காபிரியேல் லிப்மன்
காபிரியேல் லிப்மன் | |
---|---|
பிறப்பு | லக்சம்பர்க் | 16 ஆகத்து 1845
இறப்பு | 13 சூலை 1921 எஸ். எஸ். பிரான்சு கப்பல், அட்லாண்டிக் பெருங்கடல். | (அகவை 75)
தேசியம் | பிரான்ஸ் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | சார்போர்ன் |
கல்வி கற்ற இடங்கள் | École Normale |
அறியப்படுவது | லிப்மன் வண்ண ஒளிப்படக்கலை Integral 3-D photography நுண்புழை மின்னழுத்தமானி |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1908) |
காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஃப்ரெஞ்சு அறிவியல் அறிஞர். வெள்ளொளியில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டியவர். குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக 1908 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
வரலாறு
[தொகு]பிரெஞ்சு -யூதத் தம்பதிகளுக்கு மகனாக 1845 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் காபிரியேல் லிப்மன் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய ஆரம்பக்க் கல்வியைப் பெற்றார். 1858 -ல் லைசி நெப்போலியன் என்ற இடத்தில் தன்னுடைய படிப்பை ஆரம்பித்த இவர் பத்து வருடங்களுக்குப் பின் நார்மலே என்ற ஊரில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
சிறு வயதில் இவருடைய கல்வி சிறப்பாக அமையவில்லை. கட்டுப்பாடற்ற மானவராகவும் இருந்தார். தனக்குப் பிடித்த விவரங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார். அதனால் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால் ஆர்வம் காட்டிய துறைகளில் அனைவரையும் விட சிறந்து விளங்கினார்.
பணிகள்
[தொகு]1873 -ல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அறிவியல் குழு ஒன்று ஜெர்மனியில் ஆய்வுகள் நடத்தச் சென்றது. அறிவியல் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றி ஆய்வு நடத்த இவரும் அக்குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அப்போது ஹெய்டல்பர்க்கில் வில்ஹெம் குனே, கிர்க்காஃப் என்ற அறிவியல் அறிஞர்களுடனும் பெர்லினில் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியல் அறிஞருடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்புப் பெற்றார்.
1878 இல் பாரிசில் அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கான தேர்வில் தோல்வியடைந்ததால் தகுதிச் சான்றிதழ் பெறாத போதும் இவருடைய திறமை கருதி சார்போன் பல்கலைக் கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து 'ஆய்வியல் இயற்பியல்' (Experimental Physics) பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அதன் பிறகு சார்போனுக்கு இடம் பெயர்ந்த லிப்மன் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றின் இயக்குநராக அமர்த்தப்பட்டார். இவருடைய இறுதிக்காலம் வரை இந்தப் பணியில் நிலையாக இருந்தார்.
கண்டுபிடிப்புகள்
[தொகு]லிப்மனின் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல், இயற்பியலில் மின்னியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், ஒளியியல் , ஒளிப்பட வேதியியல் ஆகியவற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உதவியது. இயற்பியலில் பல பிரிவுகளைல் பயன்படுத்தப்பட்டு வந்த பல திட்ட அளவுக் கருவிகளின் புனைதிறன் மற்றும் சீர்திருத்தங்களுக்கு இவர் காரணமாக இருந்தார்.
உடலியல் பேராசிரியர் வில்லெம் குனே என்பவர் இவருக்கு ஓர் ஆய்வினைச் செய்து காண்பித்தார். ஒரு துளி பாதரசத்தை வைத்து அதன் மேல் நீர்த்த கந்தக அமிலத்தை சிறிதளவு விட்டார். ஒரு சிறிய மெல்லிய இரும்புக்கம்பியால் பாதரசத்தைத் தொட்ட போது அது சற்று சுருங்கி விரிந்தது. இந்த ஆய்வைக் கவனித்த லிப்மன் இதற்கான விளக்கத்தை அளித்தார். பாதரசத்திற்கும் அமிலத்திற்கும் இடையே கம்பியைச் செலுத்தும் போது மிகச் சிறிய அளவு மின்னோட்டம் அந்தக் கம்பியில் ஏற்படுகிறது என்றும் அதன் காரணமாக அது சுருங்குகிறது. கம்பியை எடுத்ததும் மின்னோட்டம் இல்லாததால் அது பழைய நிலைக்கு விரிகிறது என்றும் கண்டறிந்தார்.
நுண்புழை மின்னழுத்த மானி
[தொகு]ஹெய்டல்பர்க்கில் இவர் ஆய்வுகள் நடத்தியபோது, நுண்புழைத்தன்மைக்கும், மின்சாரத்திற்குமுள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்தார். மிக நுண்மையான, மிகச் சிறப்புபெற்ற 'நுண்புழை மின்னழுத்த மானி' ஒன்றை உருவாக்கினார். இது மிகக் குறைவான மின்னழுத்தத்தை அளக்க உதவியது, அதனால் இது இதயத்துடிப்பை வரை படமாக அளவிடும் (Electro Cardio Graph)கருவியில் பயன்பட்டது.
வெப்ப இயக்கவியல்
[தொகு]வெப்ப இயக்கவியல் ஆய்வுகளை மேற்கொண்ட லிப்மன் எந்த ஒரு வெப்ப இயக்க முறைக்கும், மீள்செயல் முறையும் உண்டு என்பதையும் அவ்வாறு மீள் செயல் முறை நடைபெறும் போது உண்டாகும் மாற்ற அளவைக் கணக்கிடப் பொதுவான தேற்றம் ஒன்றை லிப்மன் உருவாக்கினார்.
வண்ணப் புகைப்படங்கள்
[தொகு]1886 ல் ஒளிப்படங்களை உருவாக்குவது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அதிலும் வண்ணப் புகைப்படங்களை எப்படி உருவாக்குவது என்று ஆராய்ந்தார். ஆனால் அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் தளராமல் மிகவும் பொறுமையாக ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து ஒளியின் நிறங்களைக் கொண்டு குறுக்கீட்டு விளைவு முறையில் வண்னப் புகைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தார். இதை அறிவியல் சங்கத்திற்கு 1893-ல் முறையாக அறிவித்தார். தன்னால் எடுக்கப்பட்ட புகைப் படங்களையும் வழங்கினார். 1894 -ல் தன்னுடைய ஆய்வு முழுவதையும் ஆய்வுக்கட்டுரையாகத் தொகுத்து வெளியிட்டார்.
1895 -ல் ஒளிப்படங்களைப் பதிவு செய்யும் போது அவை தாமே நிர்ணயித்துக்கொள்கின்ற கால அளவிற்கான சமன்பாட்டை நீக்குவதற்கு ஒரு முறையை உருவக்கினார். இவர் கண்டுபிடித்த முறையில் வண்ணப்படம் எடுப்பது சிறப்பு என்றாலும் அதற்கான ஒளியை எடுத்துக்கொள்ளும் நேரம் (Exposure Time)அதிகமாக இருந்தது.
சிறப்புகள்
[தொகு]- ஊசல் கடிகாரம் ஒழுங்கற முறையில் இயங்குவதைத் தவிர்ப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினர்
- வானவியலில் கொயலோஸ்டாட் என்ற கருவியைக் கண்டறிந்தார். ஒரு நட்சத்திரத்தையும் அதைச் சுற்றியுள்ள நட்சத்திரத்தையும் புவியின் சுழற்சியினால் மாறுதல் ஏற்படாதவாறு அசைவற்ற நிலையில் அவற்றை ஒளிப்படமாக எடுக்க இக்கருவி உதவியது.
- வானத்தைப் புகைப்படம் எடுக்கும்போது, தானாகவே அதில் தீர்க்க ரேகை பதியும்படி ஒரு கருவியை இவர் வடிவமைத்தார்.
- தந்தி அலைகளைப் பயன்படுத்தி நில நடுக்கத்தைப் பதிவு செய்வதோடு அது எவ்வாறு பரவிச் செல்கிறது என்பதையும் இவர் கண்டுபிடித்த கருவி பதிவு செய்தது.
- சார்போனில் இவர் பணியாற்றிய போது அங்கு பயின்ற மேரி கியூரிக்கு இவர் ஆலோசகரகவும் செயல்பட்டார். தன்னுடைய ஆய்வகத்தை பயன்படுத்த அவருக்கு அனுமதி அளித்தார். பியர் கியூரி இவருடைய சிறந்த மாணவராக விளங்கிய போது மேரிக்கு, பியர் கியூரியை அறிமுகம் செய்து வைத்ததும் இவர்தான். இவர் ஆய்வு செய்துவந்த 'படிக மின்னழுத்த ஆய்வினைத்' தான் பியர் கியூரி தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்.
- பாரிஸிலுள்ள அறிவியல் சங்கத்தில்தான் இவருடைய ஆய்வு முடிவுகள் கட்டுரைகளாக அளிக்கப்பட்டன. வண்ணப் படம் எடுப்பது பற்றிய இவருடைய ஆய்வுக்கு 1908 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.
- ஜெர்மனியில் பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை பிரெஞ்சு நாட்டுப் பத்திரிக்கைகளில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
- 1886 இல் பாரிஸ் அறிவியல் சங்கத்தில் உறுப்பினரானார். 1912 இல் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்க்கரேகைக் குழுவில் உறுப்பினராயிருந்தார்.
- லண்டனில் உள்ள ராயல் கழகம் இவரை அயல்நாட்டு உறுப்பினராக அமர்த்தியது. இவருடைய மதிப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
வட அமெரிக்காவிற்கு ஒரு குழுவினருடன் கப்பலில் பயணம் சென்று கனடா விலிருந்து பிரான்ஸ் திரும்பும்போது 1921, ஜூலை 13 ஆம் நாள் எதிர் பாராமல் மரணம் அடைந்தார்.
உசாத்துணை
[தொகு]அறிவியல் ஒளி, ஆகஸ்ட் 2009 இதழ்
இவற்றையும் பார்க்க
[தொகு]http://en.wikipedia.org/wiki/Gabriel_Lippmann
http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1908/lippmann-bio.html
http://www.crpgl.lu/index.php?id=37&L=2 பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
http://www.nobel-winners.com/Physics/gabriel_lippmann.html