தாதாபாய் நௌரோஜி
தாதாபாய் நௌரோஜி (செப்டம்பர் 6, 1825 – ஜூன் 30, 1917) இந்தியாவின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.
தாதாபாய் நௌரோஜியை, பெருந்தலைவராகப் போற்றப்பட்ட காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும்.
இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் காந்தியார், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.
இதன் அடிப்படையில் தான் ஐந்தாண்டுத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. நாட்டிற்குத் தேவையான அடிப்படை, கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் ஆகியன பொதுத் துறையில் இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன. இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் அணு ஆயுத உற்பத்தி, செயற்கைக் கோள்கள் செலுத்துதல் ஆகிய துறைகளில் இந்தியா, வல்லரசு நாடுகளுடன் இணையாமல் சுயசார்பு நிலையை எட்டியது. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்ட அரசியல் உணர்வை எதிரொலிக்கும் முறையில்தான் ஏகாதிபத்திய நாடுகளுடன் சார்ந்திராமல் அயல்நாட்டுக் கொள்கையில் அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒன்றினைக் கண்டு அதில் வெற்றியும் பெற்றார். நேரு கடைப் பிடித்த உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுத் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் 1990 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் காலனி ஆதிக்க கொள்கையாலும், தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி மூன்றாவது உலக நாடுகளின் வளத்தையும், ஆதாரங்களையும் சுரண்டிச் சென்று வளர்ந்த நாடுகளாக ஏற்றம் பெற்றன [1].