முருகன்
|
||||||||||||||||
முருகன் இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
பொருளடக்கம் |
பெயர்க் காரணம் [தொகு]
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
முருக புராணம் [தொகு]
தோற்றம் [தொகு]
புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப் படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
தெய்வானையுடன் திருமணம் [தொகு]
முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
வழிபாட்டு முறை [தொகு]
அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்கு படைத்ததாகும். அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார். [1]
விழாக்கள் [தொகு]
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப் படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப் படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
நூல்கள் [தொகு]
கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.
மேலும் சண்முககவசம், திருபுகழ், கந்தர் களிவெண்பா, குமரவேல் பதிற்றுபத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அநுபுதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.
முருகன் குறித்த பழமொழிகள் [தொகு]
- வேலை வணங்குவதே வேலை.
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- வயலூர் இருக்க அயலூர் தேவையா?
- காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
- அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
- முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
- கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
- கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
- பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
- சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
- செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
- திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
- வேலனுக்கு ஆனை சாட்சி.
- வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
- செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
முருகன் ஆலய வழிபாடுகள் [தொகு]
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
- காவடி எடுத்தல்
- அலகு குத்துதல்
- பால்குடம் எடுத்தல்
- முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)
- பாத யாத்திரை
முருகனின் பெயர்களும் அவற்றுக்கான பொருளும் [தொகு]
- முருகன் - அழகுடையவன்.
- குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
- குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
- காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
- சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
- சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
- வேலன் - வேலினை ஏந்தியவன்.
- சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
- கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
- கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
- சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
- தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
- வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
முதன்மைக் கட்டுரை: பத்துமலை
முருகனின் அடியவர்கள் [தொகு]
- அகத்தியர்
- நக்கீரர்
- ஔவையார்
- அருணகிரிநாதர்
- குமரகுருபரர்
- பாம்பன் சுவாமிகள்
- கிருபானந்தவாரியார்
கோவில்கள் [தொகு]
முருகன் கோவிகள் முருக வழிபாடு மிகுந்த தமிழ்நாட்டில் அதி்கம் காண்ப்படுகின்றன. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவி்ல்கள் பல அமைந்துள்ளன.
அறுபடை வீடுகள் [தொகு]
- திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
- திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
- பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
- சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
- திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
- பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
மலேசியா [தொகு]
மலேசியா நாட்டில் பாது குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://murugan.org/tamil/shanmugampillai.htm சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் முருகன் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?-தகவல்கள்
- நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை
- முருகனின் அறுபடை வீடுகள்
- முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?-தகவல்கள்
- கீற்று இதழில் மாமல்லை அருகில் சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை
- கந்தபுராணம் : முருகன் உதித்தனன் உலகம் உய்ய
- கந்த சஷ்டி விரதம்