உள்ளடக்கத்துக்குச் செல்

மகரந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு தாவரங்களின் மகரந்த மணிகளின் கலவை மின்னணு நுணுக்குக்காட்டியினால் உருப்பெருக்கப்பட்ட தோற்றம்.
கள்ளிச்செடி ஒன்றின் பூவையும் அதன் மகரந்தக் காம்பையும் காட்டும் உருப்பெருக்கிய படம்.

மகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றுப் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும்.

மகரந்தத்தின் அமைப்பு[தொகு]

ஒவ்வொரு மகரந்தமணியும் பதியக் கலங்கள், ஒரு பிறப்பாக்கிக் கலம், ஒரு குழாய்க்கரு, ஒரு பிறப்பாக்கிக் கரு என்பவற்றைக் கொண்டிருக்கும். பெரும்பாலான தாவரங்களின் மகரந்த மணி ஒவ்வொன்றிலும் ஒரு பதியக் கலமே இருக்கும். சில தாவரங்களில் பல பதியக் கலங்கள் இருப்பது உண்டு. பிறப்பாக்கிக் கரு பிரிந்து இரண்டு ஆண் பாலணுக் கலங்களை உருவாக்கும். இந்தக் கலக் கூட்டத்தைச் சுற்றி செலுலோசினால் ஆன கலச் சுவர் இருக்கும்.

மகரந்தம் நுண்வித்திக்கலனில் உற்பத்தியாகிறது. மகரந்தமணிகள் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும், மேற்பரப்புத் தன்மைகளுடனும் காணப்படுகின்றன. பைன் போன்ற தாவரங்களின் மகரந்தமணிகள் சிறகமைப்புக் கொண்டவை. மிகச் சிறிய மகரந்தமணிகள் 6 மைக்குரோமீட்டர் (0.006 மிமீ) விட்டம் கொண்டவை. காற்றினால் பரவும் மகரந்தமணிகள் 90 - 100 மைக்குரோமீட்டர் வரையான விட்டம் கொண்டவையாக இருக்கலாம். மகரந்தம் குறித்த ஆய்வுத்துறை மகரந்தத்தூளியல் எனப்படுகின்றது. இது, தொல்லுயிரியல், தொல்லியல், சட்டமருத்துவத் தடயவியல் போன்ற துறைகளுக்கும் பயனுள்ள ஒரு துறையாக உள்ளது.

மகரந்தமும் படிமமும்[தொகு]

மகரந்தத்தின் ஸ்போரோபோல்லேனின் எனகூடிய வெளிச்சுவர் படிமம் ஆவதற்கு துணை புரிகிறது. இது மற்ற பகுதிகளை அழித்து விடுகிறது. மகரந்தம் குறித்த ஆய்வுத்துறை மகரந்தத்தூளியல், இவ்வாறாகக் கிடைக்கின்ற படிம மகரந்த துகள்களைக்கொண்டு, பழங்கால வாழ்வியல் மாற்றங்களையும் மற்றும் பழங்கால வானியல் காலநிலைகளையும் அறிந்துகொள்ளஉதவுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரந்தம்&oldid=3687586" இலிருந்து மீள்விக்கப்பட்டது