ஆவணி சதுர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவணி சதுர்த்தி பூசை

ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.

ஆவணி சதுர்த்தியில் விடியற் காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் பூசைக்குரிய சாதனங்களைச் சேகரித்துக் கொண்டு கும்பம் வைத்து அதன் முன்பு விநாயகரின் திருவுருவை எழுந்தருளச் செய்து பூசித்து அர்க்கியம் அளித்து அர்ச்சனை செய்து தூபதீபம் சமர்ப்பித்து வழிபடுதல் முறை. சந்திரனைப் பூசித்து விநாயக பூசையை முடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவில் சந்திரனைப் பார்க்கவே கூடாது. சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்த குற்றத்தால் விஷ்ணு அவமானம் அடைந்தாராம்.

விநாயகருக்கு அறுகும் வன்னிப்பாத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பாத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மரு, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.

கதிரவன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததை விநாயக சதுர்த்தி உணர்த்துவதாகச் சிலர் கருதுவர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணி_சதுர்த்தி&oldid=1919236" இருந்து மீள்விக்கப்பட்டது