இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராபர்ட் ஆன்ட்ரூஸ் மில்லிகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்
பிறப்பு(1868-03-22)22 மார்ச்சு 1868
மோரிசன், இலினாய்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்புதிசம்பர் 19, 1953(1953-12-19) (அகவை 85)
சான் மாரினோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்
கல்வி கற்ற இடங்கள்ஓபர்லின் கல்லூரி
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மைக்கேல் பப்பின்
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்
அறியப்படுவதுஎதிர்மின்னியின் ஏற்றம்
அண்டக் கதிர்கள்
விருதுகள்காம்ஸ்டொக் பரிசு (1913)[1]
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1923)
பிராங்கிளின் விருது (1937)

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan,22 மார்ச்சு 1868 – 19 டிசம்பர் 1953) என்பவர் அமெரிக்க ஆய்வியல் இயற்பியலறிஞர். இவர் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிட்ட முறைகளுக்காகவும் ஒளிமின் விளைவில்(Photo electric effect) இவருடைய ஆய்வுகளுக்காகவும் 1923-ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றவர். 1921-இல் பிரஸ்பெல்சு என்ற இடத்தில் நடந்த சால்வே மாநாடு என்று சிறப்புப் பெற்ற இயற்பியல் அறிஞர்களின் மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கியவர்.

வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868 அன்று பிறந்தார்.[2] இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891-ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன.

இயற்பியல் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். 1893-ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895-ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான்.[3]

பணிகளும், ஆராய்ச்சிகளும்[தொகு]

மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார்.

1909-ல் ஒற்றை எலக்ட்ரான் மூலம் கடத்தப்படும் மின்னூட்டத்தை தீர்மானிக்கும் தொடர் கட்டச் சோதனைகளை நிகழ்த்தினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரியர்சன் சோதனைக் கூடத்தில் துணை ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். அங்கு 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார்.

பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமையாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார்.

ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார்.

பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறைவு[தொகு]

இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ராபர்ட் மில்லிகன் 85 வயதில் (1953) மறைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Comstock Prize in Physics". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  2. Millikan, Robert. "Nobel Prize in Physics 1923". nobel.org. பார்க்கப்பட்ட நாள் September 20, 2012.
  3. "Robert A. Millikan". IEEE Global History Network. IEEE. பார்க்கப்பட்ட நாள் July 25, 2011.