உள்ளடக்கத்துக்குச் செல்

மார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மார்த்தா
Saint Martha
மேரி மற்றும் மார்த்தா வீட்டில் இயேசு. (இடது:மார்த்தா; இயேசுவின் அருகே மரியா). ஓவியர்: ஹேரல்ட் கோப்பிங்.
கன்னியர்; வெள்ளைப்போளம் கொணர்பவர்; தெற்கு கால் நாட்டு புதுமைபுரிபவர்
பிறப்புயூதேயா எனத் தெரிகிறது. இன்றைய இசுரயேல் - மேற்குக் கரை
இறப்புமரபுப்படி சைப்ரசு நாட்டு லார்னாக்கா. அல்லது பிரான்சு நாட்டு தாராஸ்கோன்
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்கம், கீழைக் கிறித்தவம், ஆங்கிலிக்கம், லூதரனியம்
புனிதர் பட்டம்வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம்
திருவிழாசூலை 29 (உரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூதரனியம்); சூன் 4 (மரபுவழி சபை)
சித்தரிக்கப்படும் வகைவிளக்குமாறு; தாழ்ப்பாள்கள்; அகப்பை[1]
பாதுகாவல்உதவியாளர்; சமையல் செய்வோர்; உணவுநெறியாளர்; வீட்டுவேலை செய்வோர்; வீட்டுப் பொறுப்பாளர்; விடுதியாளர்; வீட்டில் கூலிவேலை செய்வோர்; இல்லத்தலைவியர்; விடுதிக்காப்பாளர்; சலவைத் தொழிலாளர்; வேலைக்காரர்; தனித்த பெண்கள்; பயணம் செய்வோர்; எசுப்பானியாவின் வில்லாகோயோசா[1]

புனித மார்த்தா (Martha of Bethany) (அரமேயம்: מַרְתָּא - Martâ) என்பவர் புதிய ஏற்பாட்டு நூல்களாகிய லூக்கா நற்செய்தியிலும் யோவான் நற்செய்தியிலும் விவரிக்கப்படுகின்ற ஒருவர் ஆவார்.

மார்த்தாவும் அவருடைய உடன்பிறப்புகளான இலாசர் மற்றும் மரியா ஆகியோர் எருசலேம் அருகே பெத்தானியா என்னும் ஊரில் வாழ்ந்துவந்ததாக புதிய ஏற்பாடு தகவல் தருகின்றது. குடும்பத்தில் மரியா முதலிலும், அவருக்கு அடுத்தவராக இலாசரும், இருவருக்கும் இளையவராக மரியாவும் இருந்தனர். இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சியைக் கண்டவருள் மார்த்தாவும் ஒருவர்.

மார்த்தா என்னும் பெயர்ப் பொருள்

[தொகு]

மார்த்தா என்னும் பெயர் அரமேய மொழியிலிருந்து வருகிறது (מַרְתָּא Martâ). அதற்கு "தலைவி", "இல்லத்தரசி" என்பது பொருள். அப்பெயரே கிரேக்கத்தில் Μαρθα என்றும் இலத்தீனில் Martha என்றும் வரும். இப்பெயரின் அரமேய வடிவம் கி.பி. 5ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் அப்பெயரின் கிரேக்க வடிவம் Marthein என்று உள்ளது. [2]

மார்த்தா பற்றிய விவிலியக் குறிப்புகள்

[தொகு]
லூக்கா நற்செய்தி

இந்த நற்செய்தி நூலில் இயேசு தம் நண்பர்களான மார்த்தா, மரியா, லாசர் ஆகியோரின் வீடு சென்று அவர்களைச் சந்திக்கிறார். மரியா, மார்த்தா ஆகிய இரு சகோதரிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு அங்கே காட்டப்படுகிறது. அவர்களது வீட்டில் இயேசு விருந்தினராகச் சென்றபோது, மார்த்தா "பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்கிக்கொண்டிருந்தார்", ஆனால் மரியா "இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்"; எனவே அவர் "நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்" (காண்க: லூக்கா 10:38-42).[3]

இப்பகுதியில் மார்த்தா, மரியா, இலாசர் ஆகியோரின் வீடு எந்த நகரில் இருந்தது என்பதும், இயேசு எருசலேமுக்கு அருகில் இருந்தாரா என்பதும் சொல்லப்படவில்லை:

"அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, 'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும்' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, 'மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது' என்றார்" (லூக்கா 10:38-42).

யோவான் நற்செய்தி

யோவான் நற்செய்தியில் மார்த்தாவும் மரியாவும் இரு நிகழ்வுகளில் வருகின்றனர். ஒன்று, இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிரளித்தது, மற்றொன்று, மரியா இயேசுவுக்கு உணவு பரிமாறியபோது மார்த்தா இயேசுவுக்கு நறுமணத் தைலம் பூசியது.

இலாசருக்கு இயேசு உயிரளித்த நிகழ்ச்சியில் முதலில் மரியா வருகிறார், அதன்பின் அவருடைய சகோதரி மார்த்தா வருகிறார். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்ட உடனேயே மார்த்தா ஓடோடிச் சென்று அவரை வரவேற்கிறார். மரியாவோ வீட்டிலேயே இருந்தார். இயேசு சொல்லி அனுப்பிய பின்னரே மரியா வருகிறார்.

இங்கே மார்த்தா அங்குமிங்கும் சென்று காரியங்களைச் செய்வதில் முனைப்பாக இருப்பதும், மரியா அமைதியை நாடி சிந்தனையில் இருப்பதும் காட்டப்படுகிறது. இது லூக்கா நற்செய்தியில் வருகின்ற மார்த்தா மரியா ஆகியோரின் குணச்சித்திர விவரிப்புக்கு ஒத்திருக்கிறது (லூக்கா 10:38-42).[4]

இரு சகோதரிகளுமே இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றுதான் கூறுகிறார்கள் (யோவான் 11:21,32). ஆயினும், இயேசு மரியாவுக்கு அளித்த பதில் உணர்ச்சியையும் உள்ளத்தின் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது. மார்த்தாவிடம் இயேசு நம்பிக்கை கொள்ளும்படி அறிவுறுத்தி, போதனை வழங்குகிறார்:

இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசவை நோக்கி, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்' என்றார். இயேசு அவரிடம், 'உன் சகோதரன் உயிர்த்தெழுவான்' என்றார். மார்த்தா அவரிடம் , 'இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்' என்றார். இயேசு அவரிடம், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?' என்று கேட்டார். மார்த்தா அவரிடம், 'ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என்றார்" (யோவான் 11:20-27)

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, மார்த்தா மரியாவிடம் சென்று இயேசு அவரைத் தேடியதாகக் கூறுகிறார். மரியா வந்ததும் இயேசு அவரிடம் இலாசரை எங்கே வைத்தார்கள் என்று கேட்கிறார். மரியா இயேசுவை இலாசரின் கல்லறைக்குக் கூட்டிச் செல்கிறார். கல்லறையின் கல்லை அகற்றும்படி இயேசு கூறியதும் மார்த்தா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்: "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்பது மார்த்தாவின் கூற்று (யோவான் 11:39). இயேசு பதில்மொழியாக, "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என் நான் உன்னிடம் கூறவில்லையா" என்று கேட்டார் (யோவான் 11:40). அதன்பின் இலாசரின் கல்லறையின் கல் அகற்றப்படுகிறது. இயேசு அண்ணாந்து பார்த்து தம் தந்தையை நோக்கி வேண்டுகிறார். இலாசரும் சாவினின்று விடுபட்டு மீண்டும் உயிர்பெற்று எழுகின்றார்.

யோவான் நற்செய்தியில், மார்த்தா மீண்டும் வருகிறார். யோவான் நற்செய்தியின் பன்னிரண்டாம் அதிகாரத்தில் அந்நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார் என்றும் அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது என்று மட்டுமே அந்நற்செய்தி கூறுகிறது. அதற்கு இணையான பகுதிகளாக உள்ள மத்தேயு 26:6-3 பகுதியிலும், மாற்கு 14:3-9 பகுதியிலும் விருந்து "தொழுநோயாளரான சீமோன் வீட்டில் நிகழ்ந்தது" என்றுள்ளது.

எனவே, இந்த விருந்து சீமோனின் வீட்டில் நடந்திருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். ஆயினும், மார்த்தா விருந்து பரிமாறினார் என்று யோவான் கூறுவது கவனிக்கத்தக்கது. மேலும், விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைக் கொண்டு இயேசுவை மார்த்தாவின் சகோதரியான மரியா பூசினார் என்று யோவான் நற்செய்தி கூறுகிறது.[2]

கத்தோலிக்க மரபில் புனித மார்த்தா

[தொகு]
இசபெல்லா கட்டளை செப நூலில் மார்த்தா வடிவம். ஆண்டு: 1497

உரோமன் கத்தோலிக்க மரபில் மார்த்தாவின் சகோதரி மரியா, இயேசுவுக்கு நறுமண எண்ணெய் பூசிய "பாவியான பெண்ணாகிய" மகதலா மரியாவோடு பெரும்பாலும் இணைத்துப் புரிந்துகொள்ளப்பட்டார். அதுபோலவே மார்த்தா பற்றியும் சில மரபுச் செய்திகளும் விளக்கங்களும் உள்ளன.

யோவான் நற்செய்திப்படி, மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோர் பெத்தானியாவில் வாழ்ந்தனர். லூக்கா நற்செய்திப்படி, அவர்கள் சிறிது காலமாவது கலிலேயாவில் வாழ்ந்திருக்க வேண்டும். லூக்கா அவர்கள் வாழ்ந்த நகரத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த இடம் "மகதலா" என்னும் ஊராக இருந்திருக்கலாம். அவ்வாறென்றால் பெத்தானியா மரியாவும் மகதலா மரியாவும் ஒரே ஆளைக் குறிக்கக் கூடும். மார்த்தா பற்றி யோவானும் லூக்காவும் தருகின்ற விவரிப்பு மிகத் துல்லியமாக ஒத்திருக்கின்றன. இயேசு அவர்களோடு கொண்டிருந்த உறவு உண்மையிலேயே ஆழமானது: "மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்" (யோவான் 11:5). மார்த்தா இயேசுவுக்கு உணவு பரிமாறுவது பற்றியே கரிசனையும் கவலையும் கொண்டிருந்தார் (யோவான் 11:20-21,39; லூக்கா 10:40). ஆனால் படிப்படியாக மார்த்தாவின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவர் இயேசுவைக் கடவுள் தன்மை கொண்டவராக ஏற்கின்றார். தம் சகோதரியான மரியாவிடம் சென்று அதை அறிவிக்கின்றார் (காண்க: யோவான் 11:20-27).[2]

மார்த்தா பற்றிய பிற்காலப் புனைவுகள்

[தொகு]

விவிலியக் குறிப்புகளுக்கு வெளியே மார்த்தா பற்றிய புனைவுகள் எழுந்தன. அவற்றுள் ஒன்று 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "தங்க மரபுப் புனைவு" (Golden Legend) என்பதாகும். அதன்படி, இயேசுவின் இறப்புக்குப் பிறகு மார்த்தா யூதேயாவை விட்டுச் சென்றார். பிரான்சு நாட்டின் தென்பகுதியாகிய புராவான்சு என்னுமிடம் சேர்ந்தார். அவரோடு மார்த்தாவின் சகோதரி மரியாவும் (மகதலா மரியாவோடு இணைக்கப்பட்டவர்) சென்றார். கூடவே அவர்களின் சகோதரர் இலாசரும் போனார். அவர்களோடு மார்த்தா முதலின் அவிஞ்ஞோன் நகரில் தங்கினார்.

இப்புனைவுப்படி, மார்த்தா அரச பரம்பரையைச் சார்ந்தவர். அவருடைய தந்தை பெயர் சீரோ, தாய் பெயர் என்காரியா. மார்த்தாவுக்கு இருந்த சொத்துகளுள் மகதலா கோட்டை, பெத்தானியா மற்றும் எருசலேமின் ஒருபகுதி உள்ளடங்கும். இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின் அவருடைய சீடர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றதுபோல மார்த்தாவும் பிரான்சு நோக்கிச் சென்றார். அங்கே ட்ரீயர் நகர மாக்சிமின் என்பவர் மார்த்தாவுக்குத் திருமுழுக்கு வழங்கினார் (இந்த மாக்சிமின் மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது). பின்னர் மார்த்தா மர்சேய் நகருக்குச் என்று அங்கு பலரை மனம் திருப்பி, கிறித்தவ மதத்திற்குக் கொணர்ந்தார்.[5][6]

மார்த்தா பற்றிய தாராஸ்கோன் மரபுப் புனைவு

[தொகு]
பிரான்சு நாட்டில் தாராஸ்கோன் நகரில் மார்த்தா கோவில்
அரக்கப்பாம்புடன் மார்த்தா. மூலம்: 15ஆம் நூற்றாண்டு சுவடி
பிரான்சு நாட்டின் தாராஸ்கோன் நகரில் புனித மார்த்தாவின் கல்லறை

இன்னொரு புனைவுப்படி, மார்த்தா பிரான்சு நாட்டு தாராஸ்கோன் என்னும் நகரம் சென்றார். அங்கு ஓர் அரக்கப்பாம்பு மக்களை அச்சுறுத்தி வந்தது. மார்த்தா அந்த அரக்கப்பாம்பின் கொட்டத்தை அடக்கியதைத் தொடர்ந்து நகர மக்கள் அதைக் கொன்றனர். இறைவேண்டலிலும் கடின நோன்பு புரிவதிலும் ஈடுபட்ட மார்த்தா தாராஸ்கோன் நகரில் இறந்தார். அங்கே அவர் அடக்கம் செய்யப்பட்டார். இதைத் "தங்கமரபுப் புனைவு" கீழ்வருமாறு விவரிக்கிறது:

பிரான்சு நாட்டில், ஆர்ல் நகருக்கும் அவிஞ்ஞோன் நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் ரோன் ஆற்றங்கரையில் ஒரு காடு இருந்தது. அதில் ஓர் அரக்கப்பாம்பு வாழ்ந்துவந்தது. அது ஒரு பகுதி விலங்காகவும் மறுபகுதி மீனாகவும் தோற்றமளித்தது. அது ஒரு காளையை விடவும் பெரியது, ஒரு குதிரையைவிடவும் நீண்டது. அதன் பற்கள் வாள்போன்று கூரியவை. அதற்கு இருபுறமும் கொம்புகள் இருந்தன. அதன் தலை சிங்கத்தின் தலை போன்று இருந்தது. அதன் வால் பாம்பின் வால் போன்றது. அதன் இருபுறமும் பெரிய இறக்கைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு அது தன்னைப் பாதுகாத்துக்கொண்டது. கற்பாறைகளைக் கொண்டு அதை யாரும் கொல்ல முடியவில்லை. வேறு எந்த ஆயுதங்களைக் கொண்டும் அதை மாய்க்க இயலவில்லை. அந்த அரக்கப்பாம்புக்கு பன்னிரு சிங்கங்கள் அல்லது கரடிகளின் பலம் இருந்தது. அது ஆற்று நீருக்குள் மூழ்கி ஒளிந்துகொண்டிருந்தது. அருகே வந்தவர்களை அடித்துக் கொன்றது. அதுபோலவே ஆற்றில் வந்த கப்பல்களையும் கவிழ்த்துப் போட்டது. அந்த அரக்கப்பாம்பு எசுப்பானியாவின் கலீசியா பகுதியிலிருந்து கடல்வழியே இங்கு வந்ததாகும். அதன் மூதாதையர் லிவியத்தான் என்னும் கடற்பாம்பும் கலீசியா பகுதியில் உள்ள போனாக்கோ என்னும் விலங்கும் ஆகும். இந்த அரக்கப்பாம்பைத் துரத்தினால் அது தன் வயிற்றின் பின்பகுதியிலிருந்து கழிவுப்பொருளைப் பீச்சி அடிக்கும். அது துரத்திச் சென்றவர்களை ஒரு ஏக்கர் வரை சென்றடையக்கூடியது. பார்ப்பதற்கு அது கண்ணாடிபோல் மின்னும், ஆனால் அதைத் தொட்டாலோ அது தீயாகச் சுடும். நகர மக்கள் மார்த்தாவிடம் சென்று அரக்கப்பாம்பு இழைத்த கொடுமைகளைத் தெரிவித்தார்கள். அப்பாம்பிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டினார்கள். மார்த்தாவும் அப்பாம்பு வதிந்த காட்டுக்குப் போனார். அங்கே அப்பாம்பு ஒரு மனிதனைத் தின்றுகொண்டிருந்தது. மார்த்தா அரக்கப்பாம்பின் மீது திருத்தண்ணீரைத் தெளித்தார். சிலுவையை உயர்த்திக் காட்டினார். உடனேயே அரக்கப்பாம்பு ஓர் ஆட்டுக்குட்டிபோல் சாந்தமாகி நின்றுகொண்டிருந்தது. மார்த்தா தமது வார்க்கச்சையை அவிழ்த்து, அதைக்கொண்டு அரக்கப்பாம்பைக் கட்டினார். நகர மக்கள் வந்து தங்கள் ஈட்டிகளையும் வாள்களையும் கொண்டு அந்த அரக்கப்பாம்பைக் கொன்றார்கள். அந்த அரக்கப்பாம்பை மக்கள் தாராஸ்கோன் என்று பெயரிட்டு அழைத்தார்கள். அதுவே அவர்களுடைய நகரின் பெயரும் ஆயிற்று. முன்னாட்களில் அந்த இடத்தின் பெயர் நெர்லுக் என்பதாகும். அப்பகுதியில் காடு கருமையாக இருந்ததால் கரும் ஏரி என்ற பெயரும் ஏற்பட்டது. அங்கேதான் புனித மார்த்தா வாழ்ந்தார். அதற்கு அவருடைய குருவாகிய மாக்சிமின் இசைவு அளித்தார். மார்த்தாவோடு அவருடைய சகோதரி மரியாவும் வாழ்ந்தார். மார்த்தா ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கி மன்றாடுவதிலும், நோன்பு இருப்பதிலும் ஈடுபட்டிருந்தார். ஒரு கன்னியர் மடம் ஆரம்பித்தார். புனித அன்னை மரியாவுக்குப் புகழ்சேர்க்கும் விதத்தில் ஓர் அழகிய கோவிலையும் கட்டினார். அங்கே மார்த்தா கடுமையான நோன்பு வாழ்க்கையில் ஈடுபட்டார். அவர் இறைச்சி, முட்டை, பாற்கட்டி, திராட்சை மது எதையுமே தொடுவதில்லை. நாளுக்கு ஒருமுறை மட்டுமே உணவுகொள்வார். பகலில் நூறுமுறை, இரவில் நூறுமுறை என்று அவர் முழந்தாட்படியிட்டு இறைவனை நோக்கி வேண்டிவந்தார்.[5]

தாராஸ்கோன் நகரில் புனித மார்த்தா கோவில்

[தொகு]

தாராஸ்கோன் நகரில் அமைந்துள்ள கல்லூரிக் கோவில் புனித மார்த்தாவைச் சிறப்பிக்க சுமார் 9ஆம் நூற்றாண்டில் அர்ச்சிக்கப்பட்டது. அக்கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட மீபொருள்கள் மார்த்தாவுடையன என்று 1187இல் அடையாளம் காணப்பட்டு, ஒரு புதிய கோவிலில் புதைக்கப்பட்டன.[7]

கல்லூரிக் கோவில் அடிக்கட்டடத்தில் 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு வெற்றுக்கல்லறை உள்ளது. அது "புனித மார்த்தா கோத்திக் கல்லறை" என்று அழைக்கப்படுகிறது.[8]

கீழை மரபுவழிச் சபை மரபு

[தொகு]

கீழை மரபுவழிச் சபையில், மார்த்தாவும் அவருடைய சகோதரி மரியாவும் வெள்ளைப்போளம் ஏந்தியவர்களாகப் போற்றப்படுகிறார்கள். இயேசு கொல்கொதா மலையில் சிலுவையில் உயிர்துறந்து கல்லறையில் அடக்கப்பட்ட பின், அவரைப் பிரமாணிக்கமாகப் பின்சென்ற பெண்கள் அவருடைய கல்லறைக்குச் சென்று அவருடைய உடலுக்கு வெள்ளைப்போளம் கொண்டு பூசப் போனார்கள் என்னும் அடிப்படையில் இக்கருத்து எழுந்தது. கல்லறை வெறுமையாய் இருந்தது. வானதூதர், இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவித்தார். எனவே, இப்பெண்களே, இயேசு உயிர்த்தெழுந்ததற்கு முதல் சாட்சிகள்.[9]

மரபுவழிச் சபையின் பாரம்பரியப்படி, மார்த்தாவின் சகோதரர் இலாசர் கிறித்துவில் நம்பிக்கை கொண்டதால் யூதர்கள் அவரை எருசலேமிலிருந்து துரத்தினர். அவரும் புனித ஸ்தேவான் மறைச்சாட்சியாக உயிர்துறந்ததைத் தொடர்ந்து, தம் சகோதரி மார்த்தாவோடு யூதேயாவை விட்டுச் சென்று, பல்வேறு பகுதிகளில் கிறித்தவ சமயத்தைப் பரப்பினார்.[10] அதே சமயம், மகதலா மரியா எருசலேமில் திருத்தூதர் யோவானோடு சேர்ந்து கிறித்தவத்தைப் பரப்பினார். மூன்று உடன்பிறப்புகளும் அதன்பின்னர் சைப்ரசு தீவுக்கு வந்தனர். அங்கே இலாசர் லார்னாக்கா நகரில் ஆயராகப் பொறுபேற்றுப் பணிபுரிந்தார்.[11] மூவரும் சைப்பிரஸ் நகரில் மரணமடைந்தனர்

மார்த்தா புனிதராக வணக்கம் பெறுதல்

[தொகு]
மார்த்தா, மரியா ஆகியோரோடு இயேசு. ஓவியர்: ஹென்றிக் சீமிராட்ஸ்கி. ஆண்டு: 1886

, கீழைக் கிறித்தவம், ஆங்கிலிக்கம், லூதரனியம் கீழ்வரும் கிறித்தவ சபைகள் மார்த்தாவைப் புனிதராகக் கருதி, வணக்கம் செலுத்துகின்றன:

பிரான்சு நாட்டின் தாராஸ்கோன் நகரில் புனித மார்த்தாவின் கல்லறை

புனித மார்த்தாவின் திருவிழா நாள்கள்

[தொகு]
  • உரோமன் கத்தோலிக்க திருச்சபை புனித மார்த்தாவின் திருவிழாமை சூலை மாதம் 29ஆம் நாள் கொண்டாடுகிறது.
  • கீழை மரபு சபைகளும், கீழை கத்தோலிக்க சபைகளும் மார்த்தா மற்றும் அவருடைய சகோதரி மரியா ஆகியோருக்கு சூன் 4ஆம் நாள் விழாக் கொண்டாடுகின்றன. இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவுக்குப் பின் வருகின்ற இரண்டாம் ஞாயிறு கீழை சபைகளில் "வெள்ளைப்போளம் தாங்குவோர்" விழா என்று சிறப்பிக்கப்படுகிறது. அதுவும் மார்த்தாவை உள்ளடக்கிய ஒரு பொது விழா ஆகும். குருத்து ஞாயிற்றுக்கு முந்திய சனிக்கிழமை "இலாசர் சனிக்கிழமை" என்னும் விழாவிலும் புனித மார்த்தா நினைவுகூரப்படுகிறார்.
  • லூதரன் சபை புனித மார்த்தாவின் விழவை சூலை 29ஆம் நாள், மரியா மற்றும் இலாசர் ஆகியோரின் விழாவோடு இணைத்துக் கொண்டாடுகிறது.
  • அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபையும் இங்கிலாந்து சபையும் மார்த்தா, மரியா ஆகியோரின் விழாவை இணைத்து சூலை 29ஆம் நாள் கொண்டாடுகின்றன.[12]

புனித மார்த்தாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள்

[தொகு]

புனித மார்த்தாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் சில:

உரோமன் கத்தோலிக்கம்
  • தாராஸ்கோன், பிரான்சு
  • மோர்ட்டன் க்ரோவ், இல்லினாய், ஐ.அ.நா.
  • கிழக்கு புரோவிடன்சு, ரோட் தீவு, ஐ.அ.நா.
  • வலிண்டா, கலிபோர்னியா, ஐ.அ.நா.
  • கிங்வூட், டெக்சாஸ், ஐ.அ.நா.
  • ஹார்வி, லூயிசியானா, ஐ.அ.நா.
  • ப்ளெயின்வில், மாசசூசட்சு, ஐ.அ.நா.
  • ஸ்ட்ராட்ஃபீல்டு, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
இங்கிலாந்து சபை
  • செயின்ட் மார்த்தா ஹில், சர்ரே, ப்ரோக்ஸ்டோ, நாட்டிங்ஹாம்ஷைர், இங்கிலாந்து
எப்பிஸ்கோப்பல் சபை
  • புனித மார்த்தா கோவில், பப்பியோன், நெப்ராஸ்கா, ஐ.அ.நா.
  • பெத்தனி பீச், டெலவேர், ஐ.அ.நா.
  • லெக்சிங்டன், கென்டக்கி, ஐ.அ.நா.
மெதடிஸ்டு சபை
  • புனித மார்த்தா கோவில், ட்ரிங், ஹெர்ட்ஃபோர்ஷைர், ஐக்கிய இராச்சியம்
லூதரன் சபை
  • புனித மரியா, மார்த்தா கோவில், சான் பிரான்சிஸ்கோ, ஐ.அ.நா.

கலையில் புனித மார்த்தா

[தொகு]

பல கலைஞர்களும் ஓவியர்களும் புனித மார்த்தாவைச் சித்தரித்துள்ளார்கள். குறிப்பாக 17ஆம் நூற்றாண்டிலிருந்து பல கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில், குடும்பச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 9-10ஆம் நூற்றாண்டுகளிலும், ஒட்டோனிய கலைக் காலத்தில், இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய சித்திரங்கள் வரையப்பட்ட காலத்தில் மார்த்தா சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன.

புனித மார்த்தாவைச் சித்தரித்த ஓவியருள் வெலாஸ்கேஸ், வெர்மீர், கரவாஜியோ உள்ளடங்குவர்.

படத்தொகுப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Saint Martha, Saints.sqpn.com, Star Quest Production Network.
  2. 2.0 2.1 2.2 Pope, Hugh. "St. Martha". The Catholic Encyclopedia. Vol. 9. New York: Robert Appleton Company, 1910.
  3. "Mary", Easton's Bible Dictionary, 1897.
  4. Tenney, Merrill C. Kenneth L. Barker & John Kohlenberger III (ed.). Zondervan NIV Bible Commentary. Grand Rapids, Michigan: Zondervan Publishing House.
  5. 5.0 5.1 "The Life of Saint Martha" பரணிடப்பட்டது 2010-03-30 at the வந்தவழி இயந்திரம், text from the Golden Legend.
  6. "Of Mary Magdalene", Legenda Aurea, Book IV.
  7. Butler, Alban (2000). Butler's lives of the saints. Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86012-256-2. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help), p. 235.
  8. Church of Saint Martha பரணிடப்பட்டது 2009-05-29 at the வந்தவழி இயந்திரம், Tarascon Monuments and Museums, Official website of Terascon's tourist office.
  9. About the Holy Myrrh-Bearing Women பரணிடப்பட்டது 2012-04-11 at the வந்தவழி இயந்திரம், Holy Myrrhbearers Women's Choir, Blauvelt, N.Y.
  10. Righteous Mary the sister of Lazarus, Orthodox Church in America.
  11. Mary & Martha, the sisters of Lazarus பரணிடப்பட்டது 2009-10-26 at the வந்தவழி இயந்திரம், Greek Orthodox Archdiocese of America.
  12. July commemorations in the Anglican Church, Oremus.com.
  •  இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது:  "St. Martha". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Martha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்த்தா&oldid=3701927" இலிருந்து மீள்விக்கப்பட்டது