சுப்பிரமணிய பாரதி
| மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி |
|
|---|---|
| பிறப்பு | சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா |
| இறப்பு | செப்டம்பர் 11 1921 (அகவை 38) சென்னை, இந்தியா |
| இருப்பிடம் | திருவல்லிக்கேணி |
| தேசியம் | இந்தியர், |
| மற்ற பெயர்கள் | பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்[1] |
| பணி | செய்தியாளர் |
| அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, முதலியன. |
| Influenced | பாரதிதாசன் |
| அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| சமயம் | இந்து சமயம் |
| பெற்றோர் | சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
| கையொப்பம் | |
சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.[2] தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
1882-ம் ஆண்டு திசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
| “ | தேடிச் சோறுநிதந் தின்று
|
” |
இலக்கியப் பணி [தொகு]
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
- குயில் பாட்டு
- கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
- பாஞ்சாலி சபதம்
- புதிய ஆத்திச்சூடி
- சுயசரிதை
- பாரதி அறுபத்தாறு
- ஞானப் பாடல்கள்
- தோத்திரப் பாடல்கள்
- விடுதலைப் பாடல்கள்
- சந்திரிகையின் கதை
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும் [தொகு]
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தேசியக் கவி [தொகு]
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன் [தொகு]
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்[மேற்கோள் தேவை].
பெண்ணுரிமைப் போராளி [தொகு]
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
பாஞ்சாலி சபதம் [தொகு]
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாரதியார் நினைவுச் சின்னங்கள் [தொகு]
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் காண்க [தொகு]
உசாத்துணை [தொகு]
- ↑ Attar Chand The great humanist Ramaswami Venkataraman Page 12.
- ↑ "Mahakavi Bharathiyar - Tamilnadu". Tamilnadu.com (13 February 2013).
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Subramanya Bharathi தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- மகாகவி பாரதி - முழுமையான நூல் - நூலகம் திட்டம்
- பாரதியார் பாடல் 1
- பாரதியார் பாடல் 2
- பாரதி பற்றிய அறிமுகம்
- பாரதியாரின் இல்லம்
- பாரதியார் மின் மணி மண்டபம்
- பாரதியார் பாடல்கள் - தேசிய கீதங்கள்
- பாரதியார் பாடல்கள் - ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், சுயசரிதை
- பாரதியார் பாடல்கள் - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
- பாரதியார் பாடல்கள் - பாஞ்சாலி சபதம்
- பகவத் கீதை- பாரதியாரின் முன்னுரை
- சந்திரிகையின் கதை
- பாரதியார் பாடல்கள்-மொழி பெயர்ப்போடு
- பாரதியார் வாழ்க்கை வரலாறு - கவிதை வடிவில்