உள்ளடக்கத்துக்குச் செல்

முள்நாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முள்நாறிப் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முள்நாறி
முள்நாறிப் பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malvales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Helicteroideae
சிற்றினம்:
Durioneae
பேரினம்:
Durio

இனங்கள்

தற்சமயம் 30 நன்கறியப்பட்ட துணைச் சிற்றினங்கள் உள்ளன. (உள்ளே பார்க்கவும்)

வேறு பெயர்கள்

Lahia Hassk.[1]

முள்நாறி (இலங்கை வழக்கு: துரியான் - Durian) என்பது துரியான் என்கின்ற தாவரப் பேரினத்தைச் சேர்ந்த பல்வேறு தாவர சிற்றினங்களைக் கொண்டுள்ள ஒரு மரம். இம்மரப் பழத்தின் மேற்பரப்பில் முட்கள் நிறைந்திருந்தாலும் அதில் உள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். மலாய் மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் இப்பழத்தை டுரியான் என்றும் டுரேன் என்றும் அழைப்பார்கள். டுரி என்றால் முள் என்று மலாய் மொழியில் பொருள்படும். இப்பழத்தின் அமைப்பே இப்பழத்திற்கு இந்தப் பெயர் ஏற்படுவதற்கான காரணம் ஆகும். முள்நாறிப் பழம் ஒரு பருவ காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும்.

பிறப்பிடம்

[தொகு]

முள்நாறி தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. முள்நாறிப் பழத்தின் மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும், 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முட்களைத் தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொரு தன்மையும் உண்டு. அது, அப்பழத்தின் தனித்துவம் மிக்க வாடை.

தன்மை

[தொகு]

மற்றப் பழங்களைப் போன்று இப்பழத்தின் வாடையை நாற்றம் என்றோ அல்லது வாசனை என்றோ நம்மால் பிரிக்க முடியாது. காரணம் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் ஒவ்வாமை காரணமாக இப்பழத்தின் வாடையை நாற்றம் என்பர். சிலர் அதையே வாசனை என்பார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் இப்பழத்தின் வாடை என்பது மிகவும் ஆற்றல் மிக்கது. ஒருவர் வீட்டில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அந்த வாடையைத் தொலைவில் இருப்பவராலும் உணர முடியும். முள்நாறிப் பழத்தினை முழுமையாக உண்ண முடியாது. முள்நாறிப் பழம் என்பது உடலுக்குச் சூடு தரும் பழவகையைச் சேர்ந்தது . இப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அதிக வெப்பம் ஏற்படும். மேலும் உடல் அதிகம் வேர்க்கத் தொடங்கிவிடும். இப்பழத்தை அதிகமாக உண்பதால், சிலருக்கு மூக்கு மற்றும் காது துளையின் வழி இரத்தம் வடியும். எனவே இதனைத் தவிர்க்க, இப்பழத்தைச் சாப்பிட்டப் பிறகு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்பது மலேசியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை.[2] தவிர இரத்த அழுத்தமுள்ளவர்கள் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லதென அறிவுறுத்தபடுகிறது.[3] மலேசியாவில் உள்ள பெருவாரியான மக்களால் முள்நாறிப் பழம் விரும்பி உண்ணப்படுகின்றது. எனவே அந்நாட்டு மக்கள் முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்' என்று அழைப்பர்.[4] மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,சீனா போன்ற நாட்டின் மக்கள் முள்நாறிப் பழத்தை விரும்பி உண்டாலும் மேற்கத்திய மக்கள் பொரும்பாலும் இப்பழத்தைத் துர்நாற்றம் வீசும் பழம் என்றே எண்ணுகின்றனர்.

முள்நாறி மரம்

[தொகு]

முள்நாறி மரம் ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடியது. முள்நாறிப் பழம் அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும். மற்றத் தோட்டங்களைப் போன்று இல்லாமல், பழங்கள் காய்க்கின்ற நேரத்தில் ஒரு முள்நாறிப் பழத் தோட்டம் மிக ஆபத்தான இடமாகவே கருதப்படுக்கின்றது. காரணம், எடை அதிகமுடைய முட்கள் நிறைந்த ஒரு முள்நாறிப் பழம் ஒருவரின் மேலே விழுந்தால் அவருக்குப் பெரிய காயங்களோ அல்லது இறப்போ கூட ஏற்பட வாய்ப்புண்டு. சராசரியாக, ஒரு முள்நாறி மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழங்கள் காய்க்கும்.

முள்நாறிப் பழத்தின் அறிவியல் பெயர் 'டுரியோ சிபெத்தினுஸ்' (Durio zibethinus). மத்திய ஆசிய சந்தைகளிலும் முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. முள்நாறிப் பழத்திற்கு டுரியோ குடேஜென்சிஸ், டுரியோ ஒச்லேவனுஸ், டுரியோ க்ரவாலேன்ஸ், டுரியோ டுல்சிஸ் போன்று வேறுசில அறிவியல் பெயர்களும் உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை

[தொகு]

பொதுவாக முள்நாறிப் பழ விரும்பிகள் நல்ல சுளையுள்ள பழங்களை வாங்குவதற்குச் சில வழி முறைகள் வைத்திருப்பார்கள். காரணம் பெரும்பாலும் இப்பழங்களைக் கடைக்காரர்கள் உடைத்து வைத்து விற்க மாட்டார்கள். ஏனென்றால் இப்பழத்தை உடைக்காமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். உடைத்து விட்டால் சில மணி நேரத்திற்குள் உண்டு விட வேண்டும். இல்லையென்றால் ஒருவாறு பிசு பிசுத்து, சுவையிழந்து பிறகு கெட்டுவிடும். மேலும், முள்நாறிப் பழத்தை வாங்குபவர்கள் உடைக்கப் படாத பழத்தை வாங்கும்பொழுது நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அதிகம் சுளையில்லாத , பழுக்காத காய்களை இலாபத்திற்காகக் கடைக்காரர்கள் நம் தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் முள்நாறிப் பழம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும். வேளாண் துறையின் வளர்ச்சியால், தற்பொழுது முள்நாறிப் பழங்கள் வருடத்திற்கு இரு முறை காய்க்கின்றன .

பழத்தை உடைக்கும் முறை

[தொகு]
பழத்தை உடைக்கும் முறை

முள்நாறிப் பழத்தை உடைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு கலை. அதனால், மக்கள் பொதுவாகப் பழத்தை உடைத்து விற்கும் கடைக்காரர்களிடமே பழத்தை வாங்க விரும்புகின்றனர். பெரும்பாலான முள்நாறிப் பழம் விற்பவர்கள், மக்கள் விருப்பத்திற்கேற்ப பழத்தை உடைத்தும் உடைக்காமலும் விற்கின்றனர். உடைத்து விற்பது என்பதை உடைத்துப் பையில் போட்டுத் தருவார்களென எண்ணிவிடக் கூடாது. மாறாக அப்பழத்தின் மேற்புறத்தில் கூரிய கத்தியால் இரண்டு கோடுகள் போட்டு அதன் மேலோட்டை இலேசாக நெம்பி, உள்ளே உள்ள சுளைகள் சிறிது தெரியும்படித் தருவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பழத்தை வாங்குபவர் வீட்டிற்குச் சென்று பழத்தை முழுமையாகப் பிளப்பதற்கு ஏதுவாக இருக்கும். முள்நாறிப் பழத்தை உடைத்தவுடன் சில மணி நேரத்திற்குள் உண்டுவிட வேண்டும். இல்லையெனில் அப்பழத்தின் முழுமையான சுவையை நாம் உணர முடியாமல் போய்விடும் .

முள்நாறிப் பழத்தைத் தாங்களாகவே உடைக்க நினைப்பவர்கள் மிகவும் கவனமாகப் பழத்தையும் கத்தியையும் கையாள வேண்டும். இப்பழத்தை மற்ற பழங்களைப் போன்று உடைக்க முடியாது. இப்பழத்தில் காம்பின் நேர் அடிப்பாகத்தில் சுழியைப் போன்று ஒரு வட்டம் இருக்கும். அதற்கு நேராகக் கூர்மையான கத்தியையோ இரும்பையோ குத்தி நெம்புவதன் மூலம், பழம் பல பகுதிகளாக உடைந்து, திறந்து கொள்ளும். இதன்மூலம் உள்ளே இருக்கும் சுளையை சுவைக்க முடியும். முள்நாறிப் பழத்தின் கொட்டை மிகவும் கடினமானது. எனவே அதனை உண்ண முடியாது.

முள்ளில்லா முள்நாறிப் பழம்

[தொகு]

தற்பொழுது சந்தைகளில் முள்ளில்லா முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகைப் பழங்கள் இயற்கையாகவே முள்ளின்றி உருவாவதில்லை. மாறாக இவை காயாகும் முன்னரே அதில் உள்ள முட்கள் மனிதர்களால் நீக்கப்படுவதால் அவை முட்களின்றிக் காட்சியளிக்கின்றன. மேலும், இயல்பாக முட்கள் இல்லாமல் உருவாகின்ற பழங்கள் இன்னும் சந்தைகளுக்கு வரவில்லை. இவ்வகைப் பழங்கள் D172 எனும் இரகத்தை சேர்ந்தது. இது மலேசிய வேளாண்மைத் துறையினரால், 17 ஜூன் 1989 -அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இப்பழத்தை மலாய் மொழியில் டுரியான் போதக் என அழைக்கின்றனர். இதன் பொருள் 'மொட்டை முள்நாறிப் பழம்' என்பதாகும். இப்பழ வகை மலேசியா ,ஜொகூர் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது .

இந்தோனேசிய முள்நாறி வகைகள்

[தொகு]

முள்நாறிப் பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்தோனேசியாவில் மட்டும் இதன் 55 வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 38 வகையினங்கள் மிக அரியவையாகும்.[5] பொதுவாகக் காணப்படுவன:

  • 'காபு ' - விளைவிடங்கள்: புஞ்சு, கேடிரி, கீழைச் சாவகம்
  • 'ஹெப்பே' - மெல்லிய விதையும் சதைப்பற்றும் கொண்டது
  • 'கெலுட்' - விளைவிடங்கள்: புஞ்சு, கேடிரி, கீழைச் சாவகம்
  • 'லிகித்' - குத்தாயி
  • 'மாவார்' - விளைவிடம்: லொங் குத்தாயி
  • 'ரிப்தோ' - விளைவிடம்: திரெங்காலெஃ மாவட்டம்
  • 'சாலிசுன்' - விளைவிடம்: நுனுக்கான் மாவட்டம்
  • 'செலாத்' - விளைவிடங்கள்: ஜாலுக்கோ, முவாரோ ஜம்பி மாவட்டம்
  • 'செமெமாங்' - விளைவிடம்: பஞ்சார்நெகாரா மாவட்டம்
  • 'தோங் மெடாயே' - விளைவிடங்கள்: லொம்பொஃ தீவு, மேற்கு நுசா தெங்காரா
  • 'பெந்தாரா' - விளைவிடங்கள்: கெர்காப், வடக்கு பெங்குலு மாவட்டம்
  • 'பிடோ வொனோசாலாம்' - விளைவிடங்கள்: ஜொம்பாங் மாவட்டம், கீழைச் சாவகம்
  • 'பெர்விரா' - விளைவிடங்கள்: சிம்பெயுள், மஜாலெங்கா மாவட்டம்
  • 'பெத்ருஃ' - விளைவிடங்கள்: ரண்டுசாரி, ஜெப்பாரா மாவட்டம், நடுச் சாவகம்[6]
  • 'சோயா' - விளைவிடங்கள்: அம்பொன் தீவு, மலுக்கு
  • 'சுக்குன்' - மெல்லிய விதையும் சதைப்பற்றும் கொண்டது
  • 'சுனான்' - விளைவிடம்: பொயொளாளி
  • 'கனி' ("சனீ", பாங்கொக் முள்நாறி)
  • 'ஒத்தொங்' (இதுவே துரியான் "மொந்தொங்" எனப்படுகிறது. பெரும்பாலும் தாய்லாந்தில் விளைகிறது. மலேசியாவில் இது D159 எனக் குறிக்கப்படுகிறது)
  • 'புருங்'
  • 'டலித்'
  • 'அலாவு'
  • 'ரோயல் புரூணை'
  • 'அஞ்சுங் லிமா'
  • 'தெனோம் பியூட்டி'
  • 'ராடென் மாஸ் ஆயு'
  • 'வைரக்கோன்'

இந்தோனேசியாவுக்கு வெளியே பொதுவாக மலேசியாவில் உள்ள முள்நாறிப் பழத்தின் வேளாண் உருவாக்க ரகங்கள் அனைத்தும் D என்கின்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறிப் பழத்தின் புகழ் பெற்ற இரகங்கள் ஆகும்.

முள்நாறி மரத்தின் மொட்டுகள் பகல் நேரத்தில் முடிய நிலையில் இருக்கும் .

ஏற்றுமதி

[தொகு]

முள்நாறிப் பழம் தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. தென்கிழக்காசியாவிலிருந்து முள்நாறிப் பழம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முதன்மை வகிக்கின்றது. தென்கிழக்காசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் முள்நாறிப் பழம் விளைகின்றது.

மகரந்தச் சேர்க்கை

[தொகு]

முள்நாறி மரத்தில்அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இம்மரத்தின் அயல் மகரந்தச் சேர்க்கை இரவில் தேன் உண்ணும் வௌவால்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இம்மரத்தின் பூ மொட்டுகள் பகல் பொழுதில் மூடியே இருக்கும்.

பண்பாடு

[தொகு]
தடை

உலகில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத வகை வாசனையை (சிலருக்கு வாசம்; சிலருக்கோ நாற்றம்) முள்நாறிப்பழம் கொண்டிருப்பதால் சிங்கப்பூர் தொடருந்துகளில் இப்பழத்தை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 500 வெள்ளி தண்டம் விதிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் உள்ள சில தங்கு விடுதிகளிலும் இப்பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Durio L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-03-12. பார்க்கப்பட்ட நாள் 2010-02-16.
  2. Brown, Michael J. (1997). Durio — A Bibliographic Review. International Plant Genetic Resources Institute (IPGRI). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-9043-318-3. {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. McElroy, Anne and Townsend, Patricia K. (2003). Medical Anthropology in Ecological Perspective. Westview Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-3821-2.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Heaton, Donald D. (2006). A Consumers Guide on World Fruit. BookSurge Publishing. pp. 54–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4196-3955-2.
  5. Uji, T. 2005. Keanekaragaman Jenis dan Sumber Plasma Nutfah Durio (Durio spp.) di Indonesia பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம். Buletin Plasma Nutfah 11:28-33.
  6. "Durian Petruk". IPTEKnet BPPT. Archived from the original on 2009-12-31. பார்க்கப்பட்ட நாள் 2009-12-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்நாறி&oldid=3568209" இலிருந்து மீள்விக்கப்பட்டது