சுயஸ் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுயஸ் கால்வாய்
{{{alt}}}
Original owner Suez Canal Company (Compagnie Universelle du Canal Maritime de Suez)
Principal engineer ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்
Construction began 25 ஏப்ரல் 1859
Date of first use 17/02/1867
Date completed நவம்பர் 1869
Locks ஏதுமில்லை
Status திறந்தது
Navigation authority Suez Canal Authority

சுயஸ் கால்வாய் (அரபு மொழி: قناة السويس Qanāt al-Sūwais) எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்[1] இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.

ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது.

சுருக்கமான வரலாறு[தொகு]

மிகப்பழைமையானது சூயஸ் கால்வாய். பண்டைய எகிப்தின் பாரோக்கள் ஆட்சிக்காலத்திலேயே பல நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டு இரு கடல்களை இணைக்கும் கால்வாய் வெட்டப்பட்டது. பிற்கால முகமதிய தளபதி ஆம்ரு எகிப்தை வென்ற பின்னர் இதிலிருந்த மணலை வெளியே அகற்றி பல மராமத்துப் பணிகள் செய்து ஏறக்குறைய அதன் அமைப்பை முழுமையாக மாற்றினார். அதன்பின் அதிகம் யாரும் இந்தக் கால்வாய் மீது கவனம் செலுத்தவில்லை. துருக்கி சுல்தானின் வைசிராயாக இருந்த எகிப்தைச் சேர்ந்த கேதிவ் இஸ்மாயில் பிரெஞ்சு நாட்டின் ஆலோசனையில் பிரெஞ்சு மூலதனத்தில் உருவாக்கியதே தற்போதைய கால்வாய். பாலைவனம் வழியே செல்வதால் திரும்பத் திரும்ப மண் சேர்ந்துவிடுவதே இந்தக் கால்வாயின் குறை[2]

வரலாறு[தொகு]

நைல் - செங்கடல் கால்வாய்[தொகு]

பண்டைய கிழக்கு-மேற்குக் கால்வாய்கள் நைல் நதிக்கும் செங்கடலுக்குமிடையிலான போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. எகிப்திய அரசர்களான இரண்டாம் செனுஸ்ரெட் அல்லது இரண்டாம் ரமெசெஸ் காலத்தில் ஒரு சிறிய கால்வாய் அமைக்கப்பட்டதாக நம்பப்ப்டுகின்றது. இதன் பகுதியை உள்ளடக்கியதாகக் கருதப்படும் மேலும் ஒரு கால்வாய் இரண்டாம் நெக்கோ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டு தரியஸ் மன்னன் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

பழைய எகிப்திய நகரங்களான புபாஸ்டிஸ், பை-ரமெசெஸ், பைத்தோம் என்பவற்றூடான கால்வாய் ஒன்றின் எச்சங்கள் நெப்போலியன் மற்றும் அவனது குழுவினரால் 1799இல் கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றாளர் எரோடோட்டசின் வரலாற்றுக் குறிப்புகளின் படி, ஏறத்தாழ கி.மு. 600 அளவில் புபாஸ்டிஸ் மற்றும் பைத்தோம் இடையே கிழக்கு-மேற்குக் கால்வாய் வெட்டும் பணி இரண்டாம் நெக்கோ மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இத்திட்டத்தை நெக்கோ மன்னன் பூர்த்தி செய்யவில்லை. நெக்கோவின் மறைவையடுத்து இக்கால்வாய் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. பண்டைய எகிப்தை வெற்றி கொண்ட பேர்சிய மன்னன் முதலாம் தரியசினால் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது.

சுயஸ் கால்வாய் நிறுவனத்தின் பணி[தொகு]

1854-1856 காலப்பகுதியில் பிரான்சைச் சேர்ந்த ஃபேர்டினன்ட் டி லெஸ்ஸெப்ஸ் என்பவர் சர்வதேசக் கப்பற் போக்குவரத்துக்காகக் கால்வாய் ஒன்றை அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எகிப்து மற்றும் சூடான் ஆட்சியாளரான முகமது சையத் பாஷாவிடமிருந்து அனுமதியப் பெற்றார். இவர் 1830களில் பிரெஞ்சு அரச அதிகாரியாக இருந்தபோது சையத் பாஷாவுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பு இதற்கு உதவியாக அமைந்தது. இதன்படி, இந்நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்புடையது. இவ்வொப்பந்தத்திற்கு அமைவாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சுயஸ் நிலப்பகுதியை வெட்டிக் கால்வாய் அமைப்பதற்கான சர்வதேச ஆணையகம் கூட்டப்பட்டது. இது ஏழு நாடுகளைச் சேர்ந்த 13 நிபுணர்களைக் கொண்டிருந்தது. இந்நிபுணர் குழு கால்வாய் அமைத்தல் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்ட அறிக்கையை 1856 டிசம்பரில் தயாரித்தது. இதன் பின்னர் சுயஸ் கால்வாய் நிறுவனம் 1858 டிசம்பர் 15இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் அமைக்கும் பணி 1859 ஏப்ரல் 25இல் ஆரம்பிக்கப்பட்டது. கால்வாய் வெட்டும் பணி சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது.

கால்வாய் அமைப்பு[தொகு]

இந்தக் கால்வாய் சுமார் 20 மீட்டர் (66 அடி) வரையான நீரில் அமிழும் உயரம் அல்லது 240,000 இறந்தநிறைத் தொன் வரையான எடையும், 68 மீட்டர் (223 அடி) வரையான உயரமும், 77.5 மீட்டர் (254 அடி) வரையான அதிகபட்ச அகலமும் கொண்ட கப்பல்கள் பயணிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இக்கால்வாயூடாக பனாமா கால்வாயூடாகப் பயணிக்கக் கூடியதை விட பெரிய கப்பல்கள் பயணிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் சில மிகப்பெரிய கப்பல்கள் இக்கால்வாயூடாகப் பயணிக்க முடியாது. சில கப்பல்கள் பயணிக்க ஏதுவான முறையில் எடையைக் குறைக்கும் பொருட்டு, கால்வாய் நுழைவிடத்தில் கால்வாய்க்குச் சொந்தமான படகுகளில் தமது பொதிகளை இறக்கிவிட்டுக் கால்வாயூடாகப் பயணித்து மீண்டும் கால்வாய் முடிவிடத்தில் பொதிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன.

பொதுவாக ஒரு நாளில் மூன்று கப்பற்றொகுதிகள் இக்கால்வாயைக் கடக்கின்றன. இவற்றில் ஒரு தொகுதி வடக்கு நோக்கியும் இரண்டு தொகுதிகள் தெற்கு நோக்கியும் பயணிக்கின்றன. இவை ஏறத்தாழ மணிக்கு 8 கடல்மைல் (மணிக்கு 15 கி.மீ) வேகத்தில் பயணிக்கின்றன. கால்வாயைக் கடக்கும் பயண நேரம் சுமார் 11 முதல் 16 மணித்தியாலங்கள் ஆகும். கப்பல்கள் குறைந்த வேகத்தில் பயணிப்பது கால்வாயின் கரைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது.

இக்கால்வாய் சிறியதாக இருப்பதால் சுதந்திரமான இருவழிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.

மாற்று வழிகள்[தொகு]

வட கடலூடான வழியையும் (நீலம்) சுயஸ் கால்வாயூடான வழியையும் (சிகப்பு) காட்டும் வரைபடம்

சுயஸ் கால்வாய்க்கு பிரதான மாற்று வழியாக ஆபிரிக்காவின் தென் முனையான கேப் அகுலாஸ் ஊடான கடல் மார்க்கம் விளங்குகின்றது. சுயஸ் கால்வாய் அமைப்பதற்கு முன்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான ஒரேயொரு கடல்மார்க்கமாக இதுவே விளங்கியது. கால்வாயூடாகப் பயணிக்க முடியாதளவு பெரிய கப்பல்களுக்கான பாதையாக இப்பொழுதும் இதுவே விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சம் காரணமாக சுயஸ் காலவாயூடான கப்பற் போக்குவரத்தில் ஏறத்தாழ 10% இவ்வழியைப் பயன்படுத்தின. சவுதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு எண்ணெய்க் கப்பல் சுயஸ் கால்வாயைப் பயன்படுத்தாமல் இவ்வழியைப் பயன்படுத்தினால் 2,700 மைல்கள் (4,345 கி.மீ) அதிகமாகப் பயணிக்க வேண்டும்.

அண்மைக் காலமாக ஆர்க்டிக் பெருங்கடலில் பனிமூடிய பகுதி சுருங்க ஆரம்பித்ததிலிருந்து, கோடைகாலத்தில் 6 முதல் 8 வார காலப்பகுதிக்கு வட கடலூடாக ஐரோப்பாவிலிருந்து கிழக்காசியாவுக்கான கப்பற் போக்குவரத்து நடைபெறுவது சாத்தியமாயிற்று. இது சுயஸ் கால்வாயூடான பயணத்தை விட பல்லாயிரம் மைல்கள் குறைவான தூரத்தைக் கொண்டது.

நெகெவ் பாலைவனத்தினூடாக ஒரு புகையிரதப் பாதையை அமைக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

சூழலில் ஏற்பட்ட தாக்கம்[தொகு]

சுயஸ் கால்வாயின் தோற்றம், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையில் முதலாவது உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரைக்கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையிலான நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும் கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது. செங்கடலானது அத்திலாந்திக் பெருங்கடலை விட உவரானதாகவும் வளங்குறைந்ததாகவும் காணப்படுவதால் இங்கிருந்து உயிரினங்கள் இதே தன்மையான மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்குப் பரவ ஆரம்பித்தன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 93
  2. எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 98
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயஸ்_கால்வாய்&oldid=2225833" இருந்து மீள்விக்கப்பட்டது