கலோரி
கலோரி (Calorie) அல்லது கனலி என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு ஒரு கனலி ஆகும். தற்போது வெப்பம் அல்லது ஆற்றல் ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான ஜூல் என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு உயிர்வளியுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலை இவற்றைப் பொருத்து அமையும்.[1][2][3]
உணவும் கனலியும்
[தொகு]நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கனலியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கனலியை வெளிப்படுத்தும். சான்றாக ஒரு கிராம் புரத உணவு நான்கு கனலிகளை வெளியாக்கும். அதே சமயத்தில் ஒரு கிராம் கொழுப்பு உணவு ஒன்பது கனலிகளை வெளியாக்கும். கனலி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருள்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கனலி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய ஆற்றல் ஊட்டுகிறது.
வேலையும் கனலியும்
[தொகு]10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர் காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும்.
உடலில் கனலி சேமிப்பு
[தொகு]உடலின் முக்கிய எரிபொருட்களாக மாவுச் சத்து, ஸ்டார்ச்சு, சர்க்கரை ஆகியன அமையும். ஒரு வேளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் கனலி அளவை விட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ள கனலிகளை சேமித்து வைத்துக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்லவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கனலிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டு கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள முடியும்.
உணவுப் பொருள்களில் உள்ள கனலி அளவு
[தொகு]- 1 கிராம் மாவுச்சத்து – 4 கனலிகள்
- 1 கிராம் புரதச்சத்து – 4 கனலிகள்
- 1 கிராம் கொழுப்புச் சத்து – 9 கனலிகள்
- 1 தேக்கரண்டி எண்ணெய் ( 5 மில்லி) : 45 கனலிகள்
- 1 மேசைகரண்டி எண்ணெய் (15 மில்லி : 135 கனலிகள்
- 1 தேக்கரண்டி வெண்ணெய் : 90 கனலிகள்
- 1 தேக்கரண்டி சர்க்கரை : 20 கனலிகள்
- 1 தம்ளர் (240 மில்லி) அரிசி : 700 கனலிகள்
- 100 கிராம் கிழங்கு, காரட், பீட்ரூட் : 100 கனலிகள்
- வாழைப்பழம் 1 பெரியது : 60 கனலிகள்
- மாம்பழம் 1 சிறியது : 100 கனலிகள்
- ஆப்பிள் 1 : 60 கனலிகள்
- நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள் : 40 கனலிகள்
- கடின பழங்கள்,காய்கறிகள் : 60-100 கனலிகள்
- மற்ற காய்கறிகள் (கலோரி குறைவு) : 20-50 கனலிகள்
பொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு.
- பால் 1 டம்ளர் (200 மில்லி) : 140 கனலிகள்
- ஆடை நீக்கிய பால் 1 டம்ளர் : 40 கனலிகள்
- முட்டை : 75 கனலிகள்
- மீன் உணவுகள் : 70-100 கனலிகள்
- கோழி இறைச்சி 100 கிராம் : 140 கனலிகள்
- கோழி இறைச்சியின் மற்ற பகுதிகள் 100 கிராம் : 200 கனலிகள்
- இறைச்சி 100 கிராம் : 300 கனலிகள்
- தேங்காய் (முழு பெரியது) : 400 கனலிகள்
- இட்லி 2 : 80 கனலிகள்
- தோசை (2ஸ்பூன் எண்ணெய்) : 140 கனலிகள்
- காபி : 140 கனலிகள்
- உப்புமா : 150 கனலிகள்
- பூரி (2) உருளை : 250 கனலிகள்
- பொங்கல் (நெய் இல்லாமல்) : 100 கனலிகள்
- பொங்கல் நெய்யுடன் : 190 கனலிகள்
- 2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது : 120 கனலிகள்
- 2 சப்பாத்தி எண்ணெயின்றி : 80 கனலிகள்
- 1 வடை :140 கனலிகள்
- ரொட்டி 1 துண்டு : 60 கனலிகள்
- பழக்கூட்டு (ஜாம்) : 30 கனலிகள்
- வெண்ணெய் : 100 கனலிகள்
- ஓட்மீல், கார்ன் பிளேக்ஸ் : 100-150 கனலிகள்
- தேங்காய் சட்னி : 30 கனலிகள்
- பரோட்டா 1 : 120 கனலிகள்
- ஒரு சாப்பாடு (சைவம்) : 500-600 கனலிகள்
- ஒரு சாப்பாடு (அசைவம்) : 800-1000 கனலிகள்
- தயிர் : 50 கனலிகள்
- 100 கிராம் இறைச்சி (எண்ணெயில் வறுத்தது) : 400 கனலிகள்
- 100 கிராம் இறைச்சி (எண்ணெயில் பொறித்தது): 600 கனலிகள்
- 100 கிராம் கோழி இறைச்சி – (எண்ணெயில் வறுத்தது) : 300 கனலிகள்
- 100 கிராம் கோழி இறைச்சி – (எண்ணெயில் பொறித்தது): 500 கனலிகள்
- 1 கொறிப்பு (பிஸ்கெட்) : 30 கனலிகள்
- 1 க்ரீம் பிஸ்கெட் : 50 கனலிகள்
- 10 பொரிப்புகள் : 100 கனலிகள்
- எண்ணெயில் வறுத்த பொருட்கள் எதுவாயினும் 30 கிராம் : 100 கனலிகள்
- பழக்கூழ்( ஐஸ்கிரீம்)(1 Scoop) : 250 -300 கனலிகள்
- இந்திய இனிப்பு வகைகள் : 200 கனலிகள்
- கேக்(டீகேக்) : 150 கனலிகள்
- கேக் (Icing கேக்) : 250 கனலிகள்
- பழச்சாறு சர்க்கரையுடன் : 150 கனலிகள்
- பழச்சாறுசர்க்கரையின்றி : 100 கனலிகள்
- 300 மில்லி பானங்கள் : 250 கனலிகள்
உசாத்துணை
[தொகு]- மணவை முஸ்தபா , இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை பதிப்பகம். 1995
- மரு. கோ இராமநாதன் 'இன்றைய மருத்துவம்' மருத்துவ விழிப்புணர்வு மாத இதழ் இணைய தள வெளியீடு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nutrition, Center for Food Safety and Applied (7 March 2022). "Changes to the Nutrition Facts Label" (in en). FDA. https://www.fda.gov/food/food-labeling-nutrition/changes-nutrition-facts-label.
- ↑ "EU Regulation No 1169/2011 of the European Parliament and of the Council of 25 October 2011 on the provision of food information to consumers". EUR-Lex (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
- ↑ USDA (2013). "China, General Rules for Nutrition Labeling of Prepackaged Foods" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.