சமிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செரித்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமிபாட்டுத் தொகுதி
"இரையகக் குடற்பாதை" redirects here. மனிதர்களில் நடைபெறும் சமிபாட்டை விரிவாக அறிய, காண்க மனித இரையகக் குடற்பாதை.

சமிபாடு (அல்லது செரிமானம் அல்லது செரித்தல்) (Digestion) என்பது, உண்ணப்படும் உணவானது, குருதியினூடாக உறிஞ்சப்பட்டு உடல் தேவைகளுக்கு பயன்படுவதற்கு வசதியாக பொறிமுறை, வேதியியல் முறைகளினால் உடலினுள் வைத்து உடைக்கப்பட்டு சிறு மூலக்கூறுகளாக மாற்றப்படுவதைக் குறிக்கும். உடலானது உண்ட உணவைப் பிசைந்தும், இளக்கியும், உயிர்வேதியியல் முறைகளில் பிரித்தும் பகுத்தும் தனது தேவைக்கு ஏற்றவாறு அதில் இருந்து ஊட்டச்சத்துக்களை உடலுனுள் உறிஞ்சிக்கொண்டு, மிகுதியான வேண்டாத சக்கையை வெளித்தள்ளிவிடும்.

செயல்முறைகள்[தொகு]

சமிபாடு பொதுவாக பொறிமுறைச் செயல்முறை, வேதிச் செயல்முறை என இரு பிரிவாக நடைபெறுகின்றது. பொறிமுறைச் செயல்முறை மூலம் உணவு சிறிய துகள்களாக உடைக்கப்படுகின்றது. வேதிச் செயல்முறை உணவைச் சிறு துகள்களாக உடைப்பதுடன், அவற்றை உறிஞ்சலுக்கும் தயார்படுத்துகிறது. பெரும்பாலான முதுகெலும்பிகளில் சமிபாடு நான்கு படிகளில் நடைபெறுகின்றது:

  1. உட்கொள்ளல்: உணவை வாயில் இடுதல்.
  2. பொறிமுறைச் சமிபாடும், வேதிச் சமிபாடும்: உணவைக் கிழித்தல், அரைத்தல், வயிற்றினுள் வேறு வேதிப் பொருட்களுடன் கலந்து சிக்கலான மூலக்கூறுகளை எளிய மூலக்கூறுகளாக உடைத்தல்.
  3. உறிஞ்சல்: ஊட்டச்சத்துக்கள், சமிபாட்டுத் தொகுதியில் இருந்து சுற்றோட்டத் தொகுதி மற்றும் நிணநீர் நுண்துளைகளுக்குள் செல்லுதல்.
  4. கழிவகற்றல்: சமிபாடடையாத கழிவுப் பொருட்கள் சமிபாட்டுத் தொகுதியிலிருந்து வெளியேறல்.

சமிபாட்டுத் தொகுதிகள்[தொகு]

விசேட உறுப்புகள் மற்றும் நடத்தைகள்[தொகு]

தங்களது உணவைச் சமிபாடடையச் செய்வதற்கு உதவுவதற்காக விலங்குகள் அலகுகள், நாக்கு, பற்கள் போன்ற பரிணாமமடைந்த உறுப்புக்களைக் கொண்டுள்ளன.

அலகுகள்[தொகு]

பறவைகள் தமது சூழலியல் முடுக்குக்குக்கு இசைவான எலும்புகளால் உருவான அலகுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் பழங்கள், விதைகள், பூச்சிகள் என்பவற்றைப் பறவைகள் இலகுவில் உட்கொள்கின்றன.

நாக்கு[தொகு]

நாக்கு, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.

பல்[தொகு]

பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகின்றது. இது உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதற்கு உதவியாக உள்ளது. பற்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆனவையாகும். பற்கள் எலும்புகளால் ஆனவை அல்ல மாறாக அடர்த்தி மற்றும் கடினத்தன்மை உள்ள எனாமல், டென்ரின் மற்றும் செமென்டம் போன்ற இழையங்களால் ஆனவை. மனிதப் பற்கள் இரத்தம் மற்றும் நரம்பு என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் பற்களின் வடிவம், அளவு மற்றும் எண்ணிக்கை என்பன அவை உட்கொள்ளும் உணவில் தங்கியுள்ளன. உதாரணத்திற்கு தாவர உண்ணிகள் தாவரப் பாகங்களினை அரைத்து உண்ண அதிக எண்ணிக்கையான கடைவாய்ப் பற்களைக் கொண்டுள்ளன. அதேவேளை விலங்கு உண்ணிகள் வெட்டும் பற்களைக் கொண்டுள்ளன.

மனித சமிபாட்டுச் செயல்முறை[தொகு]

வாய்[தொகு]

பாலூட்டிகளில், சமிபாட்டுக்கான தொடக்கநிலை வாயிலேயே நடைபெறுகின்றது. மாந்தர்கள் உணவை வாயில் இட்டவுடன் இந்த சமிபாடு ஆரம்பமாகின்றது. முதலில் உணவானது பற்களால் மெல்லப்பட்டு சிறு துணிக்கைகளாக உடைக்கப்படுகின்றது. இதில் உதவுவதற்கு நாக்கு உணவை பிரட்டிக் கொடுக்கிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் உணவை ஈரப்படுத்திக் கொடுப்பதுடன், உமிழ்நீரில் உள்ள அமிலேசு போன்ற நொதியானது மாப்பொருளை வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்துகின்றது. பல்லால் மெல்லும்பொழுது மேலும் உமிழ்நீர் சுரக்கின்றது. ஈரப்படுத்திய உணவு சிறு கவளங்களாக தொண்டை வழியாக கீழிறங்கி உணவுக்குழாயை/களத்தை அடைகின்றது.

உணவுக்குழாய்/களம்[தொகு]

இந்த உணவுக்குழாய்/உணவுக்குழல்/களம் சுமார் 20-30 செ.மீ நீளமுள்ளது. இந்த களத்தின் தசைகள் சுருங்கியும் விரிந்தும் ஏற்படுத்தும் சுற்றிழுப்பசைவு எனப்படும் அலை போன்ற அசைவுகளால் உணவானது உணவுக்குழாயில் நகர்ந்து இரைப்பையை அடைகின்றது.

இரைப்பை[தொகு]

Colon.xar *-ta.svg

இரைப்பையில் சமிபாட்டு நொதியங்கள் சில உருவாக்கப்படுகின்றன. உணவை உடைக்கும் வேலை வயிற்றிலும் தொடர்கின்றது. இங்கே வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து உணவைக் கடைவதன் மூலம் அதனை உடைத்து நொதியத்துடன் கலக்குகின்றது. அத்துடன் அங்கே சுரக்கப்படும் அமிலத் தன்மையான நீரானது அங்கு சுரக்கப்படும் நொதியங்கள் சிக்கலான மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைத்து எளிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு உதவுகின்றன. அத்துடன் விட்டமின் B -12, அல்ககோல் போன்ற சில பொருட்கள் இந்த இரைப்பைப் பகுதியிலேயே நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.

முன் சிறுகுடல்[தொகு]

இது இரைப்பையையும், சிறுகுடலையும் இணைக்கும் வளைந்த அமைப்பாகும். இதன் வளைந்த பகுதிக்குள் கணையம் அல்லது சதையி காணப்படும். இந்த கணையத்திலிருந்து சுரக்கப்படும் கணையநீரில் பல மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைக்கக்கூடிய நொதிகள் காணப்படும். அத்துடன் பித்தப்பையினால் சுரக்கப்படும் பித்தநீரானது அங்கே தொழிற்படும் நொதியங்களுக்கு உதவுவதற்காக உணவை காரத் தனமை உள்ளதாக மாற்றும்.

சிறு குடல்[தொகு]

இந்த சிறுகுடல் அல்லது இரையகக் குடல் பாதையிலேயே அதிகளவில் உறிஞ்சல் நடைபெறுகின்றது. இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன

பெருங்குடல்[தொகு]

மேலதிக நீரானது பெருங்குடல் பகுதியில் உறிஞ்சப்படும். இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

குதம்[தொகு]

கழிவுப் பொருட்கள் குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன.

சொல் இலக்கணம்[தொகு]

செரித்தலின் அடிப்படையான வினையை விளக்குமாறு தமிழில் அதற்கு அறுத்தல் என்னும் சிறப்பான சொல் உண்டு. உணவைப் பிரிப்பதற்கு அறுத்தல் என்று பெயர்.

திருவள்ளுவர்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்.

(குறள் 942)

என்று கூறியதில் உள்ள “அற்றது போற்றி உணின்” என்னும் தொடரில் உள்ள அற்றது எனும் சொல் உண்ட உணவை முழுவதுமாகச் செரித்தல் என்பதைக் குறிக்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிபாடு&oldid=2245435" இருந்து மீள்விக்கப்பட்டது