரண்டும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவைகளாகும். ஐரோப்பிய ஒயின் திராட்சை போன்ற வேறு இன வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கலிபோர்னியாவில் சுல்த்தானா (தாம்சன் சீட்லெஸ்) வகை திராட்சையிலிருந்து பெறப்படும் சாறு வெள்ளை நிறச் சாறு தயாரிப்பளவை உயர்த்துகின்றன[2] .

பன்னீர் திராட்சை மகசூல்[தொகு]

5 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.

அதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம் வரை விலை போகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வேளாண் தொழில்நுட்ப விவசாயிகள் பயிற்சி கையேடு. மதுரை. ௨௦௧௬. 
  2. "Thompson Seedless Grape Juice". sweetwatercellars.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராட்சைப்பழம்&oldid=3659486" இலிருந்து மீள்விக்கப்பட்டது