பாரதப்புழா
பாரதப்புழா | |
---|---|
ஷொர்ணூர் பாலத்தில் இருந்து | |
பாரதப்புழையின் ஓட்டத்தை காட்டும் வரைபடம் | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆனைமலை |
⁃ அமைவு | தமிழ் நாடு, இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 10°36′N 77°07′E / 10.600°N 77.117°E |
⁃ ஏற்றம் | 2461 மீ. |
முகத்துவாரம் | இலட்சத்தீவுக் கடல் |
⁃ அமைவு | பொன்னானி |
⁃ ஆள்கூறுகள் | 10°47′23.89″N 75°55′17.42″E / 10.7899694°N 75.9215056°E |
நீளம் | 209 கி.மீ. (130 மைல்) |
வடிநில அளவு | 6,186 கி.மீ.² |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | பொன்னானி |
⁃ சராசரி | 161161 மீ³/நொ. |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | தூதப்புழா, காயத்ரிப்புழா, கல்பாத்திப்புழா, கண்ணாடிப்புழா |
பாரதப்புழா (ഭാരതപ്പുഴ) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மையான ஆறுகளுள் ஒன்று. மலையாள மொழியில் புழா என்ற சொல் ஆற்றை குறிக்கிறது. இது மாநிலத்தின் இரண்டாவது பெரிய[1] ஆறு. இந்த ஆறு நிளா என்றும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் வழியாக செல்லும் ஆறுகளில் மிக நீளமானது பாரதப்புழா தான் என்றாலும், முழுவதும் கேரள மாநிலத்திலேயே ஓடும் பெரியாற்றையே கேரளத்தின் நீளமான ஆறாக கருதுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி இலட்சத்தீவுக் கடலில் கலந்துவிடும் பாரதப்புழா 209 கி.மீ. தூரத்தை கடக்கிறது. பாரதப்புழா சாதாரண ஒரு ஆறு மட்டுமல்ல, கேரளாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகும். நிளா ஆற்றங்கரை அதன் இயற்கை எழிலுக்கு மிகவும் பிரபலமானது. அதிகப்படியான மணல் அள்ளுதல் இந்த ஆற்றை முற்றிலுமாக அழித்து, நீர்போக்குவரத்துக்கு தகுதியற்றதாகவும் மாற்றி விட்டது. நிளாவின் இருப்பு மலையாள இலக்கியத்திலும் பல மலையாளிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆறுக்கு தூய திராவிடப் பெயர்களான பேராறு, கோரயாறு, வரட்டாறு, வாளையாறு என்றும், வடமொழியில் பாரதப்புழா, நிளா, காயத்திரி, மங்களநதி ஆகிய பெயர்களும் உள்ளன.
ஆற்றின் பாதை
[தொகு]பாரதப்புழா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலையில் (தமிழ்நாடு) இருந்து உருவாகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆறு கேரளாவின் பாலக்காடு, திருச்சூர் மற்றும் மலப்புறம் மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் நவ முகுந்தன் கோயில் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திரூர் ஆறு உட்பட பல கிளை நதிகள் வழியில் இதனுடன் இணைகின்றன. இந்த ஆறு பொள்ளாச்சி வரை சுமார் 40 கி.மீ தொலைவில் வடக்கு நோக்கி பாய்கிறது. கண்ணாடிப்புழாவும், கல்பாத்திப்புழாவும் பாலக்காடு மாவட்டத்திலுள்ள பறளி எனுமிடத்தில் பாரதப்புழாவுடன் இணைகின்றன. அங்கிருந்து பாரதப்புழா மேற்கு நோக்கிப் பாய்ந்து பொன்னானியை அடைந்து லட்சத்தீவுக் கடலில் விழுகிறது.
கடலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பகுதி தவிர, பாரதப்புழாவின் மற்ற பகுதிகள் நதி போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. இதற்குக் காரணம் மணல் அள்ளுதலே. 6,186 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரதப்புழா ஆற்றுப் படுகை கேரளாவில் உள்ள அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் மிகப்பெரியது. இதில் மூன்றில் இரண்டு பங்கு (4,400 சதுர கி.மீ.) பகுதி கேரளாவிலும், மீதி (1,786 சதுர கி.மீ) தமிழ்நாட்டிலும் உள்ளது[2]. பெரிய ஆற்றுப் படுகையைக் கொண்டிருந்தாலும், கேரளாவில் உள்ள மற்ற ஆறுகளுடன் ஒப்பிடும்போது பாரதப்புழாவின் ஓட்டம் குறைவாகவே உள்ளது. ஏனென்றால், ஆற்றின் பெரும்பகுதி அதிக மழை பெய்யாத பகுதிகளில் பாய்கிறது. நதிப் படுகையின் நிலைத்தன்மைக்கான அறிவியல் மேலாண்மைத் திட்டத்தின் அவசியத்தை, அண்மைக்கால காலநிலை முரண்பாடுகள் மற்றும் படுகையில் உள்ள நீரியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு ஒன்று எடுத்துரைக்கிறது[3]. சுதந்திரத்திற்குப் பிறகு, ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டதால், பாரதப்புழாவின் நீரோட்டம் குறைந்தது. கோடை காலத்தில் ஆற்றின் பல பகுதிகளில் நீர்வரத்து இல்லை. இதற்கு சட்டவிரோத மணல் அகழ்வும் காரணம்[4]. கடுமையான கழிவுப் பிரச்சினை மற்றொரு காரணம். ஆற்றின் நீர்வரத்தை அதிகரிக்கவும், குப்பைகள் வருவதை தடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், எதுவும் பலனளிக்கவில்லை. ஆற்றின் சீரழிந்துவரும் நிலமைக்கு காரணங்களாக இருப்பவை எவை என்பதை ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது[5]..
- காடழிப்பு மற்றும் கரையோர தாவரங்களின் இழப்பு,
- அணைகள் மற்றும் பிற தடுப்புகள்
- மாசுபாடு
- மணல் அகழ்வு
- பூர்வீகமற்ற இனங்கள்
- பருவநிலை மாற்றம்
- கட்டுப்பாடற்ற மீன் இனங்களின் ஏற்றுமதி
- அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள்
பாரதப்புழா பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் உயிர்நாடியாகும். பாலக்காடு, பறளி, கிள்ளிக்குறிச்சிமங்கலம், ஒற்றப்பாலம், ஷொர்ணூர், பட்டாம்பி, திரித்தாலா, வரண்டுகுற்றிக்கடவு, திருவேகப்புற, கூடல்லூர், பள்ளிப்புறம், குற்றிப்புறம், கும்பிடி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக பாரதப்புழா பாய்கிறது. பள்ளிபுறம் நகரத்தை உள்ளடக்கிய புருதூர் கிராமத்தில் தான், தூதப்புழா மற்றும் பாரதப்புழா இணைகின்றன. காயத்திரிப்புழா, மாயன்னூரில் பாரதப்புழாவுடன் இணைகிறது.
நீர்ப்பாசனம்-போக்குவரத்து
[தொகு]பாரதப்புழாவின் குறுக்கே தற்போது ஏழு அணைகள் உள்ளன. இரண்டு புதிய அணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. பாரதப்புழா மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே உள்ள அணைகளில் மிகப்பெரியது மலம்புழா அணையாகும். வாளையார் அணை, மங்கலம் அணை, போத்துண்டி அணை, மீன்கரா அணை, சுள்ளியாறு அணை மற்றும் காஞ்சிரபுழா அணை ஆகியவை பாரதப்புழாவில் உள்ள மற்ற அணைகள் ஆகும். கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் பாசனத்திற்காக மட்டுமே. இந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் 773 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றன. சித்தூர் அணை கட்டுமானத்தில் உள்ளது. இந்த அணைகள் கட்டி முடிக்கப்படும் போது மொத்த பாசனப் பரப்பு 542 சதுர கி.மீ. என மதிப்பிடப்படுகிறது. பாரதப்புழாவின் குறுக்கே வெள்ளியங்கல்லில் புதிய தடுப்பணை சமீபத்தில் கட்டப்பட்டது. இந்த பாலம் பள்ளிபுறம் மற்றும் திரித்தாலாவை இணைக்கிறது. மாயன்னூர் பாலம் பாரதப்புழாவின் குறுக்கே உள்ள மிக நீளமான பாலமாகும். சுமார் ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் ஒரே நேரத்தில் பாரதப்புழா மற்றும் பாலக்காடு-சொற்ணூர் ரயில்பாதையைக் கடக்கிறது. மலப்புறம் மாவட்டம் பொன்னானி அருகே உள்ள சம்ரவட்டத்தில் உள்ள தடையணப் பாலம் பொன்னானி மற்றும் திரூரைச் சிறிது தூரத்தில் இணைக்கிறது. மேலும், இந்த பாலம் கொச்சி-கோழிக்கோடு தூரத்தை 40 கி.மீ. குறைக்க உதவுகிறது.
மீன்வளம் மிக்க ஆறு
[தொகு]பாரதப்புழாவின் மற்ற சிறப்புகள் இருக்க, மீன்வளத்திலும் இந்த ஆற்றின் பங்கு சிறந்தது என்பதை ஒரு ஆய்வின் மூலம் தெரிகிறது[6]. இந்த ஆய்வின் போது 43 குடும்பங்களின் கீழ் மொத்தம் 117 இனங்கள் நீர்வாழ் மீன்கள் இந்த நதியிலிருப்பதாக தெரியவந்தது. இவற்றில் 98 முதன்மை நன்னீர், மற்றும் 19 இரண்டாம் நிலை நன்னீர் இனங்கள் என்றும் தெரிகிறது. பாரதப்புழாவில் காணப்படும் இருபத்தெட்டு சதவீத உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தமானவை.
கலாச்சார முக்கியத்துவம்
[தொகு]கேரளாவின் கலாச்சாரத்திற்கு மிகவும் பங்களிக்கும் நதியாகும் நிளா. கேரள பாரம்பரியத்திற்கு இணையான ஆறு இது. பாரதப்புழாவின் கரை கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். எனவே, பல சமகாலத் திரைப்படங்களில் இப்பகுதி காட்சியாக்கப்பட்டுள்ளது. மகேந்திர பல்லவன் பேரரசர் காலத்தில் உள்ளூரிலிருந்து கலாச்சார வெளியேற்றம் இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுகிறார்கள். தடுக்க முடியாத நிளா அன்றாடம் நீராடல் மற்றும் ஜெபநிஷ்டையில் ஆர்வமுள்ள ஒரு சாராரை கவர்ந்திருக்கக்கூடும். அவ்வாறு கலை பாரம்பரியம் கொண்ட மக்கள் பலர் நதியின் இருபுறமும் வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களின் சந்ததியினரும் தாயாதிகளும் கலந்த ஒரு குழுவினர் கலைகளிலும் இலக்கியத்திலும் நிபுணத்துவத்துடன் இந்த மண்ணில் பிறந்துள்ளனர். குஞ்சன் நம்பியார், துஞ்சத்து எழுத்தச்சன் முதலானோருட்பட பல சமகால எழுத்தாளர்கள் பாரதப்புழாவின் கரைகளிலே தான் பிறந்து வளர்ந்தனர். எம். டி. வாசுதேவன் நாயர், எம். கோவிந்தன், வி.கே.என். முதலானோர் இந்த பகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் வண்ண-நாட்டிய கலைகளின் மையமான கேரள கலாமண்டலம், பாரதப்புழாவின் கரையில் அமைந்துள்ளது. பாரதப்புழா அருகே திருவில்வமலையில் உள்ள ஐவர் மடம் இந்துக்களின் புனித மயானமாகும். பாரதப்புழா நதிக்கரையில் தகனம் செய்யப்படுபவர்கள் மோட்சம் அடைவர் என நம்பப்படுகிறது. இறந்துபோன முன்னோர்களுக்கு நற்கதி ஏற்பட இந்த ஆற்றின்கரையோரம் சிராத்தம் செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. கேரளத்தின் கலாச்சார மையங்களாக அறியப்படும் திருவில்வாமலை, ஒற்றப்பாலம், ஷொர்ணூர், பட்டாம்பி, குற்றிபுறம், திருநாவாய் மற்றும் துஞ்சன் பறம்பு ஆகிய அனைத்தும் நிளா நதிக்கரையோரம் அமைந்துள்ளன. பிரபல இந்து சமய ஆலயங்களான மாசாணியம்மன் கோயில், சித்தூர்க்காவு, திருவாலத்தூர் இருமூர்த்தி பகவதி கோவில், கல்பாத்தி விஸ்வநாதசுவாமி கோவில், திருவில்வாமலை வில்வாத்ரிநாத் கோயில், திருவஞ்சிக்குழி சிவன் கோவில், பூழிக்குன்று ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில், பட்டாம்பி மேற்கு மடம் குருவாயூரப்பன் கோவில், திருத்தால சிவன் கோவில், மல்லூர் சிவன்-பார்வதி கோவில், திருநாவாய் நவ முகுந்தன் கோயில், சம்ரவட்டம் சாஸ்தா கோவில், போன்றவை பாரதப்புழா மற்றும் அதன் துணை நதிகளான கல்பாத்திப்புழா மற்றும் கண்ணாடிப்புழாவின் கரையில் அமைந்துள்ளன.
துணையாறுகள்
[தொகு]பாரதப்புழையின் துணையாறுகளின் பட்டியல் கீழெ வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
- தூதப்புழா
- காயத்ரிப்புழா
- மங்கலம் ஆறு
- அயலூர்ப்புழா
- வண்டாழிப்புழா
- மீங்காரப்புழா
- சுள்ளியாறு
- கல்பாத்திப்புழா
- கண்ணாடிப்புழா
- பாலாறு
- ஆழியாறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராஜ் பி.என்., அநூப்; பத்மநாபன், பிரமோத் (2023/12/03). "இந்தியா, கேரளா, பாரதப்புழா நதிப் படுக்கையில் பறவைகளின் பன்முகத்தன்மை மற்றும் விநியோகம்". ரிசர்ச்ச் கேட். https://www.researchgate.net/publication/376185425_Diversity_and_distribution_of_birds_in_the_Bharathapuzha_River_Basin_Kerala_India.
- ↑ பி.பி., நிகில் ராஜ் (2011). தென்னிந்தியாவின் பாரதப்புழா ஆற்றுப் படுகையில் சுற்றுச்சூழல் மாற்றங்களின் பகுப்பாய்வு (Thesis). ரிசர்ச்ச் கேட்.
- ↑ பி.பி., நிகில் ராஜ் (2010). "வெப்பமண்டல ஆற்றுப் படுகையில் நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பு மாற்றங்கள்: தென்னிந்தியாவின் பாரதப்புழா நதிப் படுகையில் இருந்து ஒரு வழக்கு" (in en). புவியியல் தகவல் அமைப்பின் இதழ் (Journal of Geographic Information System) 2 (4): 185-193. doi:10.4236/jgis.2010.24026. https://www.scirp.org/journal/paperinformation?paperid=2912. பார்த்த நாள்: 2023-12-15.
- ↑ ஏ, தீபா (2005-06-14). "ஆற்றில் சுரங்கமிடுதல் (Mining away the river)". இந்தியா ஒன்றாக. indiatogether.org. பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.
- ↑ ஏ, பிஜுகுமார்; ஃபிலிப், எஸ்.; அலி, ஏ.; ஸுஷமா, எஸ்.; ராகவன், ஆர். (2013). "பாரதப்புழா நதியின் மீன்கள், கேரளா, இந்தியா: பன்முகத்தன்மை, விநியோகம், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு". Journal of Threatened Taxa 5 (15): 4979–4993. doi:10.11609/JoTT.o3640.4979-93. https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/1528/2802. பார்த்த நாள்: 2023-12-15.
- ↑ ஏ, பிஜுகுமார்; ஃபிலிப், எஸ்.; அலி, ஏ.; ஸுஷமா, எஸ்.; ராகவன், ஆர். (2013). "பாரதப்புழா நதியின் மீன்கள், கேரளா, இந்தியா: பன்முகத்தன்மை, விநியோகம், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு". Journal of Threatened Taxa 5 (15): 4979–4993. doi:10.11609/JoTT.o3640.4979-93. https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/1528/2802. பார்த்த நாள்: 2023-12-15.