உள்ளடக்கத்துக்குச் செல்

இருவித்திலைத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருவித்திலைத் தாவரம்
மக்னோலியா தாவரத்தின் பூ
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மக்னோலியோப்சிடா

ஒழுங்கு

கட்டுரையைப் பார்க்க.

முதிர்ந்த இலைகளினின்றும் வேறுபட்டுத் தெரியும் இரட்டை வித்திலைகளைத் தெளிவாகக் காட்டும் ஆமணக்கு மர நாற்று

இருவித்திலைத் தாவரம் அல்லது இருவித்திலையி (Dicotyledon) என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட பூக்கும் தாவரக் குலமொன்றைச் சேர்ந்த தாவரமாகும். இக்குலத்தில் சுமார் 199,350 சிறப்பினங்கள் இருக்கின்றன [1] இவற்றில் பல காக்கப்பட வேண்டியன ஆகும்.[2] . இருவித்திலைத் தாவரங்கள் அல்லாத பிற பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத் தாவரங்கள் ஆகும். இவை தமது வித்துக்களில் ஒரு வித்திலையைக் கொண்டிருக்கின்றன.

வகைப்பாட்டியல்

[தொகு]

பழைய மரபுப்படி, இவை வகைப்பாட்டின் எந்த நிலையில் கருதப்பட்டாலும், இருவித்திலைத் தாவரங்கள் (அல்லது டைகோட்டிலெடோனியே) என அழைக்கப்பட்டன. குரொன்குயிஸ்ட் முறைமையில் உள்ளதுபோல இக் குலத்தை ஒரு வகுப்பாகக் கருதினால், இது, மக்னோலியோப்சிடா என அழைக்கப்பட்டது. சில முறைமைகளில் எடிகாட்ஸ், ரோசோப்சிடா (இன வகை ரோசா) எனும் தனியான வகுப்பாக அல்லது தனியான பல வகுப்புக்களாகக் கருதப்பட்டது.

தற்போது, இருவித்திலைத் தாவரக் குலத்தை ஒரு முறையான குலமாக எடுத்துக்கொள்வது இல்லை. வகைப்பாட்டியல் குறித்த தேவைகளுக்காவது இருவித்திலைத் தாவரம், இருவித்திலையி போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படா. எனினும் பழைய இருவித்திலைத் தாவரக் குலத்தில் காணப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் எடிகாட்ஸ் எனப்படும். ஒற்றைமரபுக் குலமொன்றை உருவாக்குகின்றன. இவற்றை, இவற்றின் மகரந்தத் தூள்களின் அமைப்பைக் கொண்டு ஏனைய தாவரங்களிலிருந்து பிரித்தறிய முடியும்.

தாவரவுலகம் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும் இரண்டு பெரும் பகுதிகளுடையன. பாசி, பூஞ்சாணம், பெரணி ஆகிய தாவர வகைகளில் பூ என்று சாதாரணமாகச் சொல்லும் உறுப்பைக் காண்பதில்லை. இவை பூவாத் தாவரங்கள். இவற்றைத் தாழ் தாவரங்கள் என்பது முண்டு. மற்ற மரம் முதலியவை யெல்லாம் பூக்குந் தாவரங்கள். இவற்றில் விதை என்று சாமானியமாகச் சொல்லும் உறுப்பும் காணப்படும். ஆதலால் பூத்தாவரங்களை விதைத் தாவரங்கள் என்றும் சொல்வர். இவற்றை உயர் தாவரங்கள் என்பதும் உண்டு.

ஒரு விதையிலை

[தொகு]

விதைத் தாவரங்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்றில் விதையானது சூலிலையாலான கனியாகிய உறைக்குள்ளே மூடப்பட்டிருக்கும். இந்தப் பிரிவு ஆஞ்சியோஸ்பெர்ம் (கிரேக்கச் சொல் : ஆங்கையான் - உறை அல்லது பை ; ஸ்பெர்மா - விதை) அல்லது உறையுடை, விதை அல்லது மூடு விதைத்தாவரம் எனப்படும். மற்றொரு பிரிவு பைன் மரங்களும், சைகஸ் சாதிமரங்களும் அடங்கிய ஜிம்னோஸ்பெர்ம் (ஜிம்னோ-ஆடையில்லாத, வெறுமையான) அல்லது உறையிலா விதை அல்லது மூடா விதைத்தாவரம் என்பது. இந்தப் பிரிவில் சூலிலைகளின் விளிம்பில் அல்லது மேலே விதைகள் இருக்கும். சாதாரணமாக நம்மைச் சுற்றிலும் காணும் புல்லும், பூண்டும், மரமும், செடியும், கொடியும் மூடு விதைத் தாவரங்கள். இவற்றில் இரண்டு வகுப்புக்கள் உண்டு. புல், சோளம், அரிசி, வெண்காயம் முதலியவை ஒரு வகுப்பு. இவற்றின் விதையில் ஒரே ஒரு விதையிலையிருக்கும். இவை மானோகாட்டிலிடன் (மானோ - ஒன்று; காட்டிலிடன் - விதையிலை) என்னும் வகுப்பினத்தைச் சார்ந்தன.

இரட்டை விதையிலை

[தொகு]

மற்ற வகுப்பு, சாதாரணமாக எங்கெங்கும் காணும் பூக்குந் தாவரங்கள் அடங்கியது டைகாட்டிலிடன் (டை - இரண்டு) அல்லது இரட்டை விதையிலை வகுப்பு எனப்படும். இந்தப் பெயர் இவ்வகுப்பின் எல்லா இனங்களிலும் காணும் ஒரு பண்பைக் குறிக்கிறது. இவற்றின் விதையில் இரண்டு விதையிலைகள் உண்டு. அவரை, கடலை, துவரை, ஆமணக்கு, புளி முதலியவற்றின் விதைகளையும் அவை முளைப்பதையும் எல்லோரும் பார்த்திருப்பார்கள். விதையிலிருந்து முளைக்கும் சிறு நாற்றுக்கு ஆதாரமான உணவுப் பொருள், மா, எண்ணெய், புரோட்டீன் ஆகிய உருவத்தில் விதையிலைகளைச் சுற்றிலும், முளைசூழ். தசையாக ஆமணக்கில் போல விதைகளிலே சேமித்து வைக்கப்பட்டிருக்கும்; அல்லது அந்த உணவுப் பொருள் அவரை, துவரையிற்போல விதையிலைகளிலேயே அடங்கியிருக்கும். அப்போது இவ்விதையிலைகள் தடித்துப் பருப்பாகக் காணும். விதை முளைக்கும் போது முளைவேரானது ஆணிவேர் அல்லது தாய் வேராக வளர்ந்து, பூமிக்குள் நேரே கீழ்நோக்கி வளரும். அதிலிருந்து பக்க வேர்கள் கிளைக்கும். விதையிலைகள் அவரை ஆமணக்கிற் போல நிலத்துக்குமேலே வந்தாலும் வரும். அல்லது கடலை, பட்டாணியிற் போல நிலத்தினுள்ளேயே இருந்து விடலாம். விதையிலைகள் மேலே வருமானால் அவற்றிலுள்ள உணவுப் பொருளெல்லாம் செலவாகி, நாற்றுச் சற்று வளர்ந்தவுடன் அவை வெறும் பைபோலச் சுருங்கி உதிர்ந்து விடலாம். அல்லது ஆமணக்கிற் போல அவை முதலில் முளைசூழ் தசையிலுள்ள உணவுப் பொருளைக் கரைத்துச் செரிமானம் செய்து, வளரும் நாற்றுக்கு உதவிப் பிறகு மேலே வந்து சாதாரணப் பச்சையிலையாக மாறி ஒளிச்சேர்க்கைத் தொழில் செய்து, நாற்றுக்குச் சிலகாலம் உதவி வரலாம். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் முளைவேர் தாய் வேராக வளர்வதில்லை. அது சிறிது வளர்ந்து, பிறகு குன்றிப் பட்டுப்போகும். தண்டின் அடியிலிருந்து பல வேர்கள் புதியனவாகத் தோன்றி நார்போல் வளரும்.

வகைமை

[தொகு]

இரட்டை விதையிலைத் தாவரங்கள் பலவகையாக வளர்கின்றன. சில மிகச்சிறிய பூண்டுகள் ; சில மிகப் பெரிய மரங்கள் ; சில ஒரு பருவமே உயிர் வாழும் ; சில பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும். இவ்வகுப்புத் தாவரங்களின் உள்ளமைப்பிலும் சில சிறப்பான பண்புகளைக் காணலாம். நீரையும் உணவையும் உடலின் பல பாகங்களுக்குக் கொண்டு செல்லும் குழாய்த்திசு முடிச்சுக்கள் இளந்தண்டிலே நடுவிலிருக்கும் உட்சோற்றைச் சுற்றி வட்டமாகத் தனித்தனியே அமைந்திருக்கும். பிறகு இவை ஒன்றுசேர்ந்து ஒரு வளையமாக ஆகிவிடும். சூட்புறத்தில் நீரைக்கொண்டுபோகும் சைலம் என்னும் உட்குழாய்த் திசுவும், வெளிப்புறத்தில் உணவைக் கொண்டுபோகும் புளோயம் என்னும் சல்லடைக் குழாய்த் திசுவும், இரண்டுக்கும் இடையே காம்பியம் என்னும் வளர்படைத் திசுவும் இருக்கும். இவ்வகுப்பைச் சேர்ந்த பலபருவத் தாவரங்களிலே, தண்டானது ஆண்டுதோறும் ஒழுங்காகப் பருத்துக்கொண்டே போகிறது. முதல் ஆண்டில் உண்டான உட்குழாய்த் திசு வளையத்திற்குப் புறத்தில் மற்றொரு வளையம் உண்டாகும். இவ்வாறு ஆண்டுக்கொரு வளையமாக வளர்ந்து கொண்டே போகும். தண்டின் விட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். ஒற்றை விதையிலைத் தாவரங்களாகிய தென்னை, பனை, மூங்கில் முதலியவற்றின் தண்டுகளில் குழாய்த் திசு முடிச்சுக்கள் வட்டமாக அமையாமல் உட்சோற்றில் சிதறியிருப்பதுபோலக் காணும். தண்டின் விட்டம் பெரிதாகாமல் சற்றேறக்குறைய நெடுக ஒரே அளவாக இருக்கும். இரட்டை விதையிலைத் தாவரங்களில் தண்டு பருத்துக்கொண்டு போவதுபோல வேரும் பருத்துக்கொண்டு போகும். இப்படித் தண்டும் வேரும் பருப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு பருவத்திலும் புதிய கிளைகளும் இலைகளும் உண்டாகிக்கொண்டே போகும். அதனால் மொத்த இலைப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது. இலைகளிலுள்ள நரம்புகளின் அமைப்பிலும் இரட்டை விதையிலைத் தாவரங்களில் ஒரு சிறப்பைக் காணலாம். ஒற்றைவிதையிலைத் தாவரங்களின் இலைகளில் புல் அல்லது வாழையிற்போல முக்கிய நரம்புகள் ஒருபோகாக அமைந்திருக்கும். இரட்டை விதையிலைத் தாவர இலைகளில் நரம்புகள் வலைபோல அமைந்திருக்கும். இந்த வலையமைப்பை அரசிலை முதலியவை நீரில் விழுந்து மட்கிப் போயிருப்பவற்றில் மிக நன்றாகக் காணலாம். இரட்டை விதையிலைத் தாவரங்களின் பூவின் அமைப்பிலும் வேறுபாடு காணலாம். பூவின் உறுப்புக்கள் பொதுவாக வட்டத்திற்கு ஐந்தாக அமைந்திருக்கின்றன; அல்லது 10, 15 என்று ஐந்தின் மடங்குகளாக இருக்கின்றன. சாதாரணமாக 5 புற விதழ்கள், 5 அகவிதழ்கள், 5 அல்லது இரண்டு வட்டங்களாக அமைந்த 10 கேசரங்கள், 5 அல்லது அதற்குக் குறைந்த எண்ணிக்கையுள்ள சூலிலைகள் இருக்கும். வட்டத்திற்கு நான்கு உறுப்புக்களாக அமைந்துள்ளன.

புதிய வகைப்பாடு

[தொகு]


பின்வரும் பட்டியல், இருவித்திலைக் குலத்தினுள் முன்னர் சேர்க்கப்பட்டிருந்த தாவர ஒழுங்குகளையும், ஏபிஜி மற்றும் குரோன்குயிஸ்ட் முறைமைகளில் அவற்றின் புதிய இடங்களையும் காட்டுகிறது.

ஏபிஜி II குரொன்குயிஸ்ட் முறைமை

ஆம்போரலேசியே (Amborellaceae)

குளோரந்தேசியே (Chloranthaceae)

நிம்பயேசியே (Nymphaeaceae) [+ கபொம்பேசியே (Cabombaceae)]

ஆஸ்த்ரோபைலயேலஸ் (Austrobaileyales)

செராதொபைலேலஸ் (Ceratophyllales)

மக்னோலியிட்ஸ் (magnoliids)
eudicots

Note: "+ ..." = optional segregrate family, that may be split off from the preceding family.

மக்னோலியோப்சிடா

Magnoliidae (mostly basal dicots)

Hamamelidae

Caryophyllidae

Dilleniidae

Rosidae

Asteridae

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hamilton, Alan; Hamilton, Patrick (2006), Plant conservation: An ecosystem approach, London: Earthscan, p. 2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84407-083-1
  2. https://www.iucnredlist.org/search?query=dicots&searchType=species

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவித்திலைத்_தாவரம்&oldid=2867548" இலிருந்து மீள்விக்கப்பட்டது