உள்ளடக்கத்துக்குச் செல்

வில்–அம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரலாற்றின் கலப்பு வில்லின், மரம் மற்றும் நார் கண்ணாடியாலான நவீன மீள்கட்டமைப்பு.

வில்லும் அம்பும், இவ்விரண்டும் ஒருங்கிணைந்து, எய்யும் ஆயுத அமைப்பாக அறியப்படுகின்றது. வில்வித்தை என்பது ஓர் அற்புதமான கலை மற்றும் திறமை ஆகும்.

விரிவுரை 

[தொகு]

வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றியக்க எறிகணையான அம்புகளை எய்ய உதவும் சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணை பின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணை விடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின் நிலையாற்றல், அம்பின் திசைவேகமாக மாறும்.[1] வில்லிலிருந்து அம்புகளை எய்யும் கலையை அல்லது விளையாட்டை, வில்வித்தை என்பர்.[2]

இன்று, வில்லும் அம்பும் பிரதானமாக வேட்டையாடுதலுக்கும் விளையாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வில்லை தயாரிப்பவரை வில்செய்வோன் (bowyer) எனலாம்,[3] அம்புகளை தயாரிப்பவரை அம்பன் (fletcher) எனலாம்[4] —அல்லது உலோக அம்புமுனைகளை தயாரிப்பவரை அம்புக்கொல்லன் எனவும் குறிப்பிடலாம்.[5]

வரலாறு

[தொகு]
பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிக்காபேயத்தில் (நவீன கெர்ச்சு), அம்பெய்யும் சாகர்கள்.

மேல் பழையகற்காலத்திற்கும் இடைகற்காலத்திற்கும் இடையில்தான் வில்லும் அம்பும் தோன்றின.

பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து வெடிமருந்தின் பரவலாக உபயோகத்துக்கு முன், வில் பழங்காலத்தில் ஒரு முக்கிய ஆயுதமாக வேட்டையிலும், போர்முனையிலும் இருந்தது.

அமைப்பு

[தொகு]

வில்லின் பாகங்கள் 

[தொகு]
வில்லின் பாகங்கள்.

வில்லின் அடிப்படைக் கூறில், இரு வளைந்த  இழுபடக்கூடிய கிளைகளை (பாரம்பரியமாக மரத்தில் செய்யப்படும்), இணைக்கும் வகையில் தண்டு இருக்கும். கிளைகளின் இரு முனைகளை இணைக்கும் நாரை/கம்பியை, நாண் என்பர்.[1] நாணை பின்னிழுப்பதன் மூலம், வில்லாளி அமுக்குவிசையை கிளைகளின் உட்புறத்திலும், இழுவிசையை கிளைகளின் வெளிப்புறத்திலும் ஒரே வேளையில் செலுத்துகிறார். நாணை இழுத்துப் பிடிக்கையில் சேமிக்கப்படும் ஆற்றல், அம்பை எய்கையில் வெளிப்படுக்கிறது.[citation needed] நாணை முழுமையாகவும் நிலையாகவும் இழுத்துப் பிடிக்க தேவைப்படும் விசையைத்தான், வில்லின் சக்தி என்பர்; இதை இழு-எடை என்றும் சொல்வர்.[6][7] இழு-எடை அதிகரிக்க, வில்லின் சக்தியும் அதிகரிக்கும், அதாவது அதைகொண்டு வழக்கமான அம்பை அதிக வேகத்துடனும், கனமான அம்பை வழக்கமான வேகத்தோடும் எய்ய முடியும்.

வில்லின் பாகங்கள் மேலும் துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இரு கிளைகளில், மேலுள்ளதை மேல்கிளை என்றும்; கீழுள்ளதை, கீழ்கிளை என்றும் குறிப்பிடுவர். ஒவ்வொரு கிளையின் முனையிலும், நாணை அதனுடன் இணைக்க நாண் பள்ளம் / குதை[8] இருக்கும். தண்டுப்பகுதியை, வில்லாளி வில்லை பிடிக்கும் இடமான பிடி, அம்பு மனை மற்றும் காண்குழி எனப் பிரிக்கலாம். அம்பு மனை என்பது, குறி வைக்கையில்அம்பைத் தாங்க, பிடிக்கு மேலுள்ள ஒரு சிறு விளிம்பு. தண்டின் பிடிக்கு மேலுள்ள, அம்பு மனையைக் கொண்ட பகுதியை காண்குழி என்பர்.[1]

கையால் இழுத்துப் பிடிக்கப்படும் வில்களில், அதிகபட்ச இழு-எடையை தீர்மானிப்பது வில்லாளியின் பலம்தான்.[7] எந்த அளவுக்கு நாணை பின்னிழுக்க முடிகிறதோ, அதற்கு நிகரான நீளம் கொண்ட அம்பை அதிலிருந்து எய்ய இயலும், வில்லாளியின் அளவைப் பொருத்துதான், வில்லின் இழு-நீளம்.[9]

ஒரு கலப்பு வில்லின் கிளைகளை உருவாக்க சில மூலப்பொருட்கள், கலவையாக பயன்படுத்தபடுகிறது. இதுதான் வில்லின் கிளைகளின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு சிறப்பு வாய்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்த வகைசெய்தது. பண்டைய கலப்பு வில்லில், பரிமாண நிலைத்தன்மைக்காக 'மரத்தை' உள்ளகமாகவும், 'கொம்பை' அழுத்த ஆற்றலை சேமிக்கவும், மற்றும் இழுவிசை ஆற்றலை சேமிக்கவல்ல தசைநார் ஆகியவற்றை பயன்படுத்தப்பட்டன. இத்தகைய வில்களில், கிளையின் முனை திடமாக இருப்பதால், வெளிவளை முனை போன்ற விளைவை அளிக்கும்.[10] இவ்வில்லின் அரபுப் பெயர் 'சியா' ஆகும்.[11]

நவீன வில்கள் பல்லடுக்கு மரம், கண்ணாடி இழை, உலோகங்கள்,[12] மற்றும் கரிம நார் போன்ற மூலபொருட்களால் ஆக்கபடுகின்றன.

அம்புகள் 

[தொகு]
அம்பின் பாகங்களின் வரைபடம்

பொதுவாக, ஒரு பக்கத்தில் அம்புமுனையும், மறுபக்கமத்தில் நிலைநிறுத்தி மற்றும் நாண் பள்ளமும் கொண்ட ஓர் எளிய கோல்தான்  அம்பு எனப்படுகிறது.[13] நவீன அம்புகள் கரிம நார், அலுமினியம், நார்க்கண்ணாடி மற்றும் மரத்தால் ஆனவை. கரிமத்தாலான கோல்கள் இலகுவாகும், வளையாமலும் இருக்கும், ஆனால் விலையுயர்ந்தது. அலுமினியத்தால் ஆன கோல்கள், கரிம கோல்களைவிட விலை மலிவானது, அனால் பயன்படுத்தும்போது வளையக்கூடும். மரத்தாலான கோல்கள்தான் மிகச் சிக்கனமான தேர்வாகும், அனால் இவை எப்போதும் ஒரே எடை மற்றும் அளவில் இருப்பதில்லை, மேலும் மற்ற கோல்களுடன் ஒப்பிடுகையில் எளிதில் உடையக்கூடியது.[14] கலச்சாரங்களை பொறுத்து அம்பின் நீளம் வேறுபடும். நவீன அம்புகளின் நீளம் 22 இன்ச் (56 செ.மீ.) முதல் 30 இன்ச் (76 செ.மீ.) வரை இருக்கும்.[13]

அம்புகள் பலவகைப்படும், அவற்றில் சில வெளிக்கூம்பு, உட்கூம்பு, இடைதடித்த அம்பு, நெடுந்தூர எய்தல் அம்பு, மற்றும் இலக்கு அம்பு ஆகும்.[13] வெளிக்கூம்பு அம்பு, நிலைநிருத்திகளுக்குப் பின்னால் மிகத் தடித்தும், பின் அம்புமுனையை நோக்கி படிப்படியாக அதன் தடிமன் குறையும்.[15] உட்கூம்பு அம்பு, அம்புமுனைக்குப் பின் மிக தடித்தும், நாண் பள்ளத்தை நோக்கி படிப்படியாக தடிமன் குறையும்.[16] இடைதடித்த அம்பு, நடுவில் மிகுதியாக தடித்திருக்கும்.[17] போர்/வேட்டை அல்லாது  இலக்கை தாக்க பயன்படும் அம்பை இலக்கு அம்பு என்பர். பொதுவாக இவை எளிய அம்புமுனைகளைக் கொண்டிருக்கும்.[18]

பாதுகாப்புக் காரணங்களுக்காக, அம்பைத் தொடுக்காமல், வெறும் நாணை எய்யக்கூடாது; அம்பில்லாமல் எய்கையில், வில்லின் ஆற்றல் முழுவதும் வில்லின் கிளைகையே தாக்கும். இது வில்லிற்கு சேதத்தை விளைவிக்கும்.

அம்புமுனைகள் 

[தொகு]
அம்புமுனைகளின் வகைகள்

இலக்கை தாக்க வடிவமைக்கப்பட்ட கூர்முனையையே அம்புமுனை என்பர். பொதுவாக, இவை கணைக்கோலின் பிடிகுழியுள் இணைக்கப்படும் தனி உருப்படி ஆகும். கடந்தகாலத்தில் தீக்கல், எலும்பு, கொம்பு அல்லது உலோகத்தை அம்புமுனைகளாக பயன்படுத்தப்பட்டன. பல நவீன அம்புமுனைகள் எஃகால் ஆனவை. மரம் மற்றும் இதர பாரம்பரிய பொருட்களால் ஆனவையும் இன்றும் அவ்வப்போது உபயோகப்படுத்தபடுகிறது. பற்பல அம்புமுனை வகைகள் உள்ளன, அதில் பொதுவானவை துளைக்கும்முனை (போட்கின் முனை), அகன்றமுனை, மற்றும் கணைமுனை.[19] துளைக்கும்முனை என்பது உலோகத்தால் ஆன கவசத்தை ஊடுருவுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஈட்டி போன்ற அமைப்புடையது.[16] பொதுவாக அகன்றமுனை முக்கோண அல்லது இலை வடிவம் கொண்ட கூரான வெட்டும் முனையுடன் இருக்கும். அகன்றமுனைகள் பொதுவாக வேட்டையாட பயன்படுத்தப்படும்.[20] கணைமுனை என்பது ஓர் எளிய கூரான/மழுங்கிய உலோகக் கூம்பை அம்பின் முனையின் மேலே பொருத்தியபடி இருக்கும். முக்கியமாக, இவ்வகை முனை குறி வைத்து இலக்கை சாய்க்கப் பயன்படும். கணைமுனையும் கணைக்கோலும் ஒரே விட்டத்தை கொண்டிருக்கும்.[21] இவைகளைத்தவிர இதர முனைகளும் உள்ளன, மழுங்கியமுனை என்பது இலக்கை துளைக்காமலும் பற்றிக்கொல்லாமலும் இருக்க, அம்புமுனை தட்டையாக   வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வகை முனைகள் விளையாட்டிற்கும் பறவைகளை வேட்டையாடவும் பயன்படும்.[16] மற்றொரு வகையான பற்முனை, பின்புறம் துரித்திகொண்டிருக்கும் பற்கள் உடையது. இதனால் தசைகளை ஊடுருவியப்பின் பிடுங்கி எடுக்கையில் தசையை கிழித்து மேலும் சேதத்தை உண்டாக்கும். இவ்வகை முனைகள் போர்களத்திலும் வேட்டையிலும் பயன்படுத்த பட்டது.[13]

நாண்கள் 

[தொகு]

நாண்களில், தொடுக்கும் புள்ளி குறிக்கப்பட்டிருக்கும், இப்புள்ளியில் இருந்துதான் அம்புகள் வில்லில் இருந்து ஏவப்படும்.[22] இப்பகுதி பொதுவாக, வில்லாளியின் விரல்களால் ஏற்படும் தேய்மானத்தை குறைக்க, நூல் சுற்றப்பட்டிருக்கும்.[23] நாணின் ஒரு முனையில் நிரந்தரமான சுருக்கு முடிச்சும், மறுமுனையில் தற்காலிக முடிச்சாக கட்டப்படும். பாரம்பரியமாக இந்த முடிச்சை வில்லாளியின் முடிச்சு என்பர், ஆனால் இது ஒரு உருளை முடிச்சு ஆகும். இந்த முடிச்சை சரிசெய்து நாணின் நீளத்தை மாற்ற இயலும்.

வகைகள்

[தொகு]
மரபுச் சின்னவியலில் வில்லும் அம்பும் 
  • வெளி வளைமுனை வில்: வில்லின் முனைகள் வில்லாளியை விட்டு விலகி, வெளிப்புறமாக வளைந்திருக்கும். நாணை இழுக்கையில் இந்த வளைவு நேராகி, நாணை விடுவிக்கையில் மீண்டும் வளைந்த நிலைக்கு திரும்பிவிடும். இவ்வமைப்பு அம்பிற்கு கூடுதல் திசை வேகத்தை அளிக்கும்.[24]
  • வெளிவளை கிளை வில்: இயல்புநிலையின் போது, வில்லின் கிளைகள் முற்றிலுமாக வில்லாளியை விட்டு விலகி, வெளிப்புறமாக வளைந்திருக்கும்.[24]
  • ஒருமர வில் : முழுவதுமாக ஒரே மரத்தைக் கொண்டு தயாரித்த வில்.[23]
  • நீள்வில்: இதுவும் ஒருமர வில் தான். ஆனால், இதன் நீளம் ஏறக்குறைய வில்லாளியின் உயரத்திற்கு இருக்கும். பொதுவாக 5 அடி (1.5 மீ.) நீளம் இருக்கும். பாரம்பரிய ஆங்கிலேய நீள்வில், யூ மரத்தால் ஆனவை, ஆனால் இதர மரங்களும் பயன்படுத்தப்படும்.[25]
  • தட்டை வில்: thகிளைகள் உருளையாக அல்லாமல் தட்டையாக இருக்கும். பல தொல்குடி அமெரிக்க சமூகங்களில், இது பாரம்பரியமான மற்றும் மிகவும் ஆற்றல் மிக்க வடிவமாக இருந்தது.
  • கலப்பு வில்: ஒன்றிற்கும் மேற்பட்ட மூலப்போருட்களால் தயாரிக்கப்படும் வில்.[26]
  • மடிப்பு வில்: எளிதாக எடுத்துச்செல்லும் வசதிக்காக மடிக்கக்கூடிய வில், பொதுவாக இதில் 3 பாகங்கள் இருக்கும்: 2 கிளைகள் மற்றும் ஓர் தண்டு.
  • கப்பிமுனை வில்: இயந்திர உதவியுடன் நாணை இழுக்கவல்ல வில். பொதுவாக, இவ்வுதவி கிளைகளின் முனையில் உள்ள கப்பிகள் மூலம் பெறப்படுகின்றன. [27]

கிடைநிலை வில் 

[தொகு]

கிடைநிலை வில்லில், முடுக்கி என்று அழைக்கப்படும், வில்லின் கிளைகள், செங்கோணத்தில் குறுக்குக் கம்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்பு இயந்திரத்தால் நாணை இழுத்துப் பிடிக்க வகைசெய்யும். நாணை இழுத்துப்பிடிக்கும் இந்த இயந்திரநுட்பத்தில், ஒரு விசையைக் (trigger) கொண்டு நாணை விடுவிக்க இயலும்.[28] கிடைநிலை வில் அம்பிற்கு பதில், "ஆணியை" ஏவும்.[29]

புராணங்களில் வில்

[தொகு]

இதிகாச நாயகர்கள் வில்வித்தையில் சிறந்தவர்களாக இருந்தனர். வில் அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதற்காக அவர்கள் முறையாகப் பயிற்சி மேற்கொள்வர். வில் போர்க்கலையாக விளங்கியது. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் நடைபெற்ற போர்களில் வில்வழி சண்டை செய்வதே வழக்கமாக இருந்திருக்கிறது. வில்வித்தையில் சிறந்த வீரர்களை வில்லாளிகள் என்று போற்றுவது வழக்கமாக இருந்தது. வில்வித்தைக்கு அஸ்திரப் பயிற்சி என்றும் பெயர் உண்டு. வில்லுக்கு விஜயன் என்பது பழமொழி.

மகாபாரதத்தில் வில்

[தொகு]

மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமமாக வில்வித்தை பயிற்றுவித்தார். துரோணரிடம் வில்வித்தை பயில விரும்பி இயலாமல் போனவன் ஏகலைவன். எனினும் துரோணரின் பிரதிமையைச் செய்து வைத்து வில்வித்தை பயின்றான் என்பது வரலாறு. அருச்சுனன் இரவில் வில்மூலம் அம்பு எய்யவும், நுண்ணிய அம்புகளால் எதிரிகளைப் பயமுறுத்தவும் கற்றிருந்தான். துரோணர் வைத்த வில்வித்தை சோதனையில் அருச்சுனன் ஒருவனே வென்றான் என்பதற்குப் பறவையின் கழுத்தைக் குறித்த கதை இன்றும் வழங்கப்படுகிறது. மகாபாரத யுத்தத்தில் சிகண்டியால் வீழ்த்தப்பட்ட வீடுமன் அம்புகளால் ஆன படுக்கையிலேயே கிடத்தப்பட்டான். இது வீரர்களுக்குரிய மரபாக இருந்துள்ளது.

இராமாயணத்தில் வில்

[தொகு]

இராமன் உள்ளிட்ட சகோதரர்களுக்கு விசுவாமித்திரரே வில்வித்தைகளைக் கற்றுத் தந்தார். இராமனும் இலக்குவனும் வில்லில் சிறந்த வீரர்களாக விளங்கினர். சனகன் வைத்திருந்த சிவதனுசு வில்லை உடைத்தே இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டான் என்பதும் பரசுராமனின் வில்லை ஒடித்தவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராமன் மராமரம் ஏழும் எய்தவன் என்பது அவனுடைய வில்திறமைக்குச் சான்றாகும்.

வில்லின் சக்தி

[தொகு]

வில்லில் பூட்டப்படும் அம்புகள் (அஸ்திரங்கள்) தற்காலத்து ஏவுகணைகள் போலவும் செயல்பட்டுள்ளன. பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், அக்னியாஸ்திரம், வருணாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்றவை அத்தகு சக்தி படைத்தவையாக திகழ்ந்திருக்கின்றன.

நாயகர்களும் வில்களும்

[தொகு]

வில்லாளிகள் வைத்திருந்த விற்களுக்குத் தனித்த பெயர்களும் உண்டு.

  • சிவனின் வில் - பிநாகம்
  • கண்ணனின் வில் - சாரங்கம்
  • இராமனின் வில் - கோதண்டம்
  • அருச்சுனனின் வில் - காண்டீபம்
  • கர்ணனின் வில் - காண்ட பிரஸ்தம்
  • மன்மதனின் வில் - கரும்பு

புத்தக மேற்கோள்கள் 

[தொகு]

மேற்கோள்கள் 

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Paterson Encyclopaedia of Archery pp. 27-28
  2. Paterson Encyclopaedia of Archery p. 17
  3. Paterson Encyclopaedia of Archery p. 31
  4. Paterson Encyclopaedia of Archery p. 56
  5. Paterson Encyclopaedia of Archery p. 20
  6. Paterson Encyclopaedia of Archery p. 111
  7. 7.0 7.1 Sorrells Beginner's Guide pp. 20-21
  8. http://karky.in/labs/agaraadhi/search.do?query=kudhai-81232[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Sorrells Beginner's Guide pp. 19-20
  10. Paterson Encyclopaedia of Archery p. 38
  11. Elmer Target Archery
  12. Heath Archery pp. 15-18
  13. 13.0 13.1 13.2 13.3 Paterson Encyclopaedia of Archery pp. 18-19
  14. Sorrells Beginner's Guide pp. 21-22
  15. Paterson Encyclopaedia of Archery p. 32
  16. 16.0 16.1 16.2 Paterson Encyclopaedia of Archery pp. 25-26
  17. Paterson Encyclopaedia of Archery p. 24
  18. Paterson Encyclopaedia of Archery p. 103
  19. Paterson Encyclopaedia of Archery p. 19
  20. Paterson Encyclopaedia of Archery p. 33
  21. Paterson Encyclopaedia of Archery p. 85
  22. Paterson Encyclopaedia of Archery p. 80
  23. 23.0 23.1 Paterson Encyclopaedia of Archery pp. 93-94
  24. 24.0 24.1 Paterson Encyclopaedia of Archery pp. 90-91
  25. Paterson Encyclopaedia of Archery pp. 73-75
  26. Heath Archery pp. 14-16
  27. Paterson Encyclopaedia of Archery pp. 38-40
  28. Paterson Encyclopaedia of Archery p. 41
  29. Paterson Encyclopaedia of Archery p. 26

வெளி இணைப்புகள் 

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்–அம்பு&oldid=4096723" இலிருந்து மீள்விக்கப்பட்டது