உள்ளடக்கத்துக்குச் செல்

ஐயப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அய்யப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐயப்பன்
ஐயப்பன்
அதிபதிவளத்தின் கடவுள்
எழுத்து முறைஅய்யப்பன்
வகைஇந்து கடவுள்
இடம்சபரிமலை
மந்திரம்சுவாமியே சரணம் ஐயப்பா
ஆயுதம்வில்–அம்பு, வாள்
பெற்றோர்கள்சிவன், மோகினி (விஷ்ணுவின் அவதாரம்)
வாகனம்புலி, யானை, குதிரை
விழாக்கள்மண்டல பூசை, மகர விளக்கு

ஐயப்பன் (Ayyappan) அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் ஆகியோரின் மகனாகவும் அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாகவும் கருதப்படுகிறார்.

ஐயப்பன் வில் மற்றும் அம்புகளை ஏந்தியபடி, புலியின் அருகில் அல்லது சவாரி செய்யும் ஒரு இளைஞனாக சித்தரிக்கப்படுகிறார். ஐய்யப்பனின் பெரும்பாலான உருவப்படங்கள் அவரை யோகா பட்டாசனத்தில், அமர்ந்த நிலையில் சித்தரிக்கின்றன.

பெயர்கள் மற்றும் சொற்பிறப்பியல்

[தொகு]
ஐயப்பன் அமர்ந்த யோக நிலையில் இருக்கும் ஓவியம்

ஐயப்பன் (அய்யப்பன்) என்பது "அய்யன்" மற்றும் "அப்பன்" என்பதிலிருந்து உருவானது, இரண்டுமே "தந்தை" என்று பொருள்படும் மற்றும் மூலப் பெயர்கள் முறையே விஷ்ணு மற்றும் சிவன் ஆகியவற்றைக் குறிக்கலாம்.[1] ஒரு மாற்றுக் கோட்பாடு அதை மலையாளம் வார்த்தையான அச்சன் மற்றும் தமிழ் வார்த்தையான அப்பா ஆகிய இரண்டும் "தந்தை" என்று பொருள்படும், அய்யப்பன் "இறைவன்-தந்தை" என்பதைக் குறிக்கிறது.[2][3] "சாஸ்தா" என்ற மாற்றுப் பெயரால் இந்த முன்மொழிவு ஆதரிக்கப்படுகிறது. இது வேத காலச் சொல்லாகும், இது ஆசிரியர் அல்லது வழிகாட்டி என்றும் பொருள்படும்.[3] இருப்பினும், ஐயப்பன் என்ற சொல் இடைக்காலத்தில் புராணங்களில் காணப்படவில்லை, அதே சமயம் இந்துக் கடவுள் என்ற பொருளில் "சாஸ்தா" மற்றும் "தர்மசாஸ்தா" என்ற சொற்கள் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[4] அய்யப்பன் "ஹரிஹரசுதன்" (அரிகரசுதன்) என்றும் அழைக்கப்படுகிறார், அதாவது "ஹரி" மற்றும் "ஹர" ஆகியவற்றின் இணைவு தெய்வம், இது முறையே விஷ்ணு மற்றும் சிவனுக்கு வழங்கப்படும் பெயர்கள்.[5] அவர் "மணிகண்டா" என்றும் (சமஸ்கிருதத்தில் கழுத்தில் விலையுயர்ந்த கல்லை அணிபவர்) அழைக்கப்படுகிறரர்.[5] பூதநாதன், பூலோகநாதன், எருமேலிவாசன், கலியுகவரதன், பந்தள ராஜன், பம்பாவாசன், சபரிவாசன், சபரிகிரீசன் என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

உருவப்படம்

[தொகு]

ஐயப்பன் ஒரு போர்வீரர் தெய்வம் மற்றும் தர்மம், நெறிமுறை மற்றும் சரியான வாழ்க்கை முறை பின்பற்றுதல், துணிச்சலான போர் திறன்களை பயன்படுத்தி சக்தி வாய்ந்த ஆனால் நெறிமுறையற்ற, தவறான மற்றும் தன்னிச்சையானவர்களை அழிக்க பயன்படுத்துகிறார். அவரது துறவற பக்திக்காக மதிக்கப்படுகிறார். அவர் பொதுவாக பிரம்மச்சாரி இளைஞனாக வில்–அம்பு கொண்டு புலி வாகனத்தில் சவாரி செய்யும்படி சித்தரிக்கப்படுகிறார்.[6] சில பிரதிநிதித்துவங்களில், அவர் தனது இடது கையில் உயர்த்தப்பட்ட வில்லைப் பிடித்திருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அவரது வலது கையில் ஒரு அம்பு அல்லது வாளை அவரது இடது தொடையில் குறுக்காக வைக்கப்பட்டுள்ளது.[7]ஐயப்பனின் மற்ற உருவப்படங்களில் பொதுவாக அவர் கழுத்தில் மணியை அணிந்த யோக தோரணையில் காட்சியளிக்கிறார். இலங்கை போன்ற சில பிரதிநிதித்துவங்களில், அவர் யானை அல்லது குதிரை சவாரி செய்வதாகக் காட்டப்படுகிறார்.[8]

இறையியல் மற்றும் வரலாறு

[தொகு]

ஐயப்பனின் புராணக்கதை காலப்போக்கில் உருவான ஒரு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், பிராந்தியங்களில் வேறுபடுகிறது. ஸ்ரீபூதநாத புராணம் ஐயப்பன் சிவன் மற்றும் மோகினியின் மகனான ஹரிஹரபுத்திரனின் அவதாரமாக குறிப்பிடப்படுகிறார். சிவனுக்கும் மோகினிக்கும் இடையிலான இந்த தொடர்பு பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஐயப்பன் பெயர் குறிப்பிடப்படவில்லை.[9]

மலையாள நாட்டுப்புறப் பாடல்களின்படி, ஐயப்பன் பந்தள அரசின் ஒரு போர்வீரனாகக் காட்டப்படுகிறார். அரச குடும்பம் குழந்தையில்லாமல் இருந்த சமயம் பந்தள அரசர் காட்டில் ஓர் ஆண் குழந்தையை கண்டெடுக்கிறார். மன்னன் சிறுவனுக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு, ஒரு துறவியின் ஆலோசனையின் பேரில் தனது சொந்த மகனாக வளர்த்தார். மணிகண்டருக்கு 12 வயதாக இருந்தபோது, ​​அவரை வாரிசாக முறைப்படி பட்டாபிஷேகம் செய்ய மன்னர் விரும்பினார். இருப்பினும், ராணி அதை எதிர்த்தார், தனது இளைய உயிரியல் குழந்தைக்கு ஆதரவாக இருந்தார். ராணி ஒரு நோயைக் காட்டி, தனது நோயைக் குணப்படுத்த ஒரு புலியின் பால் கேட்டு, அதைப் பெற மணிகண்டனை அனுப்புமாறு கோரினாள். மணிகண்டன் காட்டிற்குச் செல்கிறான், அங்கு அவன் அரக்கி மகிஷியை எதிர்கொள்கிறான், அவளை கொன்றுவிட்டு புலியின் மீது ஏறித் திரும்புகிறான். மணிகண்டனின் சிறப்புத் திறனை உணர்ந்த மன்னன் அவனை ஒரு தெய்வீகப் பிறவி என்று அங்கீகரித்து அவனுக்காக ஒரு சன்னதியை உருவாக்கத் தீர்மானித்தான். மணிகண்டன் ஐயப்பனாக மாறி, சன்னதிக்கான இடத்தைக் குறிக்க அம்பு எய்கிறார்.[10][11] [12] சில பதிப்புகளில், அவர் குழந்தை இல்லாத அரச தம்பதிகளான ராஜசேகர பாண்டியன் மற்றும் கோப்பெருந்தேவி ஆகியோரால் வளர்க்கப்பட்டார், மேலும் ஒரு போர்வீரனாக வளர்ந்தார்.[13]

பிற்காலத்தில் ஐயப்பன் கதைகள் விரிவடைந்தது. அத்தகைய ஒரு பதிப்பு கிபி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வேர் கொண்டுள்ளது, அதில் ஐயப்பன் ஒரு தெய்வமாக பரிணமித்துள்ளார், அவர் கொள்ளையர்கள் போன்ற எதிரிகளிடமிருந்து வணிகர்களை பாதுகாக்கிறார். அவரது கோயில் மற்றும் பாரம்பரியம் தென்னிந்தியாவில் குற்றவாளிகள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்து, தர்ம வர்த்தக நடைமுறைகளை மீட்டெடுக்க உதவியது. மற்றொரு பதிப்பில், ஐயப்பன் ஒரு பூசாரியின் குழந்தையாக சித்தரிக்கப்படுகிறார், அவரது தந்தை ஒரு பயமுறுத்தும் கொள்ளைக்காரனான உதையணனால் கொலை செய்யபடுகிறார். உதயணன் ஒரு இளவரசியைக் கடத்திச் செல்கிறார், ஐயப்பன் துணிச்சலாக இளவரிசியை மீட்டு, அதே நேரத்தில் உதயணனனை கொல்லுகிறார். கதையின் மாறுபாட்டில், ஐயப்பன் முஸ்லீம் போர்வீரன் வாவருடன் சட்ட விரோதமான உதயணனுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்குகிறார், இது சபரிமலை யாத்திரை ஆரம்பிக்கும் முன் ஒரு மசூதி மற்றும் இந்து கோயிலில் வழிபடுவதற்கு அடிப்படையாக அமைகிறது.[14]

மகிசி அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்குக் காரணமான தேவர்களை வதைக்க மகிசி முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.[14] பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன்.[15][16]

வழிபாடு

[தொகு]

ஐயப்பன் சைவம், வைஷ்ணவம் மற்றும் சாக்தம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு இந்து மரபுகளை இணைக்கிறார்.[17] தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு குலதெய்வ வழிபாடு ஆகும்.[18]

அய்யப்பன் மீதான பக்தி முன்பு பரவலாக இருந்தபோதிலும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவரது புகழ் உயர்ந்தது.[19] தென்னிந்தியாவில் ஐயப்பன் கடவுளாக இருக்கும் பல கோயில்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஐயப்பன் சன்னதியானது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரளாவில் பம்பா நதி கரையில் இருக்கும் சபரிமலை, ஒரு பெரிய புனித யாத்திரை மையமாகும்.[20] பக்தர்கள் எளிமையான வாழ்க்கை, பிரம்மச்சரியம், சைவ உணவு அல்லது விரதம் மற்றும் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிவதன் மூலம் வாரங்களுக்கு முன்பே யாத்திரைக்கான தயாரிப்புகளைத் தொடங்குகிறார்கள். இந்த சடங்குகள் விரதம் என அழைக்கப்படுகின்றன, இது துளசி அல்லது ருத்ராக்ஷம் அணிவதன் மூலம் குறிக்கப்படுகிறது.[21][22] The pilgrims call each other by the same name Swami meaning "God".[22][23] பக்தர்கள் பம்பா நதியில் குளித்துவிட்டு, வெறுங்காலுடன் மலை உச்சிக்கு மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர்.[20]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Paul Williams; Anthony Tribe; Alexander Wynne (2012). Buddhist Thought: A Complete Introduction to the Indian Tradition. Routledge. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-52088-4.
 2. Mikhail Sergeevich Andronov (1996). A Grammar of the Malayalam Language in Historical Treatment. Otto Harrassowitz Verlag. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-03811-9.
 3. 3.0 3.1 Johannes Bronkhorst; Madhav Deshpande (1999). Aryan and non-Aryan in South Asia: evidence, interpretation, and ideology; proceedings of the International Seminar on Aryan and Non-Aryan in South Asia. Harvard University, Dept. of Sanskrit and Indian Studies. pp. 177–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-888789-04-1.
 4. Roshen Dalal (2010). The Religions of India: A Concise Guide to Nine Major Faiths. Penguin Books. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341517-6.
 5. 5.0 5.1 Jackson, Chris; Kozlowski, Frances (2013). Driven by the Divine: A Seven-Year Journey with Shivalinga Swamy and Vinnuacharya. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-45257-893-4.
 6. MN Srinivas (2002). Collected Essays. Oxford University Press. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-565174-4.
 7. Williams, Joanna Gottfried (1981). Kalādarśana: American Studies in the Art of India. Brill. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004064982.
 8. D. P. Dubey (1995). Pilgrimage Studies: Sacred Places, Sacred Traditions. SPS. pp. 136–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-900520-1-6.
 9. Goudriaan, Teun (1978). "The Māyā of the Gods: Mohini". Māyā divine and human. Motilal Banarsidass Publ. pp. 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2389-1.
 10. Denise Cush; Catherine A. Robinson; Michael York (2008). Encyclopedia of Hinduism. Routledge. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1267-0.
 11. Constance Jones; Ryan James (2014). Encyclopedia of Hinduism. Infobase Publishing. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5458-9.
 12. Devdutt Pattanaik (2014). Pashu: Animal Tales from Hindu Mythology. Penguin Books. pp. 109–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-692-0.
 13. Jeffery D. Long (2011). Historical Dictionary of Hinduism. Scarecrow Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7960-7.
 14. 14.0 14.1 Younger, Paul (2002). Playing Host to Deity: Festival Religion in the South Indian Tradition. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-195-14044-6.
 15. "சபரிமலை ஐயப்பன் வரலாறு". One India.
 16. "சபரிமலை பிறந்த கதை". Dinamalar.
 17. Eliza Kent (2013). Lines in Water: Religious Boundaries in South Asia. Syracuse University Press. pp. 80–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-5225-0.
 18. Pillai, V. Narayana (1939). "Śāsta Cult in Travancore. Is It a Relic of Buddhism ?". Proceedings of the Indian History Congress 3: 230–240. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44252378. 
 19. Chandra, Suresh (1998). Encyclopaedia of Hindu Gods and Goddesses. Sarup and Sons. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176250392.
 20. 20.0 20.1 Fred Clothey (1978). Bardwell L. Smith (ed.). Religion and the Legitimation of Power in South Asia. "Brit"LL Academic. pp. 3–9 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05674-2.
 21. Eliza Kent (2013). Lines in Water: Religious Boundaries in South Asia. Syracuse University Press. pp. 14–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-5225-0.
 22. 22.0 22.1 Diana L Eck (2012). India: A Sacred Geography. Random House. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-385-53191-7.
 23. E. Valentine Daniel (1987). Fluid Signs: Being a Person the Tamil Way. University of California Press. pp. 244–262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-06167-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயப்பன்&oldid=3888195" இலிருந்து மீள்விக்கப்பட்டது