உள்ளடக்கத்துக்குச் செல்

சான் பத்தீட்டு பெரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் பத்தீட்டு பெரென்
பிறப்பு(1870-09-30)30 செப்டம்பர் 1870
லீல், பிரான்சு
இறப்பு17 ஏப்ரல் 1942(1942-04-17) (அகவை 71)
நியூ யார்க், அமெரிக்கா
தேசியம்பிரான்சியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்எக்கோல் நொர்மேல் சுபீரியர்
பாரிஸ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்எக்கோல் நொர்மேல் சுபீரியர்
அறியப்படுவதுமின்னணுக்கற்றைகளின் இயல்பு
பிரௌனியன் இயக்கம்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1926)

சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin, 30 செப்டெம்பர் 1870 – 17 ஏப்ரல் 1942) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர். பொருளிலுள்ள நீர்மங்களில் நுண்ணிய துகள்களின் 'பிரௌனியன் இயக்கத்தைப்' பற்றி ஆய்வு செய்ததோடு இதற்கான ஆல்பர்ட் ஐன்சுடீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்தார். இதற்காக 1926 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.[1]

இளமை

[தொகு]

பெரென் 1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் பிரான்சு நாட்டில் 'லீல்' என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஓர் இராணுவ அலுவலர். அவர் பிரெஞ்சு-புருசியப் போரில் வீர மரணமடைந்தார். எனவே இவருடைய தாயார் பெரினையும் அவரின் இரண்டு சகோதரிகளையும் வளர்த்து ஆளாக்க மிகவும் துன்புற்றார்.

பெரென் உள்ளூரிலுள்ள பொதுப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பாரிசில் 'லைசி ஜேன்சன் டி செய்லி' என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கட்டாய இராணுவ சேவை காரணமாக 1891-இல் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சியின் போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1897-ல் 'என்றியட் டுபோர்டல்' (Henriette Duportal)என்ற பெண்னை பெரின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர்.

ஆய்வுப் பணிகள்

[தொகு]

கதிர்கள் குறித்த ஆய்வுகள்

[தொகு]

1894-97 ஆண்டுகளில் பெரென் ஈகோல் நார்மலே என்ற இடத்தில் இயற்பியல் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து பணிகளில் ஈடுபடார். அப்பொழுது, எதிர்மின் கதிர்கள், எக்சு கதிர்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அவற்றையே ஆய்வறிக்கையாக அளித்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றர். அப்பொழுது வெற்றிடக் குழாயில் மின்னிறக்கம் செய்யும்போது எதிர்மின் வாயிலிருந்து எதிர்மின் கதிர்கள் தோன்றுகின்றன என்பதை அறிவியலறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கதிர்கள் எதிர்மின் துகள்களால் ஆனவை. அவை அலை வடிவாக வெளியிடப்படுகின்றன என்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின.

பிரௌனியன் இயக்கம்

[தொகு]

1895-ல் பெரென் ஆய்வுகளில், எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகலடைகின்றன என்பது மிக முக்கியமான முடிவாகும். இவை எதிர் மின்தன்மை உடையவை. இத்துகள்களின் மின்னூட்டம்-நிறை இவற்றுக்குள்ள விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். ஆனால் ஜெ. ஜெ. தாம்சன்‎ இவருக்கு முன்னால் அதைக் கண்டறிந்தார். 1901-ல் இயல்வேதியலில், பிரௌனியன் இயக்கம் மற்றும் மூலக்கூறு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 1928-ல் இராபர்ட் பிரௌன் என்பவர் 'நீரில் மூழ்கியுள்ள மகரந்தத்துகள்கள் தொடர்ந்து இங்குமங்குமாக ஒழுங்கின்றி இயங்குகின்றன.' என்று கூறினார்.

1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதற்கான விளக்கத்தை துகள்கற்றை இயற்பியலின் அடிப்படையில் தந்தார். 'நீர்மூலக்கூறுகளினால் இத்துகள்கள் இயக்கப்படுகின்றன. ஒரு துகளினால் கடத்தப்படும் தூரம், அவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தின் வர்க்கத்திற்கேற்ப அதிகரிக்கிறது. எனக் குறிப்பிட்டார். வெப்பநிலை, துகள்களின் அளவு, இயங்குகின்ற திரவம் இவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துகள்கள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார். 1908-ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் பெரின் மெய்ப்பித்தார்.

நோபல் பரிசு

[தொகு]

ரிச்சர்ட் சீய்க்மாண்டி(Richard Zeigmandy),ஹென்றி சீடண்டாப் (Henry Siedentop), என்ற அறிவியலறிஞர்கள் 1903-ல் உருவாக்கிய நுட்பமான நுண்ணோக்கிகள் இந்த ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவின. ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவு மற்றும் அவகாட்ரோ எண்ணிற்கான திடமான மதிப்பையும் கணக்கிட்டார். இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1926-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நூல் வெளியீடு

[தொகு]

1913-ல் அணுக்கள் என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை வெளியிட்டார். இவருடைய ஆய்வு விளக்கங்களாக மட்டுமன்றி இந்நூல் கதிரியக்க வேதியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1936க்குள் இது பல் பதிப்புகள் அச்சிடப்பட்டு சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாயின. பல மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது. இது போல் பல நூல்களை பெரின் வெளியிட்டார். ஜெ. ஜெ. தாம்சன்‎ இவருடைய கருவிகளைப் பயன்படுத்தியே தன்னுடைய முடிவுகளை வெளியிட்டார். சார்போனில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இயல் வேதியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு அத்துறையின் தலைவரானார்.

சிறப்புகள்

[தொகு]
  • 1896-ல் ராயல் கழகத்தின் ஜூல் பரிசும்
  • 1911-ல் ராயல் கழகத்தால் மத்யூக்கி பதக்கமும்,
  • 1912-ல் போலோக்னாவின் வல்லௌரி(Vallauri) பரிசும்
  • 1914-ல் பாரிசின் அறிவியல் கழகத்தினால் லா கேசு (La Caze)பரிசும் இவருக்கு வழங்கப்பட்டன.

பிரசல்சு,லைகே, கெம், கொல்கத்தா, நியூயார்க்,பிரிசுடன்,மான்செசுடர் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன. ராயல் கழகம், மற்றும் பெல்சியம், சுவீடன், பிரேக், உருமானியா போன்ற நாடுகளில் உள்ள அறிவியல் கழகங்கள் இவரை உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து, பெல்ஜிய அரசுகளின் மதிப்புமிக்க பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கென பிரெஞ்சு நாட்டில் தேசிய மையம் ஒன்றை அமைக்க இவர் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.[2]

மறைவு

[தொகு]

1914-18 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1040-ல் செருமானியர் ஊடுருவியபோது இவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். 1942,ஏப்ரல் 17 அன்று மரணமடைந்தார். 1948-ல் போருக்குப் பின் இவருடைய பொருள்கள் சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.

இவற்றையும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • 'அறிவியல் ஒளி', செப்டம்பர் 2011 இதழ்

குறிப்புகள்

[தொகு]
  1. எஆசு:10.1001/jama.242.8.744
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. Guthleben, Denis (November 3, 2010). "Un peu d'histoire... La création du CNRS". Comité pour l’histoire du CNRS. பார்க்கப்பட்ட நாள் February 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_பத்தீட்டு_பெரென்&oldid=2917724" இலிருந்து மீள்விக்கப்பட்டது