வைகுந்த கமலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நேபாள வைகுந்த கமலயா சிற்பம், கூயிமத் அருங்காட்சியகம்,பிரான்சு

வைகுந்த கமலயா அல்லது இலட்சுமி-நாராயணன் (Vaikuntha Kamalaja, Lakshmi-Narayana) என்பது, சைவ மாதொருபாகன் வடிவை ஒத்த, திருமால்-திருமகளின் இணைந்த வடிவம் ஆகும். நேபாளம் மற்றும் காசுமீரப் பகுதிகளில் மட்டும் அரிதான இச்சிற்பம் பெருமளவு கிடைத்திருக்கின்றது.[1][2]

தோற்றம்[தொகு]

மாதொருபாகன் உருவவியலே இதற்கு மூலமாக இருந்த போதும்,[1][3][4] மாதொருபாகன் வடிவம் போல, வைகுந்த கமலயா வடிவம் இந்திய வழக்கில் பெரிதாகப் பேசப்படவில்லை. மாதொருபாகன் தோற்றத்துக்குரியவை போல, எந்த விதமான புராணக் கதைகளையும் வைகுந்த கமலயா வடிவத்துக்கு கிடைக்கவில்லை.[4] எனினும் பாஞ்சராத்திரம் சில தந்திரங்கள் என்பவற்றில் இத்திருவுருவம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன."சாரதாதிலகம்" எனும் பதினோராம் நூற்றாண்டு தந்திரம், பதினாறாம் நூற்றாண்டு "சில்பரத்தினம்", பதினேழாம் நூற்றாண்டு கிருஷ்ணானந்த தந்திரசாரம் முதலான நூல்கள் அவற்றுள் சில.[1][3][4]

கயையில், சீதள கயா ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டொன்று, பதினோராம் நூற்றாண்டின் பிற்பாகத்தைச் சேர்ந்த "யக்சபாலன்" எனும் சிற்றரசன் "கமலார்த்தாங்கின நாராயணன்" (திருமகள் ஓரு பாகமான திருமால்) உள்ளிட்ட பல தெய்வங்களின் திருவுருவங்களை அக்கோயிலில் நிறுவியமை பற்றிக் குறிப்பிடுகின்றது.[4] கிழக்கிந்தியாவிலிருந்து இவ்வாறு தோன்றிய வைகுந்த-கமலயாவின் சிற்பம், மெல்ல மெல்ல, காசுமீரம், நேபாளம் பகுதிக்குப் பரவியது எனும் ஒரு கருத்தியல் முன்வைக்கப்படுகின்றது.[1] இன்னொரு கருதுகோள், இவ்வுருவின் பிறப்பிடம் காசுமீரமே என்கின்றது.[5]

அரியானாவின் ஜெயந்திபூரிலுள்ள பொ.பி 1204ஆம் ஆண்டைச் சேர்ந்த இமாச்சலப் பிரதேசத்தின் பையநாத் ஆலயம், பூரி யகன்னாதர் ஆலயத்திலுள்ள "சயன தாகூரன்" என்பன, கிழக்கிந்தியாவின் வைகுந்த கமலை சிற்பங்கள் கிடைக்கும் முக்கியமான சில இடங்கள் ஆகும்.[6][5][7] பொ.பி 1263இல் கிடைத்த நேபாளத்தைச் சேர்ந்த, மிகப் பழைமையான வைகுந்த கமலை சிற்பம், இன்று கொல்கத்தா இராமகிருஷ்ண மிசன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[3]

வேறு பெயர்கள்[தொகு]

உரோம அருங்காட்சியகம் ஒன்றிலுள்ள 17 அல்லது 18ஆம் நூற். இலட்சுமிநாராயணன் சிற்பம்.

வைகுந்த கமலயா[1][3] என்ற பெயரானது, திருமாலின் வசிப்பிடத்தால் அவர் பெற்ற "வைகுந்தன்" என்ற பெயரையும் திருமகளின் வசிப்பிடமான தாமரை (கமலம்) மூலம் அவள் பெற்ற "கமலயா" எனும் பெயரையும் இணைப்பதன் மூலம் கிட்டும் பெயர் ஆகும்.

மேலும் சில பெயர்கள்:

  • "அர்த்தநாரி நாராயணன்"[4][4]
  • "அர்த்தநாரி விஷ்ணு"[2]
  • "அர்த்தலக்ஷ்மி நாராயணன்"[6]
  • "வாசுதேவ கமலயா"[2]
  • "வாசுதேவ லக்ஷ்மி"[5][8]
  • அர்த்தலக்ஷ்மீ ஹரி[8][9]

உருவவியலும் குறியீட்டியலும்[தொகு]

வெண்கலம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த லட்சுமிநாராயணன் சிற்பம், பதான் அருங்காட்சியகம், நேபாளம்.

சாரதாதிலகம், கிருஷ்ணானந்த தந்திரசாரம் என்பன விவரிப்பது போல், வைகுந்த கமலயை சிற்பமானது, பரம்பொருளின் இரண்டன்மையையும் ஆண்-பெண் பேதமின்மையையும் குறிக்கின்றது.[1][3][6] சில்பரத்தினம் நூல், திருமால்-திருமகளின் வேறுபாடின்மையைச் சுட்டிக்காட்டுகின்றது.[6]

மாதொருபாகன் போலவே, இங்கும் திருமால் வலப்புறமும், திருமகள் இடப்புறமும் சித்தரிக்கப்படுகின்றனர். கருடனில் அமர்ந்திருப்பதாகவோ, அல்லது தாமரையில் நின்றிருப்பதாகவோ, ஆமையில் அமர்ந்திருப்பதாகவோ இச்சிற்பம் காட்சியளிக்கும். திருமகளின் ஊர்தியாக சிலவேளைகளில் சொல்லப்படும் ஆமையொன்றும் கருடனொன்றும், வைகுந்த கமலயாவின் இருபுறமும் நிற்பதுண்டு. வைகுந்த கமலயா எண்கரங்கள் கொண்டவர். வலப்புறம் திருமாலுக்குரிய சக்கரம், சங்கு, கதை, தாமரை என்பனவும், இடப்புறம் கலசம், கண்ணாடி, ஏட்டுச்சுவடி, தாமரை என்பனவும் காணப்படும். வலப்ப்புறம் ஆண்மையின் மிடுக்கும், இடப்புறம் பெண்மையின் நளினமும் காணப்படும். தோடு, கையணிகள், மகுடம் என்பனவற்றில் இருபுறமும் சிறிது வேறுபா்டு இருப்பதுண்டு.[1][3][4][7]


மேலும் பார்க்க[தொகு]


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Pal, Pratapaditya (1967). "Vaiṣṇava Art from Nepal in the Museum". Boston Museum Bulletin (Museum of Fine Arts, Boston) 65 (340): 44–45. 
  2. 2.0 2.1 2.2 Varadpande, M L (2009). Mythology of Vishnu and his incarnations. Gyan Publishing House. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-212-1016-4. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Pal, Pratapaditya (Winter 1964–1965). "Notes on Five Sculptures from Nepal". The British Museum Quarterly (British Museum) 29 (1/2): 32–33. doi:10.2307/4422882. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Sircar, D. C. (1971). "Ardhanari-Narayana". Studies in the religious life of ancient and medieval India. Motilal Banarsidass Publ. பக். 221–8. 
  5. 5.0 5.1 5.2 Malla, Bansi Lal (1996). "Vasudeva-Laksmi". Vaiṣṇava art and iconography of Kashmir. Abhinav Publications. பக். 45–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7017-305-1. 
  6. 6.0 6.1 6.2 6.3 Miśra, Narayan (2007). Annals and antiquities of the temple of Jagannātha. Sarup & Sons. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7625-747-8. 
  7. 7.0 7.1 "ARDH LAXMI-NARAYAN: Sculptures in Baijnath, Himachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
  8. 8.0 8.1 Pande, Alka. "The Icon of Creation – Ardhanarisvara". Archived from the original on 4 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 4 July 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  9. Garg, Ganga Ram, தொகுப்பாசிரியர் (1992). Encyclopaedia of the Hindu world. 3: Ar-Az. Concept Publishing Company.. பக். 597. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7022-376-8. 


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகுந்த_கமலயா&oldid=3588233" இலிருந்து மீள்விக்கப்பட்டது