உள்ளடக்கத்துக்குச் செல்

பியேர் கியூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியேர் கியூரி
பிறப்பு15 மே 1859
பாரிஸ்,பிரான்ஸ்
இறப்பு19 ஏப்ரல் 1906(1906-04-19) (அகவை 46)
பாரிஸ்,பிரான்ஸ்
தேசியம்பிரெஞ்சு
துறைஇயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்சார்போன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பால் லாங்வின்
ஆண்ட்ரூ லூயிஸ் டெபீர்ன்
மார்க்ரெட் காத்ரின் பெரே
அறியப்படுவதுகதிரியக்கம்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903)
குறிப்புகள்
துணைவர்மேரி கியூரி(25 ஜூலை 1895),குழந்தைகள் ஐரின் ஜூலியட் கியூரி, ஈவ் கியூரி.

பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது.

இளமை

[தொகு]

1859 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பியேர் கியூரி பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி. ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. மிகுந்த தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது.

பணிகள்

[தொகு]

ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக்(Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின.

கண்டுபிடிப்புகள்

[தொகு]
  • அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன்,குவார்ட்சு கடிகாரஙக்ள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.
  • முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் 'முறுக்குத் தராசு' (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார்.
  • காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று 'கியூரி விதி' என்று அழைக்கப்படுகிறது.
  • மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் கியூரி புள்ளி (Curie Point) எனப்படுகிறது.
  • 1895-ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
  • இருவரும் " கதிரியக்கம்" (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட 'படிக மின் அழுத்தமானி' மிகவும் பயன்பட்டது.
  • பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டு பிடித்தனர். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும் , சில எதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர், இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் (Alpha, beta and gamma rays) எனப்பட்டன.
  • கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7x1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910-ல் 'கதிரியக்கத் துறை காங்கிரஸ் '(Radiology Congress) என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.

நோபல் பரிசுக் குடும்பம்

[தொகு]

பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடைய இரண்டாவது மகள் ஈவ் கியூரி சிறந்த இசைக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். இவர் தனது தாயார் மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.

மறைவு

[தொகு]

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

அறிவியல் ஒளி, மே-2009 இதழ்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pierre Curie
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியேர்_கியூரி&oldid=3428817" இலிருந்து மீள்விக்கப்பட்டது