சூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூல் (தாவர சூல்)

ஆஞ்ஜியொஸ்பெர்ம் தாவரங்களின் பெண்மை தன்மையை குறிக்கும் மெகாஸ்பொரகம் ஒவ்வொன்றும் சூல் என அழைக்கபடுகிறது. சூலானது தாவர பெண் இனப்பெருக்க உறுப்பாகிய கருப்பை சுமந்து காணப்படும்.

சூலின் பொது அமைப்பு

சூற்பையின் உள்சுவரில் உள்ள ஒட்டுத்திசுவில், ஒரு காம்பின் மூலம் சூலானது இணைந்துள்ளது. இணைக்கும் அந்தகாம்பிற்க்கு ”ஃபியூனிக்கள்” என்று பெயர். மேலும், சூல் கருவுறுதலுக்கு தயார் நிலையில் இருக்கும் பொழுது, அதனை சுற்றி திசுக்களால் ஆன ஒரு உறையால் சூழப்பட்டிருக்கும், அதற்கு ”நியுசெல்லார்திசு” என்று பெயர். ஒவ்வொரு சூலிலும் நியுசெல்லார் திசுவை சுற்றி வெளிப்புறமாக ஒன்று அல்லது இரண்டு உறைகள் காணப்படலாம் அவைகள் ”சூல்உறை/ உறைகள்” எனப்படும். மேலும், சூல் உறைகள் சூலின் நுனியில் இணையாமல் துளைத்திறவு ஒன்றை ஏற்படுத்துகிறது. இதற்கு சூல்துளை என்று பெயர். ஃபியூனிக்களுடன் ஒட்டியிருக்கும் சூலின் அடிப்பாகம் ”சலாஸா” என அழைக்கப்படுகிறது.

சூலின் பாகங்கள்

சூலின் பாகங்கள்

தாவர சூலானது ஃபியூனிக்கள், நியுசெல்லார்திசு, சூல்உறைகள், சூல்துளை, சலாஸா மற்றும் கருப்பை போன்றவற்றை பாகங்களாக உள்ளடக்கியது.

சூலின் வகைகள்

சூலின் வகைகள்

சூல் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அதன் அமைப்பில் பல கோணங்களில் வளைவுகளை ஏற்படுவதன் மூலம் அதன் சூல்துளை மற்றும் ஃபியூனிக்கள் அமையும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகையாக அறியப்பட்டு பின்வருமாறு பெயரிடப்பட்டுள்ளது.

1.  ஆர்தோட்ரோபஸ் சூல்

இந்த வகையில், சூல்துளை மற்றும் ஃபியூனிக்கள் ஆகிய இரண்டும் ஒரே நேர் கோட்டில் அமையும் விதத்தில் இருக்கும். குறிப்பாக பாலிகோனேசி, பைபெரேசி போன்ற குடும்ப தாவரங்களில் இந்த வகை சூலானது காணப்படுகின்றது.

2.  அனட்ரோபஸ் சூல்

இந்த வகையில் சூல்துளையானது, ஃபியூனிக்களுக்கு மிக அருகாமையில் அமையும் விதத்தில் சூலின் உடலம் வளைந்து தலைகீழாகக் கவிழ்ந்து  காணப்படும். குறிப்பாக கேமோபெட்டல்லே குடும்ப தாவரங்களில் இந்த வகை சூலானது காணப்படுகின்றது.

3.  ஹெமி அனட்ரோபஸ் சூல்

இந்தவகையில், நியுசெல்லார்திசுக்கும் சூல் உறைக்கும் நேர் செங்குத்தாக ஃபியூனிக்கள் அமையும் விதத்தில் சூலின் உடலம் வளைந்து திரும்பிவாறு காணப்படும். எனவே சூல் உடலம் கிடைமட்டமாக அமைந்த காணப்படும். குறிப்பாக மால்பிஜியேசி மற்றும் பிரிமுலேசி குடும்ப தாவரங்களில் இந்த வகை சூலானது காணப்படுகின்றது.

4.  கேம்பைலோட்ரோபஸ் சூல்

இந்த வகை சூலின் உடலம் சிறிதே வளைந்து சூல்துளை மட்டும்  தலைகீழாக அமைந்த காணப்படும். சூலின் அடிபகுதி இடம் மறுவதில்லை. ஆகையால் இந்தவகையில் சூல்துளை, ஃபியூனிக்களுக்கு அருகாமையில் வந்தமைவதில்லை. இந்தவகை சூல்கள் கப்பாரிடேசி, லெகுமினோசி மற்றும் கீனபோடியேசி குடும்ப தாவரங்களில் காணப்படுகின்றது.

5.  ஆம்ஃபிட்ரோபஸ் சூல்

இவ்வகையில் சூலின் அடிப்பகுதி இடம்பெயராதவாறு சூல் வளைகிறது, ஆனால்  சூல் உடலமானது குதிரை லாடம் போன்ற வடிவில் அமையும் விதத்தில் சூலின் உடலம் வளைந்து சூல்துளை, ஃபியூனிக்களுக்கு அருகாமையில் வந்தமைகிறது. இந்தவகை சூல்கள் அலிஸ்மேசி மற்றும் புட்டமேசி குடும்ப தாவரங்களில் காணப்படுகின்றது.

6.  செர்சினோட்ரோபஸ் சூல்

இந்த வகை சூலானது தலைகீழாகக் கவிழ்ந்து, பின் ஃபியூனிக்கள் மேலும் தொடர்ந்து வளர்வதால் சூல்துளை மீண்டும் மேல்நோக்கி அமையும் விதத்தில் சூல் ஒரே சுற்றாகச் சுற்றி வளைந்தவாறு வளர்கிறது. கேக்டேசி குடும்ப தாவரங்களில் மட்டும் இவ்வகை காணப்படுகின்றது.

மேற்கோள்கள்

1.ஆஞ்ஜியோஸ்பெர்ம்களின் கருவியல், வி.கே. பப்ளிசிங் ஹவுசஸ், சென்னை.
2.ISC Biology Book-II For Class-XII, Author: Dr. P.S. Verma,s. Chand Publishing.

பகுப்புகள்

தாவர கருவியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்&oldid=2321982" இருந்து மீள்விக்கப்பட்டது