கார்த்திகை விளக்கீடு
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
பொருளடக்கம் |
கார்த்திகை வழிபாடு [தொகு]
கார்த்திகை மாதம் [தொகு]
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை நாள் [தொகு]
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகை விழா [தொகு]
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு[1] அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
ஐதீகம் [தொகு]
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
விரத முறை [தொகு]
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
வீடுகளை அலங்கரிக்கும் முறை [தொகு]
பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.
கார்த்திகை நட்சத்திரம் [தொகு]
கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
சங்கநூல்களில் கார்த்திகை [தொகு]
- கார்த்திகை மாலை-விளக்கு
- வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன்.
- அவன் மகள் தித்தன்.
- அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)
- இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. [2]
கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.[3]
அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும். [4]
ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.[5]
ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம். [6]
சூடாமணி நிகண்டு [தொகு]
- கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்
- தெறுகால்,
- தேள்,
- விருச்சிகம்
- கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள்
- அங்கி
- அளக்கர்
- அளகு
- அறுவாய்
- ஆரல்
- இறால்
- எரிநாள்
- நாவிதன்
மேலும் பார்க்க [தொகு]
அடிக்குறிப்புகள் [தொகு]
- ↑ சொக்கப்பானை: சுவர்க்கப் பாவனை என்பதன் திரிபு
- ↑
- வீரை வேண்மான் வெளியன் தித்தன்
- முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
- வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
- கையற வந்த பொழுது – நற்றிணை 58
- ↑
- கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
- சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் – பரிபாடல் திரட்டு 10
- ↑ ஆடு இயல் அழல் குட்டத்து – புறநானூறு 229 பாடலுக்குத் தரப்பட்டுள்ள பழைய உரையும், டாக்டர்.உ.வே.சா. குறிப்புரையும்
- ↑
- அகலிரு விசும்பின் ஆஅல் போல
- வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – மலைபடுகடாம் – 10
- ↑
- விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
- எரிசடை எழில் வேழம் தலை எனக் கீழிருந்து
- தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை – பரிபாடல் 11. இதற்கு டாகடர்.உ.வே.சா எழுதியுள்ள குறிப்பு.
|
|
|
|---|---|
| போகி * மகர சங்கிராந்தி * தைப்பொங்கல் * மாட்டுப் பொங்கல் * காணும் பொங்கல் * தைப்பூசம் * தை அமாவாசை * மகா சிவராத்திரி * மாசி மகம் * ஹோலி * பங்குனித் திங்கள் * பங்குனி உத்தரம் * தமிழ்ப் புத்தாண்டு * சித்திரைப் பரணி * சித்திரா பௌர்ணமி * உகாதி * இராம நவமி * திருவிளக்குப் பூசை * வைகாசி விசாகம் * ஆனி உத்தரம் * ஆடிப்பூரம் * ஆடி அமாவாசை * ஆடிச் செவ்வாய் *வரலட்சுமி நோன்பு * கிருஷ்ண ஜெயந்தி * ஓணம் * ஆவணி சதுர்த்தி * ஆவணி மூலம் * ரக்ஷா பந்தன் * விநாயக சதுர்த்தி * நவராத்திரி நோன்பு * விஜயதசமி * தீபாவளி * கந்த சஷ்டி * கேதாரகௌரி விரதம் * கார்த்திகை விளக்கீடு * திருவாதிரை நோன்பு * பிரதோஷ விரதம் * ஏகாதசி விரதம் * வைகுண்ட ஏகாதசி * புரட்டாதிச் சனி * திருவெம்பாவை நோன்பு * கும்பமேளா * மார்கழி நோன்பு * மார்கழி உற்சவம் |