பீட்டர் குருன்பெர்க்
பீட்டர் குருன்பெர்க் | |
---|---|
பிறப்பு | 18 மே 1939 Pilsen, Protectorate of Bohemia and Moravia |
தேசியம் | ஜெர்மனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | Carleton University Forschungszentrum Jülich University of Cologne |
கல்வி கற்ற இடங்கள் | Darmstadt University of Technology |
ஆய்வு நெறியாளர் | Stefan Hüfner |
அறியப்படுவது | Giant magnetoresistive effect |
விருதுகள் | Wolf Prize in Physics (2006) European Inventor of the Year (2006) Japan Prize 2007 இயற்பியலுக்கான நோபல் பரிசு (2007) |
பீட்டர் குருன்பெர்க் (Peter Grünberg) (மே 18, 1939) ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவரும் பிரெஞ்ச் இயற்பியலாளர் ஆல்பெர்ட் ஃவெர்ட் (Albert Fert) என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இக் கண்டுபிடிப்புக்காக இவ்விருவருக்கும் 2007ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]
வாழ்க்கை
[தொகு]குருன்பெர்க் மே 18, 1939 இல், தற்கால செக் குடியரசு நாட்டில் உள்ள பில்சென் (Pilsen) என்னும் ஊரில் பிறந்தார். உலகப்போர் முடிந்தபிறகு, பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்செ என்னும் மாவட்டத்தில் லௌட்டர்பாஃக் என்னும் ஊருக்குச் சென்று அங்கு உயர்நிலைப்பள்ளியில் (உயர்நிலைப் பள்ளிகள் ஜெர்மனியில் கிம்னேசியம் (Gymnasium) என்று அழைக்கப்பட்டன)[2]
குருன்பெர்க் 1962 இல் யோஃகான் வுல்ஃவங்கு கொயெதெ பல்கலைக்கழகத்தில் இடைநிலை பட்டம் பெற்றார். பின்னர் டார்ம்ஸ்டட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1966இல் இயற்பியலுக்கான பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969இல் முனைவர் ஆய்வுப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969-1972 வரை கனடாவில் ஆட்டவாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் மேல்முனைவர் ஆய்வுப்பயிற்சி பெற்றார். அதன் பின் ஐரோப்பாவில் உள்ள சிறந்த ஆய்வகங்களில் ஒன்றான யூலிஷ் ஆய்வு மையம் (Jülich Research Centre) என்னும் ஆய்வகத்தில் சேர்ந்து பல்லடுக்கு இரும்பு சேர்ந்த மென்படலத்தின் காந்தப்பண்புகள் பற்றிய ஆய்வில் முன்னிலை எய்தி பின்னர் 2004ல் ஓய்வு பெற்றார். .[2]
முக்கிய கண்டுபிடிப்பு
[தொகு]1986இல் இவர் மெல்லிய காந்தப்படலங்களில் செய்த ஆய்வின் பயனாய் ஒரு விளைவைக் கண்டு பிடித்தார். இரும்புக்காந்தப் பண்புள்ள இரண்டு படலங்களுக்கு நடுவே ஒரு மிக மெல்லிய ( ~ 1 நானோ மீட்டர்) இரும்பல்லாத காந்த படலம் (எடுத்துக்காட்டாக குரோமியம்) இருந்தால், இருபுறமும் உள்ள இரும்புக்காந்தப் படலங்கள் அணுக்கருகாந்தத்தன்மையால் தொடர்புற்று, இரும்புக் காந்தகளுக்கு இடையே மாறுதிசையில் காந்தப்பாய்வு ஏற்படும் என்று கண்டுபிடித்தார். பின்னர் 1988இல் இதனை பல்லடுக்கு மெல்லிய படலங்கள் வழி இவ் விளைவை மிகைப்படுத்தி மாபெரும் காந்தமின்தடைமம் (GMR) என்னும் விளைவைக் கண்டு பிடித்தார்.[3] இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விளைவை தொடர்பேதுமின்றி ஆல்பர்ட் ஃவெர்ட் (Albert Fert) என்னும் பிரெஞ்ச் இயற்பியலாளர் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் (Université de Paris Sud) தனியாகக் கண்டுபிடித்தார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Physics 2007". The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-10-09.
- ↑ 2.0 2.1 "Curriculum Vitae". Jülich Research Centre. பார்க்கப்பட்ட நாள் 2007-10-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ G. Binasch, P. Grünberg, F. Saurenbach, and W. Zinn (1989). "Enhanced magnetoresistance in layered magnetic structures with antiferromagnetic interlayer exchange". Phys. Rev. B 39 (7): 4828 - 4830. doi:10.1103/PhysRevB.39.4828. http://link.aps.org/abstract/PRB/v39/p4828.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூலிஷ் ஆய்வு மையத்தில் குருன்பர்கின்வலைதளம் பரணிடப்பட்டது 2011-01-02 at the வந்தவழி இயந்திரம்