கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் | |
---|---|
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°45′0″N 79°45′0″E / 11.75000°N 79.75000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைமையகம் | கடலூர் |
தாலுகாக்கள் | புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், விருத்தாசலம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | திரு. அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப.[1] |
• காவல் கண்காணிப்பாளர் | எஸ்.சக்தி கணேசன்,[2] இ.கா.ப. |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 26,05,914 |
• அடர்த்தி | 702/km2 (1,820/sq mi) |
மொழிகள் | |
• அரசு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பின்கோடு | 607xxx |
தொலைபேசி குறியீடு | 91 04142 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | TN-31,TN-91[3] |
பெரிய நகரம் | கடலூர் |
அருகில் உள்ள நகரம் | பாண்டிச்சேரி, சென்னை |
பாலின விகிதம் | 984 ♂/♀ |
எழுத்தறிவு | 79.04% |
சட்டமன்ற வகை | தேர்ந்தெடு |
மாநிலச் சட்டப் பேரவை | கடலூர் |
சராசரி வெப்பநிலை | 41 °C (106 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 20 °C (68 °F) |
இணையதளம் | cuddalore |
கடலூர் மாவட்டம் (Cuddalore district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இந்த மாவட்டம் 3,703 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
சோழர் கால வரலாற்றுப் புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர்.
வரலாறு
[தொகு]முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
சுமத்ரா அருகே 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை, இந்தியாவின் கிழக்கு கடற்கரையை 2004, டிசம்பர் 26 அன்று தாக்கியது, இதன் விளைவாக 572 பேர் உயிரிழந்தனர். பல மீன்பிடி குக்கிராமங்கள் காணாமல் போயின, அதே நேரத்தில் வெள்ளி கடற்கரை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடலூர் துறைமுகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. செயின்ட் டேவிட் கோட்டை சேதமின்றி உயிர் தப்பியது. 2012-ஆம் ஆண்டில் ஏற்பட்ட தானே புயல் பயிர்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.
மாநகராட்சி நிர்வாகம்
[தொகு]கடலூர் மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 10 வருவாய் வட்டங்களையும், 905 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[4]
கடலூர் | |
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 6 |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 10 |
பேரூராட்சிகள் | 14 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 14 |
ஊராட்சிகள் | 683 |
வருவாய் கிராமங்கள் | 905 |
சட்டமன்றத் தொகுதிகள் | 9 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
கடலூர் வருவாய் வட்டங்கள்
[தொகு]- கடலூர்
- பண்ருட்டி
- விருத்தாச்சலம்
- சிதம்பரம்
- காட்டுமன்னார்கோயில்
- திட்டக்குடி
- குறிஞ்சிப்பாடி
- வேப்பூர்
- புவனகிரி
- ஸ்ரீமுஷ்ணம்
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
[தொகு]கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் 8 நகராட்சிகளும், 14 பேரூராட்சிகளும் கொண்டது. இம்மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பில் 13 ஊராட்சி ஒன்றியங்களையும், 683 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[5]
மாநகராட்சிகள்
[தொகு]கடலூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[6]
- கடலூர் ஊராட்சி ஒன்றியம்
- அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்
- பண்ருட்டி
- குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்
- கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம்
- விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம்
- நல்லூர் ஊராட்சி ஒன்றியம்
- மங்களூர் ஊராட்சி ஒன்றியம்
- மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம்
- பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
- கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
- குமராட்சி
- காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
- ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம்
பெரிய நகரங்கள்
[தொகு]- கடலூர்
- பண்ருட்டி
- நெய்வேலி
- குறிஞ்சிப்பாடி
- சிதம்பரம்
- விருத்தாச்சலம்
- நெல்லிக்குப்பம்
- வடலூர்
- காட்டுமன்னார்கோயில்
- ஸ்ரீமுஷ்ணம்
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1901 | 8,68,748 | — |
1911 | 9,74,673 | +1.16% |
1921 | 9,57,148 | −0.18% |
1931 | 10,12,603 | +0.56% |
1941 | 10,76,237 | +0.61% |
1951 | 11,45,551 | +0.63% |
1961 | 13,00,513 | +1.28% |
1971 | 15,69,323 | +1.90% |
1981 | 18,27,917 | +1.54% |
1991 | 21,22,759 | +1.51% |
2001 | 22,85,395 | +0.74% |
2011 | 26,05,914 | +1.32% |
சான்று:[7] |
2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.04% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர்.[8]
இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 91.78% ஆகவும், கிறித்தவர்கள் 3.20 % ஆகவும், இசுலாமியர்கள் 4.75% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.
அரசியல்
[தொகு]இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[9]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- திட்டக்குடி (தனி)
- விருத்தாச்சலம்
- நெய்வேலி
- பண்ருட்டி
- கடலூர்
- குறிஞ்சிப்பாடி
- புவனகிரி
- சிதம்பரம்
- காட்டுமன்னார்கோயில் (தனி)
நாடாளுமன்றத் தொகுதிகள்
[தொகு]தொழில்வளம்
[தொகு]மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, நெல் இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் நெல்லிக்குப்பம், பெண்ணாடம் ,நல்லூர் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. பெண்ணாடத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் விளைகிறது மற்றும் கொய்யா, சப்போட்டா பழ வகைகளும் பயிர் செய்யப்படுகிறது.
எல்லைகள்
[தொகு]மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல்
[தொகு]ஆறுகள்
[தொகு]பெண்ணையாறு,கெடிலம் ஆறு,பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு,வெள்ளாறு (வடக்கு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.
அணைக்கட்டுகள்
[தொகு]சொர்ணாவூர்அணை,திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணை கள் அமைந்துள்ளன.
அலையாத்திக் காடுகள்
[தொகு]பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன.
சிதம்பரம் நடராசர் கோயில்
[தொகு]நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் முதன்மை தலமாகும். இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
போக்குவரத்து
[தொகு]கடலூர் மாவட்டம் தொடருந்து மற்றும் சாலைகள் மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து
[தொகு]புதுச்சேரி, சிதம்பரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகள்:
- மாநில நெடுஞ்சாலை 9 - கடலூர் முதல் சித்தூர் வரை செல்லும் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம் - பண்ருட்டி - திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - போளூர் - கண்ணமங்கலம் - வேலூர் - காட்பாடி - சித்தூர்)
- மாநில நெடுஞ்சாலை 10 - கடலூர் முதல் சேலம் வரை செல்லும் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)
- எஸ்.எச்.68 - :கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.
- கிழக்குக் கடற்கரைச் சாலை - சென்னை முதல் கடலூர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் சாலை.
தொடருந்துப் போக்குவரத்து
[தொகு]கடலூரில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன.
தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி தொடருந்து பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு தொடருந்து பாதை உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது), பிச்சாவரம், கெடிலம் ஆற்றின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில், மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் திருக்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா. ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
காவல் துறை
[தொகு]கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த சோழ, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலும், நெய்வேலியில் மத்திய அரசின் பழுப்பு நிலக்கரி சுரங்கமும் அமையப்பெற்றுள்ளது. கடலுார் காவல் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள், 46 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல் பிரிவுகள் உள்ளடங்கிய 3,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பதால் இவ்விரு சமூகத்தினரிடயே ஏற்படும் பிரச்சனைகள் அதிமுக்கியம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இப்பிரச்சனைகளை காவல் துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பிரச்சனைகளை பேசி தீர்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில் சட்டம் ஒழுங்குப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவ்வப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழும்போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 48 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2017-ம் வருடத்தில் பதியப்பட்ட குற்றவழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததின்பேரில் 78 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 65 சதவிகித வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2017-ம் வருடத்தில் நடந்த 46 கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டும், 29 பாரி குற்றவழக்குகளில் 62 சதவிகித வழக்குகள் அதாவது 18 குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50,26,500/- மதிப்புள்ள வழக்குச்சொத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் இடதுசாரி மற்றும் மதம் சார்ந்த தீவிரவாதம் இல்லை. நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. மேற்படி முகாம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலைவிபத்துகளை குறைப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களை கொண்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு 6 முக்கிய மோட்டார் வாகனப்பிரிவுகளின் கீழ் 22,670 வாகன அற்ப வழக்குகளும், 82,280 வழக்குகளில் தலைகவசம் மற்றும் இருக்கை வார் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 10,149 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3,333 உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதன் மூலமாக 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 567-லிருந்து, 2017-ம் ஆண்டு 527-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் அயல் நாட்டு மதுபான வகைகள், எரிசாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் ஆகியவைகளை மாவட்டத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட முக்கிய எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு கடத்தல் நடவாமல் தடுக்கப்படுகிறது. இது குறித்து கடலுhர் மாவட்ட மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினர் இணைந்து மாதம்தோறும் எல்லைப்பகுதி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 2017-ம் ஆண்டு 3,247 வழக்குகள் பதியப்பட்டும், அதில் 37,297 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றங்களில் சம்மந்தப்பட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஏல நடவடிக்கையின் மூலமாக ரூ.19,743/- வசூலிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்ட 18 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது பிரிவு 14-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்ய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படுவதன் முலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் பாரபட்சமின்றி புலன்விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அனைவரும் தங்களது பணியினை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றங்கள், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்ள உறுதி பூணுகிறோம்.
மத்திய சிறைச்சாலை
[தொகு]கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cuddalore District Collector
- ↑ "Welcome to CCTNS Citizen Portal". eservices.tnpolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
- ↑ Registration Series Allotted to Regional Transport Offices[தொடர்பிழந்த இணைப்பு]பரணிடப்பட்டது 23 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Revenue Administration
- ↑ கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், ஊராட்சிகளும்
- ↑ "கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
- ↑ Decadal Variation In Population Since 1901
- ↑ Cuddalore District : Census 2011 data
- ↑ Constituencies