ஓர் இரவு
ஓர் இரவு | |
---|---|
![]() | |
இயக்கம் | ப. நீலகண்டன் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் |
கதை | சி. என். அண்ணாதுரை |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் தி. க. சண்முகம் டி. எஸ். பாலையா பி. எஸ். சரோஜா லலிதா |
வெளியீடு | மே 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணாதுரை எழுதிய ஓரிரவு என்னும் நாடகம் அதே பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. நாடகம் வெற்றியடைந்த அளவுக்கு திரைப்படம் வெற்றியடையவில்லை.
கதைச் சுருக்கம்
[தொகு]சொர்ணம் என்ற பால்வடியும் முகம் கொண்ட வானம்பாடி ஒரு அழகான பெண். சீரூர் ஜமீந்தார் கருணாகரத் தேவர் அவளது அழகில் மயங்கி காதல் கொள்கிறார். ஆனால், ஜமீந்தார் ஒரு "சின்ன ஜாதிப் பெண்ணை" மணந்துகொள்ளப் போவதை அறிந்த நாட்டு மக்கள் அவரை ஜமீன் பதவியிலிருந்து விலக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் கலக்கமடைந்த தேவருக்கு அவரது கணக்கன், சொர்ணத்தை மணக்காமல் ஆசை நாயகியாக வைத்துக்கொண்டால் ஜமீன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று யோசனை கூறுகிறான்.
இதனைக் கேட்டு சொர்ணம் கடுமையாக சீறி எழுகிறாள். கோபமடைந்த தேவர் அவளைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறார். பின்னர் தேவர் தனது ஜமீன் குலத்தில் ஒரு பெண்ணை மணந்துகொள்கிறார். கர்ப்பிணியான சொர்ணம் ஊரைவிட்டு ஓடிவிட்டு சென்னையில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறாள். தனித்து மானத்தோடு வாழ முடியாத நிலையில், தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்கிறாள். ரயில் வேகமாக வரும் சத்தம் கேட்கிறது.
பல ஆண்டுகள் கழிந்து, தேவரின் மகள் சுசீலா வளர்ந்து குமரியாகிறாள். அவளுக்கும் டாக்டர் சேகருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் ஜெகவீரன் என்பவன் சுசீலாவைத் தனக்கே மணமுடிக்க வேண்டுமென வற்புறுத்துகிறான். தேவர் அதிர்ச்சியடைந்து, தனது மாளிகை மற்றும் சொத்து அனைத்தையும் கொடுக்கத் தயாரென்றும், தன் அருமை மகளை மட்டும் விட்டுவிடுமாறும் கெஞ்சுகிறார். ஆனால் ஜெகவீரன், தன்னிடம் இருக்கும் ஒரு ரகசியத்தை உலகுக்குக் காட்டுவதாக மிரட்டுகிறான். தேவர் பயந்து நடுங்குகிறார்.
இறுதியில், தேவர் தன் மகளை ஜெகவீரனுக்குப் பலி கொடுக்கச் சம்மதிக்கிறார். தந்தையின் உயிரைக் காப்பாற்ற, சுசீலாவும் தன் காதலைத் தியாகம் செய்ய இசைகிறாள். கடைசி முறையாக சேகரைச் சந்திக்க நந்தவனத்திற்குச் செல்கிறாள் சுசீலா. இனி வாழ்வில் இன்பமில்லை என்று உணர்ந்து, தற்கொலை செய்துகொள்ள விஷத்தைக் கொண்டு வருகிறாள்.
அவள் தன் அறையில் பாலில் விஷத்தைக் கலக்கும்போது, ரத்னம் என்ற கள்ளன் துப்பாக்கியுடன் அறைக்குள் நுழைகிறான். சுசீலாவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஜெகவீரன் வரும்போது தன்னை அந்த அன்னியனுடன் காதல் நாடகமாடிக் கொண்டிருப்பதைக் காண்பித்தால், அவன் தன்னை வெறுத்து விட்டுவிடுவான் என்று நினைக்கிறாள். ரத்னமும் அவளது நிலையை உணர்ந்து சம்மதிக்கிறான்.
காலடிச் சத்தம் கேட்கவே, இருவரும் காதல் நாடகத்தை ஆரம்பிக்கின்றனர். உள்ளே வந்த ஜெகவீரன், "மோசக்காரி! வஞ்சகி!" என்று கோபத்துடன் இரைந்து ரத்னத்தைத் தாக்குகிறான். சண்டை சத்தத்தைக் கேட்டு வந்த தேவர், நடப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்து தன் மகளை "விபசாரி" என்று அழைக்கிறார். அருமைத் தந்தையின் வாயிலிருந்து இந்தச் சொல்லைக் கேட்ட சுசீலா துயரம் கொண்டு விஷக் கோப்பையை எடுக்கிறாள். பின்னர் என்னாகிறது என்பது மீதிக் கதை.
துணுக்குகள்
[தொகு]- அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.
- பாரதிதாசனின் வரிகளில் துன்பம் நேர்கையில்.. என்ற பாடல் இப்படத்தில் இடம்பெற்றுப் பிரபலமானது. இப்பாடலை எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர்.
- நாகேஸ்வர ராவ், லலிதா, பத்மினி தோன்றும் குறவர்-குறத்தியர் நடனம் இப்படத்தின் சிறப்பாகும்.
- இலங்கையில் இத்திரைப்படம் மே 18, 1951 இல் பல முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்