கார்போவைதரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலில் காணப்படும் லக்ட்டோசு எனப்படும் இரட்டைச்சர்க்கரை வேதியியல் வடிவம்

கார்போவைதரேட்டு (carbohydrate, கார்போஹைட்ரேட்) என்பது ஆறு முக்கிய ஊட்டக்கூறு வகைகளில் பெருமளவில் காணப்படும் வகையாகும். இது கார்பன், ஐதரசன், ஆக்சிசன் ஆகிய மூலக்கூறுகளை மட்டும் கொண்ட வேதிப்பொருள் ஆகும். நீர் மூலக்கூற்றில் இருப்பதுபோல் பொதுவாக இவற்றிலும் ஐதரசன், ஆக்சிசன் மூலக்கூறுகளுக்கிடையிலான விகிதம் 2:1 ஆக இருக்கும். அதாவது இவற்றின் வேதியியல் வாய்ப்பாடானது பொதுவாக Cn(H2O)n என்பதாக அமையும். ஆனால் சில விதிவிலக்குகளும் உண்டு. வேதியியல் அடிப்படையில் காபோவைதரேட்டுக்கள் ஐதரொக்சைல் கூட்டங்கள் சேர்க்கப்பட்ட அல்டிகைட்டுக்கள் அல்லது கீட்டோன்கள் வகையைச் சேர்ந்த எளிமையான கரிமச் சேர்வைகள் ஆகும். இந்த ஐதரொக்சைல் கூட்டங்கள், பொதுவாக கீட்டோன் அல்லது அல்டிகைட்டுச் செயற்பாட்டுக் கூட்டத்தின் பகுதியாக அமையாத கரிம அணு ஒவ்வொன்றிற்கும் ஒன்று வீதம் இணைக்கப்பட்டு இருக்கும்.

காபோவைதரேட்டுக்கள் உயிரினங்களில் பல பங்குகளை வகிக்கின்றன. ஆற்றலைச் சேமித்தல் (மாப்பொருள், கிளைக்கோசன் வடிவில்), அமைப்புக் கூறுகளாக இருத்தல் (தாவரங்களில் செலுலோசு, விலங்குகளில் கைட்டின் வடிவில்) என்பன இவற்றுள் அடங்குகின்றன. மேலும் காபோவைதரேட்டுக்களும் அவற்றிலிருந்து பெறப்படும் வேறு பொருட்களும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, கருக்கட்டல், தொற்றுநோய்கள் தோன்றும் பொறிமுறையை தடுத்தல், குருதி உறைதல், விருத்தி போன்ற செயற்பாடுகளிலும் பெரும் பங்கு வகிக்கின்றன[1].

வகைப்பாடு[தொகு]

காபோவைதரேட்டுக்களின் வகைப்பாடு

அடிப்படையான காபோவைதரேட்டு அலகுகள் ஒற்றைச்சர்க்கரைகள் எனப்படுகின்றன. காபோவைதரேட்டு என்பது பொதுவாக சர்க்கரை அல்லது சர்க்கரைட்டுக்களுக்கு உயிர்வேதியியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதமாகும். இவை காபோவைதரேட்டுக்களின் மிக எளிய மூலக்கூறுகளும், அடிப்படை மூலக்கூறுகளுமான ஒற்றைச்சர்க்கரைகள், இரட்டைச்சர்க்கரைகள், சிலசர்க்கரைகள் (Oligosaccharides), கூட்டுச்சர்க்கரைகள் (பல்சர்க்கரைகள்) என்னும் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. ஒற்றைச்சர்க்கரைகளில் குளுக்கோசு, ஃப்ரக்டோசு (Fructose), காலக்டோசு, சைலோசு (Xylose), ரைபோசு என்னும் வகைகளும், இரட்டைச்சர்க்கரைகளில் மால்ட்டோசு (Maltose), சுக்குரோசு (Sucrose), லாக்டோசு (Lactose) என்னும் வகைகளும், கூட்டுச்சக்கரைகளில் மாப்பொருள், கிளைக்கோசன், செலுலோசு, கைட்டின் போன்றனவும் அடங்குகின்றன.

ஒற்றைச்சர்க்கரைகள் எண்ணற்ற வழிகளில் இணைந்து கூட்டுச்சர்க்கரைகள் உருவாகின்றன. பொதுவாக 10 க்கு உட்பட்ட எளிய ஒற்றைச்சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டிருக்கையில் அவை சிலசர்க்கரைகள் அல்லது ஒலிகோசர்க்கரைகள் என அழைக்கப்படுகின்றன.

ஒற்றைச்சர்க்கரைகளும், இரட்டைச்சர்க்கரைகளும் சீனி அல்லது சர்க்கரை என பொது வழக்கில் அழைக்கப்படுகின்றன[2]. மாற்றப்படாத ஒற்றைச்சக்கரைகளின் பொதுச் சூத்திரம் (CH2O)n. இங்கே n மூன்றுக்கு மேற்பட்ட எந்தவொரு எண்ணாகவும் இருக்கலாம். எனினும் எல்லா ஒற்றைச்சக்கரைகளும் இச் சூத்திரத்துக்குள் அடங்கும் என்றோ, இச் சூத்திரத்துள் அடங்கும் எல்லாமே ஒற்றைச்சக்கரைகள் என்றோ கூற முடியாது. எடுத்துக் காட்டாக, இச் சூத்திரத்தினின்றும் சிறிது வேறுபடுகின்ற மூலக்கூறுகள் பலவும் காபோவைதரேட்டுகள் என அழைக்கப்படுவதையும், இதே மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் கொண்ட போமல்டிகைட்டு போன்றவை காபோவைதரேட்டுக்கள் அல்ல என்பதையும் குறிப்பிடலாம்.

ஊட்டச்சத்து[தொகு]

தானியங்களும் அவற்றிலிருந்து பெறப்படும் உணவுகளும் காபோவைதரேட்டு அதிகமுள்ள உணவுகளாக உள்ளன

அரிசி, கோதுமை போன்ற பல தானிய வகைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றில் காபோவைதரேட்டு அதிகளவில் காணப்படும். காபோவைதரேட்டு ஒரு அத்தியாவசியமான ஊட்டக்கூறாக இல்லாமல் இருப்பினும், உயிரினங்களின் ஆற்றல் உருவாக்கத்தில் காபோவைதரேட்டே முக்கிய பங்கு வகிக்கின்றது.[3].

கார்போஹைட்ரேட் வாழும் உயிரினங்களின் ஒரு பொதுவான ஆற்றல் மூலமாக இருக்கிறது.எனினும் கார்போஹைட்ரேட் மனிதர்களில் முக்கிய ஊட்டச்சத்தாக இருப்பதில்லை.மனிதர்கள் புரதம் மற்றும் கொழுப்பில் இருந்தே தங்கள் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்துகொள்ளலாம். கார்போஹைட்ரேட் மிக குறைந்த அளவு கொண்ட உணவு பொருட்களை அதிகமாக உண்ணும் போது இரத்ததில் கீற்றோன் அளவு அதிகரிக்கின்றது.இதுவே வகை 1 எனப்படும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.

மூளை செல்கள் மற்றும் நரம்புகள் அதன் நேரடி சக்தி ஆதாரமாக கொழுப்பு அமிலங்களை பயன்படுத்த முடியவில்லை.கொழுப்பு அமிலங்கள் மூளை இரத்த அடுக்கை கடக்க முடிவதில்லை ஆதலால் மூளை செல்கள் அவற்றின் சக்தி ஆதாரமாக குளுக்கோஸ் மற்றும் கீற்றோன் பயன்படுத்துகிறது. எனினும் உயிரினங்கள் பொதுவாக அனைத்து கார்போஹைட்ரேட்களையும் ஆற்றலாக பயன்படுத்த முடியாது.எனினும் குளுக்கோஸ் கிட்டத்தட்ட பெரும்பாலான உயிரினங்களிலும் ஆதாரமாக உள்ளது.இருப்பினும் சில உயிரினங்களில் மோனோசாக்கரைடுகளில் மற்றும் டைசாக்கரைடுகள் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படுத்தும் திறனை கொண்டுள்ளன. இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆபத்துகள் இருப்பதால் அமெரிக்க மற்றும் கனேடிய மருத்துவ கல்வி நிலையம் பெரியவர்கள் தங்கள் அன்றாட உணவில் 45-65 % வரையிலும்,உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு கூட்டாக கார்போஹைட்ரேதிலிருந்து கிடைக்கும் மொத்த ஆற்றல் 55-75 % வரையிலும் இருக்கலாம் என பரிந்துரைக்கிறது.


காபோவைதரேட்டு அடங்கியிருப்பதை சோதித்தல்[தொகு]

எளிய வெல்லத்தைப் பரிசோதித்தல்[தொகு]

பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது அரைத்து தெளிவான கரைசலை வடித்தெடுத்த பின் நீல நிறமான பெனடிக்ரின் கரைசலை /fehling's solution சேர்த்து வெப்பப்படுத்தும் போது செங்கட்டிச் சிவப்பு நிற வீழ்படிவு கிடைக்குமாயின் அது எளிய வெல்லமாகும்.

கரைசல் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறுமாயின் சிறிதளவு குளுக்கோசு அடங்கியிருப்பதாகப் பொருளாகும்.

மாப்பொருளைப் பரிசோதித்தல்[தொகு]

பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது அரைத்து எடுக்கப்பட்டுஅதை வெள்ளைப்பீங்கான் ஒன்றின் மீது வைத்து அயடீன் கரைசலின் (கபில நிறம்)சில துளிகளை இடும் போது உணவுப் பொருள் கருநீல நிறமாக மாறும்.

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maton, Anthea; Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பக். 52–59. ISBN 0-13-981176-1. 
  2. Flitsch, Sabine L.; Ulijn, Rein V (2003). "Sugars tied to the spot". Nature 421 (6920): 219–20. doi:10.1038/421219a. பப்மெட் 12529622. 
  3. Westman, EC (2002). "Is dietary carbohydrate essential for human nutrition?". The American journal of clinical nutrition 75 (5): 951–3; author reply 953–4. பப்மெட் 11976176. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போவைதரேட்டு&oldid=2045183" இருந்து மீள்விக்கப்பட்டது