உள்ளடக்கத்துக்குச் செல்

இராமகிருஷ்ணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீ ராமகிருஷ்ணர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராமகிருஷ்ணர் (1881, கல்கத்தா)

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (Sri Ramakrishna Paramahamsa) (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

வாழ்க்கை

[தொகு]

இளமை

[தொகு]

கதாதர்க்ஷூதிராம்[பி]1836 சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.

கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.

ராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது. அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின. மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம்(பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார். அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது.

ராமேசுவரர், கதாதரனை மிகவும் நேசித்த போதிலும் அவனது படிப்பைப் பற்றி மட்டும் எந்தக் கவலையும் படவில்லை. கதாதரனும் தமது பள்ளி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடகக்குழு அமைத்து நண்பர்களுக்கு பயிற்சி அளித்தான்.

கல்கத்தாவில்

[தொகு]

கல்கத்தாவில் இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார். கதாதரன் அவருடன் சென்றால் பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பதினேழு வயதில் அவர் கல்கத்தா சென்றார். அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார் கதாதரர். இவ்வாறுஅங்கு கதாதரர் 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அடுத்த இரண்டு வருடங்களில் ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது.

தட்சணேஸ்வரம் காளி கோயில்

தட்சிணேசுவரத்தில்

[தொகு]

அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த இராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.

ராம்குமாரின் விருப்பப்படி தட்சிணேசுவரத்தில் இருந்து வந்தார் கதாதரர். ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரைக் கண்டது முதலே ஈர்க்கப்பட்டு அவரிடம் அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க எண்ணினார். ஒருமுறை மதுர்பாபு நேரடியாக பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆபரணங்களின் பொறுப்பை ஹிருதயர் ஏற்றுக்கொள்வதானால் தாம் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்வதாக கதாதரர் கூறினார். இது நிகழ்ந்த ஆண்டு 1855.ஏதோ வேலை நிமித்தமாக கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்கு சென்ற ராம்குமார் அங்கேயே காலமானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் கதாதரர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.

தட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னையை நேரில் காணும் ஏக்கமும் ஆவலும் தீவிரமாகி என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

ராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்தார். அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

பேலூர் மடம்

இறுதி நாட்கள்

[தொகு]

ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார்.

175 ஆவது ஜெயந்தி விழா

[தொகு]

ராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிருஷ்ணர்&oldid=4074649" இலிருந்து மீள்விக்கப்பட்டது