ஐயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐயனார்

ஐயனார் என்பவர் தமிழ் நாட்டுப்புறக் காவல் தெய்வம் ஆவார். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக வழிபடுகின்றனர்.

தோற்றம்[தொகு]

இவர் இன்றைய இந்து மதத்தால் அறியப்படும் ஐயப்பன் ஆவார். பழந்தமிழர்களின் சமயக் கடவுள் ஆவார். இவர் கம்பீரமான தோற்றத்துடன் கையில் செண்டாயுதம் அரிவாள் வைத்திருப்பார். பெரிய பெரிய குதிரை சிலைகள் அய்யனார் கோவில்களில் இருக்கும். பொதுவாக வெட்டவெளியில், காட்டுக்குள் கோவில் அமைந்திருக்கும்.

வடிவம்[தொகு]

யானை மீது அமர்ந்திருக்கும் அய்யனார்

ஐயனார் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். இளைஞரைப் போன்றவர். கிரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடது காதில் குண்டலமும் அணிந்திருப்பார் மற்றும் கடவுளுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலது கையில் தண்டம் அல்லது செண்டு வைத்திருப்பார். இடது கையை இடது காலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் மீது வைத்துக்கொண்டு வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.

தேவியர் இருவர்[தொகு]

சிறப்பான காரண காரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். ஐயனார் அருகில் உள்ள கையில் மலர் அல்லது செண்டாயுதம் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.

பொற்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள், முழுமதி போன்றவள், என்று பொருளாகும்.

பரிவார தெய்வங்கள்[தொகு]

இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.

ஐயனாரின் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ பொந்துபுலி கருப்பசாமி, கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.

உணவு[தொகு]

ஐயனார் சைவ உணவான சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.

கோயில்[தொகு]

ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க் கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் அல்லது மடைகளுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் அல்லது காட்டிற்கு உள்ளே கோயில் இருக்கும். கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர்.

மடப்புரம் காளியம்மன்[தொகு]

ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கியபடி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.

கோயில் பூசாரி[தொகு]

பொதுவாக தமிழக கிராம காவல் தெய்வம் கோவில்களில் பூணூல் அணிந்த பிராமணர் பூஜை செய்வதில்லை, அந்தந்த கிராமங்களில் பரம்பரை பூசாரிகள் இருப்பார்கள். அவர்கள் அதிகபட்சம் வேளார் பட்டம் பெற்ற குயவர் இனத்தை சேர்த்தவராக இருப்பார். சில ஊர்களில் மிக சிறிய அளவில் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த வேறு சாதியினர் பூஜை செய்வார்.

திருவிழாக்கள்[தொகு]

சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.

எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு சிவராத்திரித் திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.

புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து திருவிழா அன்று மக்கள் அனைவரும் அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.

முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.

பிரசாதம்[தொகு]

ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமான நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.

காவலுக்குக் கருப்பர்[தொகு]

ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாள் அல்லது செண்டாயுதம் ஏந்தி வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.

ஐயனாரும் ஐயப்பனும்[தொகு]

சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதி சமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்[1].

ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.

ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.

அய்யனாரா? ஐயனாரா?[தொகு]

தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் சொற்கள் ஒவ்வொன்றும் சிறப்பு பெற்றுத் திகழ்கின்றன. எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.

"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.

ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும். "ய்" என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று = ½ அளவு
அய் = 1 + ½ = 1 ½ அளவு

"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஐயனை அறிந்து கொள்வோம், முனைவர் கி. காளைராசன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயனார்&oldid=3831173" இலிருந்து மீள்விக்கப்பட்டது