உள்ளடக்கத்துக்குச் செல்

பாலணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதக் கரு முட்டை ஒன்றின் வெட்டுமுகப் படம்
கருக்கட்டலின்போது விந்து கருமுட்டையுள் செல்வதைக் காட்டும் படம்

பாலணு அல்லது புணரி (Sex cell or Gamete) என்பது, பாலியல் அடிப்படையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில், கருக்கட்டலின்போது, இன்னொரு பாலணுவுடன் சேரும் ஆற்றலுள்ள ஒரு கலம் ஆகும். ஒரு இனம் உருவவியல் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட வகையான பாலணுக்களை உருவாக்குமாயின், அவை பெண் புணரி அல்லது கருமுட்டை என்றும், ஆண் புணரி அல்லது விந்து எனவும் அழைக்கப்படுகின்றன.

ஒரு உயிரினத்தின் ஒரு தனியன் ஒரு வகைப் பாலணுவை மட்டும் உருவாக்குமாயின், அவை உருவாக்கும் பாலணுக்களின் தன்மைக்கேற்ப பெண், ஆண் தனியன்களாக இருக்கும். பெண் பெரிய பாலணுவையும், ஆண் சிறிய பாலணுவையும் உருவாக்குகின்றன. ஆண் பாலணு "விந்து" எனவும், பெண் பாலணு "கருமுட்டை" எனவும் அழைக்கப்படுகின்றன. இது, ஆண், பெண் பாலணுக்கள் வெவ்வேறு அளவுகளில் அமையும், மாறுபட்ட பாலணு இணைவு அல்லது பல்லினப் புணரித்தன்மை நிலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். மனித இனத்தின் நிலையும் இத்தகையதே. மனித இனத்தில் கருமுட்டைகள், விந்துக்களிலும் 20 மடங்கு பெரியவை. மாறாக, ஒத்த பாலணு இணைவு என்பதில் ஆண், பெண் பாலணுக்கள் இரண்டும் ஒரே அளவையும் வடிவத்தையும் கொண்டவை.

பாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத் தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை மரபணுக்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும். மனிதர்களில், சாதாரண உயிரணுக்களில் 23 சோடி நிறப்புரிகள் இருக்கும். இவற்றில் ஒரு சோடி நிறப்புரிகள் பாலின வகையை, அதாவது ஒரு குறிப்பிட்ட தனியன் ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கும். பாலினத்தைத் தீர்மானிக்கும் நிறப்புரிகள் பாலின நிறப்புரிகள் எனவும், ஏனையவை தன்நிறப்புரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பாலின நிறப்புரிகள் X, Y என இருவகைப்படுகின்றன. அவற்றில் XX நிறப்புரிச் சோடிகள் இருப்பின் பெண்ணாகவும், XY நிறப்புரிச் சோடிகள் இருப்பின் ஆணாகவும் இருக்கின்றன. பாலணுக்கள் உருவாகும்போது, ஒவ்வொரு பாலணுவும் சாதாரண உயிரணுவில் இருக்கும் நிறப்புரிச் சோடிகளில் இருந்து, ஒவ்வொரு நிறப்புரியை மட்டுமே பெற்று உருவாதலால், 23 தனி நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டை X நிறப்புரிகளை மட்டுமே கொண்டிருக்கும். விந்துக்கள் X அல்லது Y நிறப்புரிகளைக் கொண்டிருக்கலாம். எனவே ஆண், பெண் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவின் பாலின வகையைக் கட்டுப்படுத்துவது ஆண்களே ஆகும். பால் வகையைத் தீர்மானிக்கும் நிறப்புரிகள் ஆணுக்கு XY ஆகவும் பெண்ணுக்கு XX ஆகவும் இருப்பதனால், Y நிறப்புரியைக் கொண்டுள்ள ஒரே பாலணுவான விந்து மட்டுமே ஆண் பிறப்பதைத் தீர்மானிக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலணு&oldid=2616849" இலிருந்து மீள்விக்கப்பட்டது