திருப்பள்ளியெழுச்சி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும்.
திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு பொதுவாகக் கன்னிப் பெண்களே கடைப்பிடிப்பர். நோன்புகாலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரைத் துயில் எழுப்பி அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று திருப்பாவையில் கண்ணன் மற்றும் திருவெம்பாவையில் அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். அப்பொழுதில் பாடும் பாடல்களாகவும் இவை கொள்ளப்படுகின்றன.
திருப்பதியில் அதிகாலையில் ஆலயத்தில் இசைக்கப்படும் 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', இந்தியா முழுவதிலும் பிரசித்தி பெற்ற ஒன்று. சமஸ்கிருத மொழியிலமைந்த இந்த சுப்ரபாதம், கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் மணவாள மாமுனிகள் ஆணைக்கிணங்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியரால் இயற்றப்பட்டு இன்றளவும் பாடப்பெற்றுவருகிறது. எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் இந்த சுப்ரபாதம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இதன் தமிழ் வடிவமும் எம். எஸ். சுப்புலக்ஷ்மியாலே பாடப்பட்டுள்ளது.
மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.
இவை தவிர சபரிமலையில் அதிகாலையில் 'ஐயப்ப சுப்ரபாதம்' இசைக்கப்படுகிறது, விக்னேஷ்வர சுப்ரபாதம், பாடகர் கே. ஜே. யேசுதாசால் பாடப் பெற்றுள்ளது.
திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்
[தொகு]தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி
[தொகு]
- 1. கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
- மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
- எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
- அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா. பள்ளி யெழுந்தரு ளாயே.
- 2. கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
- எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
- விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி
- அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த அரங்கத்தம் மா. பள்ளி யெழுந்தரு ளாயே.
- 3. சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,
- படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்,
- மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,
- அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம் மா. பள்ளி யெழுந்தரு ளாயே.
- 4. மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,
- ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,
- வாட்டிய வரிசிலை வானவ ரேறே. மாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்
- ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே. அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
- 5. புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,
- கலந்தது குணதிசை கனைகட லரவம் களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,
- அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
- இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே.
- 6. இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ? இறையவர் பதினொரு விடையரு மிவரோ?
- மருவிய மயிலின னறுமுக னிவனோ? மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,
- புரவியோ டாடலும் பாடலும் தேரும் குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,
- அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ? அரங்கத்தம் மா. பள்ளி யெழுந்தரு ளாயே.
- 7. அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ? அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?
- இந்திர னானையும் தானும்வந் திவனோ? எம்பெரு மானுன் கோயிலின் வாசல்,
- சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
- அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ? அரங்கத்தம் மா. பள்ளி யெழுந்தரு ளாயே.
- 8. வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,
- எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,
- தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ? தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,
- அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மா. பள்ளி யெழுந்தரு ளாயே.
- 9. ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,
- கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,
- மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
- ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
- 10. கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ? கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?
- துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,
- தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
- அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்- காட்படுத் தாய்.பள்ளி எழுந்தரு ளாயே.
மணிவாசகரின் திருப்பள்ளியெழுச்சி
[தொகு]
- கூவின பூங்குயில்; கூவின கோழி;
- குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
- ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
- ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
- தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
- திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
- யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
- எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்
[தொகு]- THIRUPALLIYEZHUCHI
- Pasurams by Thondaradi Podi Alvar பரணிடப்பட்டது 2007-05-03 at the வந்தவழி இயந்திரம்
- Kanchi Periva Forum
- Chennai Library பரணிடப்பட்டது 2016-10-24 at the வந்தவழி இயந்திரம்