உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் சாட்விக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் சாட்விக்
James Chadwick
பிறப்பு(1891-10-20)20 அக்டோபர் 1891
பொலிங்டன், செஷயர், இங்கிலாந்து
இறப்பு24 சூலை 1974(1974-07-24) (அகவை 82)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
குடியுரிமைஐக்கிய இராச்சியம்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்பெர்லின் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
லிவர்பூல் பல்கலைக்கழகம்
கான்வில், கேயசு கல்லூரி, கேம்பிரிட்சு
கேம்பிரிச் பல்கலைக்கழகம்
மன்காட்டன் திட்டம்
அறியப்படுவதுநியூத்திரன் கண்டுபிடிப்பு
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1935)
பிராங்கிளின் பதக்கம் (1951)

சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick, 20 அக்டோபர் 189124 சூலை 1974) என்பவர் ஒரு ஆங்கில நோபல் பரிசாளர் ஆவார். இவரது நியூத்திரன் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.[1]

சாட்விக் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கல்விகற்றார். இரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய அமெரிக்காவில் நடாத்தப்பட்ட மான்காட்டன் திட்டத்தில் பங்குபற்றிய ஒரு முன்னணி பிரித்தானிய விஞ்ஞானியுமாவார். இயற்பியலில் இவரது அடைவுகளுக்காக 1945ல் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சாட்விக் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில் ஜோன் ஜோசப் சாட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சாட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலைக்கும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலைக்கும் கல்வி கற்கச் சென்றார்.[2] மேலும் மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார்.

1913ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். அங்கு ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் ரதபோர்டின் கீழ் கல்வி கற்றார். முதலாம் உலகப்போரின் ஆரம்பத்தில் சட்விக் ஜெர்மனியில் இருந்தார். அங்கு அவர், ரூல்பென் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மேலும், ஓர் ஆய்வுகூடத்தை அமைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாள்ஸ் D. எல்லிசின் துணையுடன், பொசுபரசின் அயனாக்கம் பற்றியும், காபனோரொட்சைட்டினதும் குளோரினினதும் ஒளியிரசாயனத் தாக்கம் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.[3][4] கெய்கரின் ஆய்வுகூடம் அவரது விடுதலைக்காக முயற்சி செய்யும்வரை அவர் ரூல்பென்னிலேயே தமது வாழ்நாட்களைக் கழித்தார்.

செயற்பாடுகள்

[தொகு]

கேம்பிரிட்ஜில் ஆய்வு

[தொகு]

1932ல் சட்விக், அணுக்கருவில் அதுவரை அறியப்பட்டிராத துணிக்கையொன்றைக் கண்டுபிடித்தார்.[5] தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவான விளக்கங்களை வெளியிட்டார்.[6][7] இத் துணிக்கை முதன்முதலில் எட்டோர் மஜோரனாவால் எதிர்வுகூறப்பட்டிருந்தது. இதன் மின் நடுநிலை காரணமாக இது நியூத்திரன் எனப் பெயர் பெற்றது. சட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பு யுரேனியம் - 235ன் கருப்பிளவைப் புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தது. அல்பாத் துணிக்கைகள் நேரேற்றம் கொண்டவையாதலால் அவை அணுக்கருவிலுள்ள நேரேற்றத்தால் தள்ளப்பட்டன. ஆனால் நியூத்திரன்கள் ஏற்றமற்றவையாதலால் அவற்றுக்கு கூலோமின் தடையைத் தாண்டவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் அவற்றால் பாரமான அணுக்கருக்களான யுரேனியம் - 235 மற்றும் புளூட்டோனியம் கருக்களினுள்ளும் ஊடுருவக்கூடியதாயிருந்தது.

1932ல் நியூத்திரன் பற்றுய சட்விக்கின் கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1932ல் ரோயல் சங்கத்தின் ஹக்ஸ் பதக்கமும், 1935ல் பௌதிகவியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.[8]

சட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பினால் ஆய்வுகூடங்களில், யுரேனியத்திலும் பாரமான மூலகங்களை உருவாக்கக்கூடியதாயிருந்தது. பீற்றா சிதைவினால் உருவாகும் நியூத்திரன்களை மோதச்செய்வதன் மூலம் இது சாத்தியமானது. இவரது கண்டுபிடிப்பு இத்தாலிய பௌதிகவியலாளரும் நோபல் பரிசாளருமான என்ரிகோ ஃபெர்மியைக் கவர்ந்தது. இதனால் அவர் நியூத்திரன்களை அணுக்கருக்களுடன் மோதச் செய்வதன்மூலம் ஏற்படும் இரசாயனத் தாக்கங்களை ஆராயத் தொடங்கினார். ஃபெர்மியால் வெளியிடப்பட்ட ஆய்வுகளும், ஒட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் ஆகிய ஜெர்மன் கதிரியக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் காரணமாக முதல் வகை அணுக்கருப் பிளவு கண்டுபிடிக்கப்பட்டது.

லிவர்பூலில்

[தொகு]

1935ல், சட்விக் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலுக்கான பேராசிரியர் ஆனார். 1940ல் அணுகுண்டைத் தயாரிக்க ஆணையிடும் ஃப்ரிச் பியேல்ஸ் குறிப்பாணை காரணமாக, MAUD குழுவில் நியமிக்கப்பட்டார். அக் குழு சடப்பொருளைப் பற்றி மேலும் ஆராய்ந்தது. 1940ல் டிசார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். அங்கு அமெரிக்கர்களைனதும் கனேடியர்களினதும் அணுக்கரு ஆராய்ச்சியை ஒன்றிணைப்பதில் ஈடுபட்டார். நவம்பர் 1940ல் இங்கிலாந்து திரும்பிய வேளை, போர் முடியும் வரையில் இந்த ஆய்வில் எதுவும் வெளிவராது என்றே அவர் கருதினார். டிசம்பர் 1940ல் MAUD நிறைவேற்றதிகாரியான ஃபிரான்ஸ் சைமன், யுரேனியம் - 235 சமதானியைப் பிரித்தெடுக்க முடியும் என அறிவித்தார். சைமனின் அறிக்கை, பாரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமொன்றுக்கான செலவுகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளையும் உள்ளடக்கியிருந்தது. "அணுகுண்டு என்பது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல. அது மிகவும் இன்றியமையாததும் ஆகும். நான் பின்னர் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். இதுவே ஒரேயொரு தீர்வு" என்று ஜேம்ஸ் சட்விக் பின்பு எழுதியிருந்தார்.

அதன் பின் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் மன்காட்டன் திட்டத்தில் இணைந்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரு அணுகுண்டுகள் சப்பானியப் பேரரசின் மீது போடப்பட்டன. இதனால் ஆகஸ்ட் 1945ன் நடுப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்தது.

1940ல், சட்விக் காம்பிரிட்சில் ஆய்வுகளில் ஏடுபட்ட ஹான்ஸ் வொன் ஹால்பன் மற்றும் லியூ கொவர்ஸ்கி ஆகிய இரு ஃபிரெஞ்சு விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிக்கைகளை ரோயல் சங்கத்துக்கு அனுப்பினார். போரின்போது அவற்றை வெளியிடுவது உசிதமானதல்ல என்பதால் அவ்வாய்வறிக்கைகளை இரகசியமாக வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2007ல், ரோயல் சங்கத்தின் ஊழியர்கள், கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இவ்வறிக்கைகளைக் கண்டுபிடித்தனர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Brown, Andrew (1997). The neutron and the bomb: a biography of Sir James Chadwick. Oxford [Oxfordshire]: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-853992-4.
 2. எஆசு:10.1093/ref:odnb/30912
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 3. Obituary: "Sir James Chadwick," தி டைம்ஸ், 25 July 1974, p. 20, column F. (Available in part on-line at: http://ruhleben.tripod.com/id5.html .)
 4. Obituary: "Sir Charles Ellis," The Times, 15 January 1980, p. 14, column F. (Available in part on-line at: http://ruhleben.tripod.com/id6.html .)
 5. எஆசு:10.1038/129312a0
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 6. எஆசு:10.1098/rspa.1932.0112
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 7. எஆசு:10.1098/rspa.1933.0152
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 8. James Chadwick - Biography
 9. Staff writers (1 June 2007). "Nuclear Reactor Secrets Revealed". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/6709855.stm. பார்த்த நாள்: 2009-02-12. 

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_சாட்விக்&oldid=3744926" இலிருந்து மீள்விக்கப்பட்டது