உருவவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Calopogon multiflorus தாவரத்தின் உருவவியல

உயிரியலில் உருவவியல் (Morphology) என்பது உயிரினங்களின் உருவம், அமைப்பு பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியுமான அறிவியல் ஆகும். [1][2] உருவவியலில் உயிரினத்தின் அமைப்பு, வடிவம், நிறம், அமைந்திருக்கும் ஒழுங்கு போன்ற வெளித் தோற்றமும்[3] , உள் உறுப்புக்களின் வடிவம் அமைப்பும் கருத்தில் கொள்ளப்படும். உயிரினத்தினதோ, அல்லது அதன் பகுதிகளினதோ முழுமையான தோற்றம் (gross structure) பற்றிய அறிவு பெறப்படும். உயிரியல் வகைப்பாட்டில் உயிரினங்களின் உருவவியல் அறிவு முக்கிய இடம் பெறுகின்றது.

வகைமை[தொகு]

ஓர் உயிரைப்பற்றி அறிய வேண்டுமானால் இரு வகையாக அதை நாம் அறிய இயலும். முதலில் அதன் உடலமைப்பை அறிதல் வேண்டும். அதன் பின் எவ்வாறு உடலின் ஒவ்வொரு பாகமும், அங்கமும் வேலை செய்கின்றது என்பதை அறிதல் வேண்டும். முதல்வகை அறிவை இயற்கையுருவவியல் என்றும், இரண்டாவது வகை அறிவை உடலியல் (Physiology) என்றும் கூறுவார்கள். இப்பிரிவுகளை முன்பு, தனித்தனியே பயின்றனர். உடலியலறிவு வளர வளர, அதனோடு இயற்கையுருவவியலையும் சேர்த்து அறிதலே மேலானதாகத் தோன்றுவதால் இப்பொழுது இரண்டும் கலந்து கற்பிக்கப்படுகின்றன.

பொதுவாக உயிர்களை நம் கண்ணால் காணுபவை, நுண்ணோக்கி வழியே காணுபவை, நுண்ணோக்கி மூலமாகவும் காணமுடியாதவை என மூவகையாகப் பிரிக்கலாம்.

1. கண்ணுக்குப் புலப்படும் உயிர்களில் யானை, திமிங்கலம் முதலிய பெரிய விலங்குகள் முதல் குட்டைகளில் பாசியோடு கலந்து காணப்படும் மிகச் சிறிய உயிர்கள் வரையிலுமுள்ள எல்லா உயிர்களும் அடங்கும். பாசிகளை அகன்ற வாயுடைய கண்ணாடி வட்டகையில் (Petri - Dish) சுத்தமான நீரில் விட்டு அதைத் தூக்கிச் சூரிய வெளிச்சத்துக்கு எதிரே பார்த்தால் சிறு சிறு அணுக்கள் போன்ற உயிர்கள் இங்கும் அங்கும் திரிவதைக் காணலாம். அவற்றை நுண்ணோக்கியன் வழியாகப் பார்த்தால், அவற்றின் உடல் அமைப்பு நன்கு தெரியும்.

2. நுண்ணோக்கி வழியேக் காணக்கூடியவை புரோட்டோசோவா என்னும் ஓரணு உயிரிகள் பாக்டீரியா, பசில்லஸ்கள் என்னும் ஓரணுத்தாவரங்கள் முதலியனவாகும்.

3. இவற்றிற்கும் சிறிதாக தீநுண்மம் (Virus) என்னும் உயிர்கள் இருக்கின்றன என்று ஊகிக்கப்படுகின்றது. இவை அம்மைகள், சளி, சிலவகைக் காய்ச்சல் முதலிய நோய்களுக்குக் காரணமாயிருக்கின்றன. இவற்றை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் மட்டுமே காண இயலும். அணுவுயிர்களை வடிகட்டும் பீங்கான் வடிகட்டிகளுக்குள்ளும் புகுந்து வெளிச் செல்லக்கூடிய அளவு சிறியவை. ஆதலினால் இவற்றை வடிகட்டிச் செல்லி (Filter - passers) என்றும் அழைப்பர்.

புரோட்டோப்பிளாசம் என்னும் உயிர்ப் பொருளாலானது. அதன் நடுவில் இந்த உயிர்ப் பொருள் அடர்த்தி மிகுந்து, உருமாறி உட்கரு என்னும் உறுப்பாகிறது. இவ்வாறு உட்கருவுடன் கூடிய உயிர்ப்பொருளுக்கு உயிரணு என்று பெயர். இவ்வுயிரணுக்கள் தாம் சுதந்திரமாகவும் ஒட்டுண்ணியாகவும் (Parasite) வாழ்ந்து வருகின்றன. இவை பல்கும் விதம் முன் கூறியபடி இரு பிளவாவது. தான். இவ்வாறு பிளவுபடும் பாகங்கள் பிரியாமலிருந்து இவை ஒவ்வொன்றும் மறுபடியும் பிளவுற்று ஒன்று சேர்ந்திருந்து, இவ்வாறே மறுபடியும் மறுபடியும் பிளவுபட்டும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தும் வாழு மானால் நாம் கண்ணால் பார்க்கக்கூடிய உயிர்களாகின்றன. மனித உடம்பும் இவ்வாறேதான் ஆக்கப் பட்டிருக்கிறது. நமது தசையிலாவது, உள் தோலிலாவது, உள்ளிருக்கும் உறுப்புக்களிலாவது ஒரு சிறு பாகத்தை எடுத்து ஊசிகளினால் பிய்த்து மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் இந்த உறுப்புக்களை ஆக்கும் உயிரணுக்களைக் காணலாம். ஆதலால், உயிர்களின் உடல்கள் இவ்வித உயிரணுக்களால் ஆக்கப்படுகின்றன எனத் தெளிவாகும். ஒர் உறுப்பானது அதி லுள்ள உயிரணுக்களின் அளவு, வடிவம், உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள் முதலியவற்றால் வேறுபடும். இவ் வேறுபாட்டின் காரணத்தாலே உறுப்புக்கள் தங்கள் தொழிலில் மாறுபடுகின்றன. இவ்வாறு பல ஆயிரக்கணக்கான உயிரணுக்களால் ஆக்கப்பட்ட உயிர்களைப் 'பலவணுவுயிர்கள்' (Metazoa) எனப் பொதுவாகக் அழைக்கின்றனர்.

உயிரியின் உடலமைப்பு[தொகு]

பல உயிர்களின் உடல் அமைப்பு இரண்டு சமபாகமாகப் பிரிக்கக்கூடிய நிலைமையில் இருக்கின்றது. மனிதனது தலையிலிருந்து மூக்கின் நடுப்பாகமா ஆசனம் வரையில் ஒரு கோடு இழுத்தால், வலது, இடது என இரண்டு சமபாகங்கள் ஏற்படுகின்றன. இந்த அமைப்பை ஒருதளச் சமச்சீர் (Bilateral Sym metry) என்று சொல்லுவார்கள். பெரும்பான்பையான உயிர்களில் இந்தச் சமச்சீர்தான் தோன்றுகிறது.

ஆனால் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்ற சில பிராணிகள் சக்கரம் போல் பல தளங்களில் சம பிரிவுகளாகப் பிரிக்கக் கூடிய உடலமைப்பைட் பெற்றிருக்கின்றன. இதற்கு ஆரைச் சமச்சீர் (Radial S.) என்று பெயர். கடலிலும் மற்ற நீரிலும் எல்லாத் திசைகளிலும் நீர் குடிப்பதற்குக் கிடைக்கின்றமையால் இவ்வுயிர்களின் எல்லாப் பக்கங்களும் சமமாக வளர்ந்திருக்கின்றன. இத்தகைய உயிர்கள் பாறை, நீர்த்தாவரங்கள் முதலியவைகளில் ஒட்டிக் கொண்டாவது அல்லது இடம்விட்டு இடம் போகும் ஆற்றல் குறைந்தாவது இருக்கும். பாம்பன், கண்ணனூர், திருவனந்தபுரத்துக்கு அருகே யிருக்கும் கோவளம் முதலிய இடங்களில் பாறை அடர்ந்த கடல் பாகங்களில் பாறைகளின்மேல் நின்று, கீழே பார்த்தால் வட்டவடிவமுள்ள பூக்கள் போல் பல வர்ணங்களுடன் வெகு அழகாக விரிந்து வாழும் கடற் சாமந்தி என்னும் பிராணிகளைக் காணலாம். அவை பாறையில் தங்கள் அடிப் பாகங்களால் ஒட்டிக்கொண்டிருக்கும். தொட்டால் உடனே உடம்பைச் சுருக்கிக்கொள்ளும். இப்பிராணிகள் அழகான ஆரைச் சமச்சீர் உள்ளனவாக இருக்கின்றன. மற்றும் கடலில் வாழ்கின்ற சில உயிர்கள் இச் சமச்சீரை நன்கு காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, கடலோரங்களில் செம்படவர்கள் தங்கள் வலையினின்றும் தூக்கி யெறிகின்ற நுங்கு போன்ற கூழ்ப் பொருளாலான சொறி (Jelly Fish) என்னும் உயிர், கடல் முள்ளெலி, நட்சத்திர மீன் முதலியன.

முதுகு தண்டு[தொகு]

Branchiostoma lanceolatum

பலவணுவுயிர்களைக் கவனித்தால். இரண்டு பெரிய பிரிவுகளைக் காணலாம். மீனும், தவளையும், ஓணான், பாம்பு, முதலை ஆமை போன்ற ஊர்வனவும், பறவையும், பாலூட்டிகளும் ஆகிய இவையெல்லாம் முதுகிலே எலும்புத் தண்டுள்ளவை. புமுக்கள், நத்தைகள், பூரான், பூச்சி, தேள் முதலிய மற்ற உயிர்க் கூட்டங்களுக்கு முதுகில் எலும்புத்தண்டு இல்லை. இவ்வாறாக, முதுகு தண்டுள்ளவை, முதுகு தண்டு இல்லாதவை என இரு பெரிய கூறுகளாகப் பலவணுவுயிர்களைச் சாதாரணமாகப் பிரிக்கலாம். ஆனால், முதுகு தண்டானது ஆரம்பத்தில் கண்டங்களாகத் துண்டுபடாத மீள்சக்தியுடைய கோல்போலக் கழுத்திலிருந்து வால்முனை வரையில் ஓடுகின்ற உறுப்பாக இருக்கின்றது. இதன் உயிரணுக்களில் நிரம்பக் குமிழிகள் உண்டு. குமிழி நிறைந்த உயிரணுக்களால் ஆன தண்டில் நார்த்திசுவினாலான மேல் தோல் பரவியிருக்கிறது. இவ்வகையான தண்டிற்கு நோட்டொ கார்டு ( Notochord) என்று பெயர். இந்த நோட்டொ கார்டு பின்னால் கண்டங்கண்டமாகத் துண்டுபட்ட முதுகெலும்புத் தண்டாக மாறுகிறது. இவ்வாறு மாறாமல், நோட்டொகார்டாகவே சில பிராணிகளிடம் இதைக் காணலாம். ஆற்று மணலில் புதைந்துவாழும் அயிரை மீன்போலச் சமுத்திரத் தரையில் மணலில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ்(amphioxus) என்னும் உயிருக்கு இந்தத் தண்டு மாறாது, இளம்பருவம் முதல் இறுதிவரை இருக்கும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Morphology". onelook.com. 2019-அக்டோபர்-27 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "Morphology". dictionary.reference.com. 2010-06-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "morphology". Encyclopædia Britannica. 2009-04-09 அன்று பார்க்கப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவவியல்&oldid=2866319" இருந்து மீள்விக்கப்பட்டது