ஒடிசாவின் திருவிழாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடிசாவின் திருவிழாக்கள் ( Festivals of Odisha ) இந்தக் கட்டுரையில் இந்தியாவின் ஒடிசாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள் மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாரா மசரே தேரா பர்பா (பன்னிரண்டு மாதங்களில் பதின்மூன்று திருவிழாக்கள்) என ஒடிசா 12 மாதங்களில் 13 பண்டிகைகளைக் கொண்டாடுகிறது.[1]

முக்கியத் திருவிழாக்கள்[தொகு]

இந்தப் பிரிவு ஒடிசா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளை பட்டியலிடுகிறது.

துர்கா பூஜை[தொகு]

துர்கா பூஜை என்பது ஐப்பசி மாதத்தில் (அக்டோபர் மற்றும் செப்டம்பர்) நிகழும் ஒரு விழாவாகும். இது 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் காலத்தில், சக்தி பீடங்கள் அல்லது பந்தல்கள் எனப்படும் தற்காலிக ஆலயங்களில் துர்க்கை வழிபடப்படுகிறாள். நவராத்திரி என்பது திருவிழாவின் முதல் ஒன்பது நாட்களைக் குறிக்கிறது. துர்க்கையின் ஒன்பது வடிவங்களான நவதுர்க்கை இந்த ஒன்பது நாட்களும் வழிபடப்படுகிறது. இது பாரம்பரிய நாட்காட்டியின்படி மழைக்காலத்தின் முடிவையும் குறிக்கிறது. இந்து புராணங்களின்படி பத்தாம் நாளில் அசுரன், மகிசாசூரன், துர்க்கையால் கொல்லப்பட்டான். இறுதி ஐந்து நாட்கள் குறிப்பாக முக்கியமானதாக கருதப்படுகிறது.[2]

கட்டக்கில் துர்க்கை பூஜையானது சிலைகளின் கிரீடத்திலும், பந்தல்களிலும் வெள்ளி மற்றும் தங்க தாரகாசி வேலைப்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் கட்டாக் நகரம் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு தொடருந்து வண்டிகளும் இயக்கப்படுகின்றன.[2] வழிபாடுகளுக்குப் பிறகு, பத்தாம் நாள் விஜயதசமி அன்று, சிலைகள் ஆடம்பரமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காட்டயோடி ஆற்றில் கரைக்கப்படுகின்றன.[3]

காளி பூஜை[தொகு]

காளி பூஜை அக்டோபர் மாதத்தில் துர்க்கை பூஜை முடிந்ததும் கொண்டாடப்பகிறது. இது காளி தேவி கோபத்தில் நடனமாடும் புராணக் கதையை நினைவுபடுத்துவதற்காகவும், தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடுவதற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. ஒடிசாவின் கேந்துசர் வடக்கு மாவட்டங்களில் இது ஒரு பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது.[4] குறிப்பாக கேந்துசர் மாவட்டத்தில் காளி பூஜையின் போது ஒரு வாரம் திருவிழா நடக்கும். ஒரு வாரத்திற்குப் பிறகு காளி தேவியின் சிலை ஒரு பெரிய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு ஆறு அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் மூழ்கடிக்கப்படும்.[5]

குமார பூர்ணிமா[தொகு]

சரத் பூர்ணிமா அல்லது குமார பூர்ணிமா என்பது ஐப்பசி மாதத்தின் முதல் முழு நிலவு நாளில் தொடங்குகிறது. இது முதன்மையாக ஒரு அழகான கணவன் வருவதற்காக பிரார்த்தனை செய்யும் திருமணமாகாத பெண்களால் கொண்டாடப்படுகிறது. இந்துமத கடவுள் கார்த்திகேயன் இந்த நாளில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பெண்களும் இந்த நாளில் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு புச்சி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவார்கள்.[6]

தீபாவளி[தொகு]

கார்த்திகை அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.[7]

இந்நாளில் சணல் தண்டுகளை எரிப்பதன் மூலம் குடும்பங்கள் தங்கள் மூதாதையர்களை நினைவுகூர்கின்றன . மேலும், படபடுவா என்ற பாடல்களை பாடி தங்களை ஆசீர்வதிக்க அவர்களை அழைக்கின்றனர்.[8]

மாநிலத்தின் சில பகுதிகளில், காளி பூஜையும் இதே நாளில் கொண்டாடப்படுகிறது.[7]

பிரதமாஷ்டமி அன்று தயாரிக்கப்படும் எந்தூரி பிதா .

பிரதமாஷ்டமி ஓடியா மக்கள் தங்கள் வீடுகளில் அனுசரிக்கப்படும் ஒரு பாரம்பரிய திருவிழாவாகும். அன்று குடும்பத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். எந்தூரி பிதா என்ற சிறப்பு உணவு இந்த நாளில் தயாரிக்கப்படும்.[9] முதலில் பிறந்தவர்கள் குடும்பத் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் கலாச்சார முக்கியத்துவத்தை இது கொண்டுள்ளது. இது மார்கழி மாதம் எட்டாம் நாள் வருகிறது.[10]

வசந்த பஞ்சமி[தொகு]

வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற ஆடையில், கைகளில் வீணையுடன் சரசுவதி தேவி

வசந்த பஞ்சமி மாசி மாதத்தில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். இதனை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (சனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளன்று குழந்தைகளின் கல்வி துவங்குகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக எழுது பொருட்களை (பேனா, பென்சில் மற்றும் சிறிய தொழிற்கருவிகள்) வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை.[11][12].[13][14]

மகா சிவராத்திரி[தொகு]

லிங்கராஜர் கோவில்

மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.13வது இரவு அல்லது 14வது நாளில் பால்குண மாதத்தில் குறைந்து வரும் சந்திர பதினைந்து நாட்களில் கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் விழும். சிவன் தாண்டவ நடனம் ஆடிய இரவாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் உண்ணாவிரதம் இருப்பர். திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் சிறந்த கணவன் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வர். இலிங்கத்திற்கு பழம் மற்றும் இலைகள் சமர்பிக்கப்படுகின்றன. பக்தர்கள் இரவு முழுவதும் பஜனைகள் பாடியும், ஆரத்தி செய்தும், தெய்வத்தின் புராணக் கதைகளைக் கேட்டும் வழிபடுகின்றனர்.[15]

லிங்கராஜர் கோயில், சந்திரசேகர் கோவில் மற்றும் முக்தீஸ்வரர் கோயில் போன்ற முக்கிய சைவக் கோவில்களில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவன் ஒரு துறவியாகக் கருதப்படுவதால், துறவிகளுக்கும் சிவராத்திரி முக்கியமானது. துறவிகள் இந்த நாளில் தண்டை போன்ற பானங்களை உட்கொள்வர்.[15]

தேரோட்டம்[தொகு]

2007இல் புரியில் நடந்த தேரோட்டம்

ரத யாத்திரை என்பது ஒடிசாவில் உள்ள புரியில் நடைபெறும் ஒரு வருடாந்திர பண்டிகையாகும். இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.

ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.[16][17] தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார்.

முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது. [18][19]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Prathamastami that celebrates firstborns". The Pioneer. 9 December 2020.
  2. 2.0 2.1 "Durga Puja" (PDF). East Coast Railway. September 2013. Archived from the original (PDF) on 10 August 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  3. "Durga Puja". ஒடிசா அரசு. Archived from the original on 30 October 2008. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  4. "Kali in chains at Keonjhar shrine". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  5. "Silver City bids adieu to Goddess Kali". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  6. "Kumar Purnima" (PDF). ஒடிசா அரசு. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  7. 7.0 7.1 "Deepabali" (PDF). ஒடிசா அரசு. Archived from the original (PDF) on 23 January 2015. பார்க்கப்பட்ட நாள் 17 September 2014.
  8. "Thousands chant 'Bada Badua Ho' in Puri". 5 November 2005. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/thousands-chant-bada-badua-ho-in-puri.html. 
  9. "Oriyas prefer 'Enduri Pitha' on 'Prathamashtami'". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/oriyas-prefer-enduri-pitha-on-prathamashtami/article923205.ece. 
  10. "Prathamastami" (PDF). ஒடிசா அரசு. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  11. Christian Roy (2005). Traditional Festivals: A Multicultural Encyclopedia. ABC-CLIO. பக். 192–197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-089-5. https://books.google.com/books?id=IKqOUfqt4cIC&pg=PA192. 
  12. http://astrology.dinakaran.com/Anmegamdetails.aspx?id=83 பரணிடப்பட்டது 2014-07-04 at the வந்தவழி இயந்திரம் வசந்த பஞ்சமி]
  13. "Vasant Panchami" (PDF). இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  14. "Odisha: Fairs and Festivals". Know India. இந்திய அரசு. Archived from the original on 23 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  15. 15.0 15.1 "Mahashiva Ratri" (PDF). ஒடிசா அரசு. Archived from the original (PDF) on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014."Mahashiva Ratri" (PDF). Government of Odisha. Archived from the original (PDF) on 27 March 2014. Retrieved 8 August 2014.
  16. About Rath Jatra
  17. Rath Yatra Observances
  18. "Sea of humanity at Puri Rath Yatra". தி இந்து. 30 June 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/sea-of-humanity-at-puri-rath-yatra/article6161785.ece. 
  19. "A glimpse of the Vamana, the dwarf or Lord Jagannath". ஒடிசா அரசு. Archived from the original on 24 February 2015. பார்க்கப்பட்ட நாள் 24 February 2015.