இப்றாகீம் பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்றாகீம் பாசா
ஆளுநர், எகிப்து, சூடான், பலஸ்தீன், சிரியா, ஹிஜாஸ், மூரியா, தாசூசு, கிறீற்று
ஆட்சிமார்ச்சு 2, 1848 – நவம்பர் 10, 1848
முன்னிருந்தவர்முகம்மது அலீ பாசா
பின்வந்தவர்முதலாம் அப்பாஸ் ஹில்மி
மனைவிகள்
  • கதீஜா
  • சிவெகியார்
  • ஹோசியார்
  • உல்பித்
  • கல்சார்
  • சஆரித்
வாரிசு(கள்)முகம்மது பெய்
இசுமாஈல் பாசா
அகுமத் ரிபாஅத்
முசுதபா பகுஜத் அலீ பாழில்
அரபுإبراهيم باشا
துருக்கியம்Kavalalı İbrahim Paşa
அரச குலம்முகம்மது அலீ மரபு
தந்தைமுகம்மது அலீ பாசா (கருதப்படுகிறது)
தாய்அமீனா நுசுரத் அலீ (கருதப்படுகிறது)
அடக்கம்நவம்பர் 10, 1848
(அவரது இறப்பிலிருந்து 11 மணி நேரத்தில்)
இமாம் சாபிஈ அவர்களின் அடக்கத்தலம், இசுலாமிய கெய்ரோ, எகிப்து

இப்றாகீம் பாசா (1789 – நவம்பர் 10, 1848) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து நாட்டுத் தளபதி ஆவார். அவர் எகிப்தின் முகம்மது அலீயின் மகனாகவே நன்கறியப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய இளம்பிள்ளைப் பருவத்திலேயே எகிப்தியப் படைகளின் கட்டளைத் தளபதியானார். பின்னர் அவர் எகிப்து, சூடான், பலஸ்தீன், சிரியா, ஹிஜாஸ், மூரியா, தாசூசு, கிறீற்று ஆகிய பகுதிகளுக்கான உதுமானியப் பேரரசின் ஆளுநராகப் பதவி வகித்தார். 1848 நவம்பர் 10 முதல் அவர் தனது தந்தையின் அரச பிரதிநிதியாகவும் பதவி வகித்தார்.

தொடக்க காலம்[தொகு]

இப்றாகீம் பாசாவின் சிறு பராயம் பற்றித் தெளிவாக அறியப்படவில்லை. கிரேக்க நாட்டின் திராமா நகரில் கிறித்தவப் பெண்ணொருவருக்குப் பிறந்த அவர் அல்பானிய இனத்தவரான முகம்மது அலீ பாசாவினால் தத்தெடுக்கப்பட்ட மகன் எனச் சில வேளைகளில் கருதப்படுகிறது.[1] அந்த வகையில், அவரது தாயார் முகம்மது அலீ பாசாவை மணந்ததாகவும், அதன் காரணமாக அப்பெண்ணின் பிள்ளையை அவர் தனது பிள்ளையாகத் தத்தெடுத்ததாகவும் உதுமானிய கலாசாரம் மற்றும் இசுலாமிய நம்பிக்கை என்பவற்றில் அவரை வளரத்ததாகவும் கருதப்படுகிறது. முஸ்லிமல்லாத பெற்றோரின் பிள்ளையாகக் கூறப்படும் செய்தி, இப்றாகீம் பாசாவினால் இழிவு படுத்தப்பட்ட பிரெஞ்சு தூதுவரின் கட்டுக்கதையாக இருக்கலாம்.[2]

பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம் யாதெனில், அவர் 1789 ஆம் ஆண்டு பிறந்தார் என்பதும், அவர் முகம்மது அலீ பாசாவின் முதல் மனைவி மூலம் (இரண்டாவது பிள்ளையாக) அவருக்குப் பிறந்த அவரது சொந்த மகன் என்பதுமாகும்.[3] மேலும் அவர் உதுமானியப் பேரரசின் ருமேலியா மாகாணத்தில், தற்போதைய கிரேக்க நாட்டின் மசெடோனியா பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பிறந்தார் என்றும் அறியப்படுகிறது.

1805 ஆம் ஆண்டு அவரது தந்தை முகம்மது அலீ பாசா எகிப்தின் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடிய போது கட்டிளங் காளையான இப்றாகீம் பாசா தன்னுடைய பதினாறாம் அகவையில் உதுமானியப் பேரரசின் கைதியாக அனுப்பப்பட்டிருந்தார். எனினும் முகம்மது அலீ பாசா தலைவராக அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் பிரித்தானியப் படைத் தளபதி அலெக்சாண்டர் மெக்கன்சீ பிரேசர் எகிப்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்த பின்னர், இப்றாகீம் பாசா எகிப்துக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார்.

1813 ஆம் ஆண்டு முகம்மது அலீ பாசா சவூதி மரபினருக்கு எதிராகப் போரிட அரேபியாவுக்குச் சென்றிருந்த வேளை, இப்றாகீம் பாசா மேலை எகிப்து பகுதியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு ஆட்சியை இழந்திருந்த மம்லூக்கியருடன் போரிட்டு அவர்களை ஒடுக்கினார். பின்னர் 1816 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய சகோதரர் தூசுன் பாசாவின் பின்னர் அரேபியாவில் போரிட்ட எகிப்தியப் படைகளுக்குத் தலைமை தாங்கினார்.

சவூதிய மரபினருக்கு எதிரான நடவடிக்கைகள்[தொகு]

முகம்மது அலீ பாசா தன்னுடைய படையினருக்கு ஐரோப்பிய பாணி வழிநடத்தலை அறிமுகப்படுத்தியிருந்தார். இப்றாகீம் பாசாவும் அதே பயிற்சியைப் பெற்றிருக்கலாம். எனினும், அவரது முதலாவது படை நடவடிக்கையானது அவரது பிந்திய நடவடிக்கைகளை விட மிகக் கூடுதலாக ஆசியப் பாணியையே கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் நீடித்த அப்படை நடவடிக்கை சவூதிய மரபினரின் அரசியல் அதிகாரத்தை முறிப்பதில் முடிவடைந்தது. முகம்மது அலீ பாசா மதீனாவின் துறைமுகப் பட்டினமான யன்புஊவில் 1813 ஆம் ஆண்டு தரையிறங்கினார். புனித நகரங்கள் சவூதியினரிடமிருந்து ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தமையால் அவர்களை நஜ்து பாலைவனத்தில் சந்திப்பதுடன் அவர்களது கோட்டையை அழிப்பதே இப்றாகீம் பாசாவின் வேலையாக இருந்தது. எகிப்தியப் படையினர் பெற்றுக்கொண்டிருந்து பயிற்சிகளும் அவர்தம் பீரங்கிகளும் திறந்த வெளிப் போர்க்களங்களில் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க உயர்வை அளித்தன. மதீனாவின் கிழக்கில் 400 மைல் தூரத்திற்கு அப்பால் திரியா பகுதியில் அமைந்திருந்த சவூதி மரபினரின் கோட்டையை அடைவதற்காகப் பாலைவனத்தைத் தாண்டுவது, வெற்றியை மிகக் கடினமானதாக ஆக்கியது. இப்றாகீம் பாசா தன்னுடைய இராணுவத்தின் துயரங்களையெல்லாம் கருத்திற் கொண்டு அவர்கள் தோல்வி கண்டு துவளாதிருக்க, மிக்க வல்லமையோடும் உறுதியோடும் போராடினார். 1818 செப்டெம்பர் மாத இறுதியில் சவூதியத் தலைவர் அப்துல்லாஹ் பின் சவூத் என்பவரை அடிபணிய வைத்ததுடன் திரியா நகரைக் கைக்கொண்டார்.

மூரியாவில் படை நடவடிக்கைகள்[தொகு]

இப்றாகீம் பாசா தன்னுடைய தந்தை முகம்மது அலீ பாசா மற்றும் கர்னல் சேவே (சுலைமான் பாசா, வலது) ஆகியோருடன்.

1819 டிசம்பர் 11 அன்று அவர் பெரும் வெற்றி வீரராக கெய்ரோ மாநகருக்குத் திரும்பினார். அவரது மீள் வருகையின் பின்னர், ஐரோப்பிய பாணியில் தன்னுடைய இராணுவத்தைப் பழக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த பிரெஞ்சுக்காரரான கர்னல் சேவே (சுலைமான் பாசா) என்பவருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவர் தானே அதில் சேர்ந்து ஏனைய படையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 1824 இல் முகம்மது அலீ பாசா உதுமானிய இரண்டாம் மஹ்மூத் கிரேக்க நாட்டின் தென்பகுதியில் பெலோபொன் குடாநாட்டை உள்ளடக்கிய மூரியா பகுதியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது எழுச்சியடைந்திருந்த கிரேக்கப் புரட்சிக்கு எதிராக, தன்னுடைய படைகள் ஏற்கனவே தோற்றுவிட்டிருந்த நிலையில் சுல்தான் இரண்டாம் மஹ்மூத் நன்கு பயிற்றப்பட்ட எகிப்திய இராணுவத்தின் உதவி தேவைப்பட்டவராக இருந்தார். 1822 ஆம் ஆண்டு, கிரேக்கர்கள் இப்றாகீம் பாசாவின் மைத்துனரான மஹ்மூத் திராமலி பாசாவின் தலைமையிலான 30,000 பேர் கொண்ட படையை மிகத் திறமையாகத் தோற்கடித்திருந்தனர்.

17000 பேர் கொண்ட இராணுவத்துடன் பெலோபொன் பகுதிக்கு இப்றாகீம் பாசா அனுப்பப்பட்டிருந்தார். 1824 யூலை 4 அன்று புறப்பட்ட அவரது படையினர் பல மாதங்களாக ரோட்சு மற்றும் கிறீற்று தீவுகளுக்கிடையே வெறுமனே பயணிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதிருந்தனர். கிரேக்க தீக்கப்பல்கள் பற்றிய அச்சம் அவரை மூரியாவை அண்டவிடாமல் செய்திருந்தது. கிரேக்க மாலுமிகள் சம்பளம் தொடர்பாகக் கலகம் செய்த வேளை, இப்றாகீம் பாசா மோடொன் பகுதியில் 1825 பெப்ரவரி 26 அன்று தரையிறங்கினார். மேற்கத்திய சக்திகளால் 1828 ஒக்டோபர் 1 அன்று அவரை வலுக்கட்டாயமாகச் சரணடையச் செய்யும்வரை இப்றாகீம் பாசா மூரியாவிலேயே தங்கியிருந்தார்.

அவர் கிரேக்கர்களைத் திறந்தவெளிப் போர்க்களங்களில் தோற்கடித்தார். மெசோலொங்கி நகர் மீதான முற்றுகை அவரது சொந்தப் படைகளுக்கும் அவருடன் சேர்ந்து செயற்பட்ட உதுமானியப் பேரரசின் படைகளுக்கும் இழப்பு மிக்கதாய் இருந்த போதிலும் அவர் அம்முற்றுகையை 1824 ஏப்ரல் 24 இல் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்தார். கிரேக்க கெரில்லா படையணிகள் அவரது இராணுவத்தைப் பல இடங்களிலும் வழி மறித்தன. அதற்குப் பழிவாங்கும் முகமாக அவர் அந்நாட்டை அழித்து அதன் ஆயிரக்கணக்கான குடிமக்களை எகிப்துக்கு அடிமைகளாக அனுப்பினார். இவ்வாறான அடக்குமுறை ஐரோப்பியரிடையே பரந்த அனுதாபத்தைத் தோற்றுவித்ததுடன் ஐக்கிய இராச்சியம், புனரமைக்கப்பட்ட பிரெஞ்சு இராச்சியம் மற்றும் உருசியப் பேரரசு என்பவற்றின் கடற்படையணிகள் 1827 ஒக்டோபர் 20 இல் இப்றாகீம் பாசாவை நவரினோ போர் முனையில் சந்திக்க வைத்தது. பிரெஞ்சுப் படைகள் மூரியாவில் தரையிறங்கிய பின்னரே அவர் வெற்றிகொள்ளப்பட்டார். 1828 ஒக்டோபர் 1 ஆம் திகதிய சரணடைதல் ஒப்பந்தப்படி இப்றாகீம் பாசா அந்நாட்டை விட்டு வெளியேறினார்.

சிரியாவில் படைநடவடிக்கைகள்[தொகு]

வேர்செயில்சு அரண்மனையின் பிரெஞ்சு வரலாற்று நூதனசாலையில் வைப்பதற்காக பிரான்சின் லூயி பிலிப்பு 1846 ஆம் ஆண்டில் வரைவித்த இப்றாகீம் பாசாவின் ஓவியம்.

1831 ஆம் ஆண்டு, அவரது தந்தையார் உதுமானியப் பேரரசின் ஆட்சியாளருடன் முரண்பட்டுக்கொண்டதால், இப்றாகீம் பாசா சிரியாவைக் கைப்பற்றுவதற்காகப் படையுடன் அனுப்பப்பட்டார். அவர் 1832 மே 27 அன்று கடுமையான முற்றுகையின் பின்னர் அக்ரி நகரையும், பின்னர் அதே ஆண்டு யூலை 8 அன்று உதுமானியப் படையை முறியடித்து திமிஷ்கு நகரையும், யூலை 29 அன்று உதுமானியரின் மற்றொரு படையை முறியடித்து பைலான் பகுதியையும், பின்னர் சின்னாசியாவையும் ஆக்கிரமித்ததுடன், இறுதியாக அவ்வாண்டு டிசம்பர் 21 அன்று கோன்யா போரில் முதன்மை ஆளுநர் ராசித் முகம்மது பாசாவை வென்று துரத்தியடித்தார். சிரியாவில் அவர் உமர் தால் என்ற சன்னியாசியைச் சந்தித்ததாகவும் அச்சன்னியாசி இப்றாகீம் பாசாவின் மகன் கண்டிருந்த கடுமையான காய்ச்சலைச் சுகப்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது. பின்னர் உமர் தால் என்ற அச்சன்னியாசி இப்றாகீம் பாசாவின் ஆதரவாளராகி, இன்றைய நைஜீரியாவிலுள்ள சொகோட்டோ நகருக்குத் திரும்பி அவரது வழிகாட்டலைப் பின்பற்றத் தொடங்கினார். பிற்காலத்தில் அவர் இன்றைய கினியா, செனெகல் மற்றும் மாலி ஆகிய நாடுகளை உள்ளிட்ட பகுதியின் முதன்மைத் தளபதியானார்.

அடுத்த ஆண்டு கூதாகியா மாநாட்டின் முடிவுகளின்படி சிரியா நாடு சிலகாலம் முகம்மது அலீ பாசாவின் ஆதிக்கத்திலேயே இருந்தது. அக்காலத்தில் இப்றாகீம் பாசா தன்னுடைய படையில் பணியாற்றிய கர்னல் சேவே மற்றும் ஏனைய ஐரோப்பியருக்கு மிக்க உதவி புரிந்தார். 1832, 1833 ஆம் ஆண்டுகளின் படை நடவடிக்கைகளின் பின்னர் இப்றாகீம் பாசா சிரியாவின் ஆளுநராகப் பதவி வகித்தார். அவர் எவ்வளவு திறம்பட ஆட்சி செய்த போதிலும், அவரது தந்தையாரின் கட்டளைகளை நிறைவேற்றுமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவரது அதிகாரம் வலுவிழந்ததுடன் அவரது ஆட்சியிலிருந்த மக்கள் கலகம் செய்யத் தொடங்கினர்.[4]

1838 ஆம் ஆண்டு, உதுமானியப் பேரரசு தன் வலிமையைக் கூட்டிக்கொண்டு மீண்டுமொருமுறை அவர் மீது போர் தொடுத்தது. 1839 யூன் 24 அன்று நிசிப் பகுதியில் இடம்பெற்ற போரில் இப்றாகீம் பாசா உதுமானியப் படைகளை வெற்றி கொண்டார். அதுவே போர்க்களங்களில் அவர் கண்ட இறுதி வெற்றியாகும். உதுமானியப் பேரரசின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமெனக் கூறி ஐக்கிய இராச்சியமும் அவுசுதிரியப் பேரரசும் அதில் தலையிட்டன. அவர்களின் படையணிகள் இப்றாகீம் பாசாவை எகிப்துடன் கடல் வழியாகத் தொடர்புபடுவதிலிருந்து தடுத்துவிட்டன. அதனால், சிரியாவில் ஏற்பட்ட புரட்சி அவரை 1841 ஆம் ஆண்டு அந்நாட்டை விட்டு வெளியேறச் செய்தது.

கடைசிக் காலம்[தொகு]

இப்றாகீம் பாசா தன்னுடைய வாழ்வின் எஞ்சிய பகுதியை அமைதியாகக் கழித்த போதிலும் அவரது உடற்சுகம் குன்றத் தொடங்கியது. 1846 ஆம் ஆண்டு அவர் மேற்கு ஐரோப்பாவிற்குப் பயணித்தபோது அங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அவரது தந்தையார் மனநிலை பாதிக்கப்பட்டபோது இப்றாகீம் பாசா எகிப்தின் பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1846 யூலை மாதம் முதல் 1848 நவம்பர் 10 ஆம் திகதி அவர் இறக்கும் வரை இப்றாகீம் பாசா தன்னுடைய பதவியில் நிலைத்திருந்தார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Maravelea, G.A.: "Sketch of the 1821 Revolution", Gamma Editions, Salonika 1959
  2. http://books.google.com/books?id=pzIaAQAAIAAJ&pg=PA348#v=onepage&q=&f=false
  3. http://books.google.com/books?id=N9klAAAAMAAJ&pg=PA58#v=onepage&q=&f=false
  4. An occasion for war: civil conflict in Lebanon and Damascus in 1860 by Leila Tarazi Fawaz p.114

உசாத்துணை[தொகு]

See Edouard Gouin, L'Egypte au XIX' siècle (Paris, 1847); Aimé Vingtrinier, Soliman-Basha (Colonel Sève) (Paris, 1886). A great deal of unpublished material of the highest interest with regard to Ibrahim's personality and his system in Syria is preserved in the British Foreign Office archives; for references to these see Cambridge Mod. Hist. x. 852, bibliography to chap. xvii.

வெளித் தொடுப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ibrahim Pasha of Egypt
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
முகம்மது அலீ பாசா
ஆளுநர், எகிப்து மற்றும் சூடான்
1848
பின்னர்
முதலாம் அப்பாஸ் ஹில்மி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்றாகீம்_பாசா&oldid=3766086" இலிருந்து மீள்விக்கப்பட்டது