உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி நாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி நாராயண்

சுவாமிநாராயண் (3 ஏப்ரல் 1781 - 1 சூன் 1830) என்பவர், இந்து சமயத்தில் அண்மைக் காலத்தில் உருவான பிரிவுகளில் ஒன்றான சுவாமிநாராயண் இந்து சமயப் பிரிவின் நிறுவனர் ஆவார். இவரை சகசநாத் சுவாமி என்ற பெயரிலும் அழைப்பர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சப்பையா என்னும் ஊரில் 1781 ஆம் ஆண்டில் பிறந்த இவரது இயற்பெயர் கண்சியாம் பாண்டே. 1792ல், இவரது 11 ஆவது வயதில் இந்தியாவின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய யாத்திரை ஒன்றை ஆரம்பித்தார். ஏழு ஆண்டுகள் எடுத்த இந்த யாத்திரையின் போது இவர் நீலகண்டர் என்னும் பெயரைப் பெற்றார்.

மேற்சொன்ன யாத்திரையின்போது பல்வேறு சமுதாய நலனுக்கான செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டார். இந்தப் பயணம் முடிந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளின் பின்னர், 1799ம் ஆண்டளவில் குசராத் மாநிலத்தில் குடியேறினார். 1800ல் இவரது குருவான சுவாமி இராமானந்தர் என்பவரால் உத்தவ் சம்பிரதாயம் என்னும் அமைப்பினுள் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இங்கே அவருக்கு சகசநாத் சுவாமி என்னும் பெயர் வழங்கப்பட்டது. இவரது குரு இறக்குமுன், உத்தவ் சம்பிரதாயத்தின் தலைமைப் பொறுப்பை சகசநாத் சுவாமிக்கு அளித்தார். சகசநாத் சுவாமி கூட்டமொன்றைக் கூட்டி சுவாமிநாராயண் மந்திரத்தைக் கற்பித்தார். இதிலிருந்து இவர் சுவாமிநாராயண் என்னும் பெயர் பெற்றார். உத்தவ் சம்பிரதாயமும் சுவாமிநாராயண் சம்பிரதாயம் என்ற பெயரைப் பெற்றது

இளமைக்காலம்

[தொகு]
கண்சியாம் தனது தந்தையிடம் சமய நூல்களைக் கற்கிறார்.

சுவாமிநாராயண், 3 எப்ரல் 1781ல், இந்தியாவின் இந்தி பேசும் பகுதியில், அயோத்திக்கு அருகில் உள்ளதும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்ததுமான சப்பையா என்னும் ஊரில் பிறந்தார்.[1] சர்வாரியா பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையார் அரிப்பிரசாத் பாண்டே, தாயார் பிரேமாவதி பாண்டே. தந்தையார் தர்மதேவர் என்ற பெயராலும், தாய் பக்திமாதா அல்லது மூர்த்திதேவி ஆகிய பெயர்களாலும் பொதுவாக அறியப்பட்டனர்.[1] சுவாமிநாராயணின் பிறப்பு இராமரின் பிறந்த நாளான இராம நவமி அன்று இடம்பெற்றது. சித்திரை மாதம் வளர்பிறையில் ஒன்பதாம் நாள் இராம நவமியும், சுவாமிநாராயண் பிறப்பும் சுவாமி நாராயணைப் பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டம் சுவாமிநாராயண் பக்தர்களின் கிரியைகளுக்கான நாட்காட்டியின் தொடக்கமாகவும் அமைகிறது.[2] சுவாமிநாராயணுக்கு ராம்பிரதாப் பாண்டே என்னும் பெயர்கொண்ட ஒரு அண்ணனும், இச்சாராம் பாண்டே என்னும் ஒரு தம்பியும் இருந்தனர்.[3] ஏழு வயதிலேயே சுவாமிநாராயண், வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல சமய நூல்களில் புலமை பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது.[4]

யாத்திரை

[தொகு]
யாத்திரையின்போது நீலகண்டர்

பெற்றோர் இறந்த பின்னர் கண்சியாம் பாண்டே 29 யூன் 1792ல், தனது 11 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். நீலகண்டர் என்னும் பெயருடன் இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்தின் சில பகுதிகளிலும் யாத்திரை மேற்கொண்டார்.[5] இந்து மெய்யியலின் முக்கியமான பிரிவுகளான வேதாந்தம், சாங்கியம், யோகம், பஞ்சராத்திரம் ஆகியவற்றைச் சரியாக விளங்கிக்கொண்டு செயற்படும் ஆசிரமம் அல்லது துறவிமடங்களைக் கண்டறிவதே இவரது நோக்கமாக இருந்தது. இத்தகைய ஆசிரமங்களைக் கண்டறிவதற்காக பின்வரும் ஐந்து கேள்விகளைக் கேட்டார்.[6][7]

  1. சீவன் என்பது என்ன?
  2. ஈஸ்வரன் என்பது என்ன?
  3. மாயை என்பது என்ன?
  4. ஆத்மா என்பது என்ன?
  5. பரப்பிரம்மம் என்பது என்ன?

தனது யாத்திரையின்போது, கோபால் யோகி என்னும் வயதான யோகி ஒருவரிடம் ஒன்பது மாதங்களில் அட்டாங்க யோகாவைக் கற்றார்.[8] நேபாளத்தில் மன்னர் ராணா பகதூர் ஷாவைச் சந்தித்த நீலகண்டர் மன்னருக்கிருந்த தீர்க்க முடியாத வயிற்று நோயைக் குணப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. நீலகண்டரின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னர் தான் சிறையில் இட்டிருந்த துறவிகள் பலரை விடுவித்தாராம்.[9] நீலகண்டர் பூரியில் உள்ள சகந்நாத் கோயிலுக்கும், பத்திரிநாத், இராமேசுவரம், நாசிக், துவாரகை, பந்தர்பூர் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்கும் சென்றார்.[5]

1799ல் தனது ஏழு ஆண்டு யாத்திரையை நீலகண்டர் குசராத் மாநிலத்தின் சுனாகத் மாவட்டத்திலுள்ள லோச் என்னும் ஊரில் முடித்துக்கொண்டார். இவ்வூரில், அவர் இராமானந்த சுவாமியின் மூத்த சிடர்களில் ஒருவரான முக்தானந்த சுவாமியைச் சந்தித்தார். நீலகண்டரைவிட 22 ஆண்டுகள் மூத்தவரான முக்தானந்த சுவாமி, நீலகண்டருடைய ஐந்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.[10] இராமானந்த சுவாமியைச் சந்திப்பதற்காக அங்கேயே தங்கியிருந்த நீலகண்டர் சில மாதங்களுக்குப் பின்னர் இராமானந்த சுவாமியைச் சந்தித்தார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Williams 2001, ப. 13
  2. Williams 2001, ப. 141
  3. Makarand R. Paranjape (2005). Dharma and development: the future of survival. Samvad India. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-901318-3-4. பார்க்கப்பட்ட நாள் 12 September 2009.
  4. M. Gupta (2004). Let's Know Hindu Gods and Goddesses. Star Publications. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7650-091-3. பார்க்கப்பட்ட நாள் 15 May 2009.
  5. 5.0 5.1 "Sampradat history: Nilkanth Varni". Harrow, England: Shree Kutch Satsang Swaminarayan Temple. Archived from the original on 2009-06-30. பார்க்கப்பட்ட நாள் 2009-07-06.
  6. Williams 2001, ப. 15
  7. Williams 2001, ப. 36
  8. Dinkar Joshi; Yogesh Patel (2005). Glimpses of Indian Culture. Star Publications. pp. 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7650-190-3. பார்க்கப்பட்ட நாள் 7 May 2009.
  9. Gujarat (India) (1969). Gujarat State Gazetteers: Bhavnagar. Directorate of Govt. Print., Stationery and Publications, Gujarat State. p. 577. பார்க்கப்பட்ட நாள் 15 May 2009.
  10. Williams 2001, ப. 75
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_நாராயண்&oldid=3555186" இலிருந்து மீள்விக்கப்பட்டது