பர்பானி
பர்பானி என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் பர்பானி மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயற்படுகின்றது. அவுரங்காபாத், நந்தேத் மற்றும் லாத்தூருக்குப் பிறகு மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் பர்பானி நான்காவது பெரிய நகரமாகும். பர்பானி அவுரங்காபாத்தின் பிராந்திய தலைமையகத்திலிருந்து 200 கிலோமீட்டர் (120 மைல்) தொலைவில் உள்ளது. மகாராட்டிர மாநில தலைநகரான மும்பையிலிருந்து 491 கி.மீ. (305 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
முன்பு பர்பானி முழு மராத்வாடா பகுதிகளுடன் நிஜாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் ஐதராபாத்து மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1956 ஆம் ஆண்டில் மாநிலங்களின் மறுசீரமைப்புக்கு பின்னர் அப்போதைய பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1960 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி தற்போதைய மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதியாகும்.[1]
மகாராஷ்டிராவின் நான்கு வேளாண் பல்கலைக்கழகங்களில் ஒன்றான வசந்த்ராவ் நாயக் மராத்வாடா வேளாண் பல்கலைக்கழகம் பர்பானியில் அமைந்துள்ளது. மேலும் இங்கு நடைப்பெறுப் துர்பூல் ஹக் தர்காவின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.[2]
வரலாறு
[தொகு]பர்பானி பண்டைய காலங்களில் பிரபாவதி தேவியின் ஒரு பிரமாண்டமான கோயிலின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் "பிரபாவதி நகரி" என்று அழைக்கப்பட்டது.[3] பர்பானி 650 ஆண்டுகளுக்கு மேலாக டெக்கான் சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் பின்னர் ஹைதராபாத்தின் நிஜாம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1948 ம் ஆண்டு இந்திய ஆயுதப் படையினரால் ஹைதராபாத் மாநிலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போலோ இராணுவ நடவடிக்கையால் ஐதராபாத் நிசாம் தோற்கடிக்கப்பட்டு ஹைதராபாத் இந்தியத் தேசத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.[4] பின்னர் இது இந்திய சுதந்திர குடியரசின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டு வரை இந்த நகரம் இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவ் ஆண்டில் நடைப்பெற்ற நிர்வாக சீர்திருத்தங்களினாலும், பர்பானியும் அதற்கு அருகிலுள்ள ஏனைய நகரங்களும் பன்மொழி பம்பாய் மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.[5] 1960 ஆம் ஆண்டு முதல் பர்பானி மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதியாகும்.[6]
புவியியல்
[தொகு]பர்பானி 19.27 ° வடக்கு 76.78 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[7] இது சராசரியாக 347 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரம் கோதாவரி பள்ளத்தாக்கில் அமைந்து இருப்பதால் நகரத்தின் மண் மிகவும் வளமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.[8]
காலநிலை
[தொகு]பர்பானியின் கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர்காலத்துடன் ஒப்பிடும்போது கோடைகாலத்தில் அதிக மழை பெய்யும்.[9]
புள்ளிவிபரங்கள்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்தி மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி பர்பானி நகரத்தின் மக்கட் தொகை 307,170 ஆகும். மொத்த சனத்தொகையில் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 157,628 மற்றும் 149,563 ஆகும். 1000 ஆண்களுக்கு 949 பெண்கள் என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. பர்பானி நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 84.34 சதவீதம் (225,298 பேர்) ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 90.71 சதவீதமும், பெண்கள் கல்வியறிவு 77.70 சதவீதமும் ஆகும். மக்கட் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி பர்பானி நகரில் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40,075 ஆகும், இதில் 21,187 சிறுவர்களும், 18,888 சிறுமிகளும் அடங்குவர். 1000 சிறுவர்களுக்கு 981 சிறுமிகள் என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது.[10]
பொருளாதாரம்
[தொகு]பர்பானியின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தையும், வேளாண் வணிகத்தையும் சார்ந்துள்ளது. இங்கு பிராந்தியத்தில் தொழில்களின் மேம்பாட்டுக்கான மகாராஷ்டிரா தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் உள்ளது. ஆனால் பெரிய தொழில்கள் எதுவும் நடைப்பெறவில்லை.[11]
சான்றுகள்
[தொகு]- ↑ ""OVERVIEW OF PARBHANI DISTRICT". Archived from the original on 2017-05-01.
- ↑ "Parbhani | India". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2019-12-06.
- ↑ ""Parbhani at a glance". Archived from the original on 2017-05-01.
- ↑ "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in. Retrieved 2019-12-06.
- ↑ "Aurangabad | India". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2019-12-06.
- ↑ ""Parbhani, Nizam, and post 1947"". Archived from the original on 2017-05-01.
- ↑ "Maps, Weather, and Airports for Parbhani, India". www.fallingrain.com. Retrieved 2019-12-06.
- ↑ ""EXECUTIVE SUMMARY OF PARBHANI DISTRICT"" (PDF). Archived from the original (PDF) on 2017-04-15.
- ↑ "Parbhani climate: Average Temperature, weather by month, Parbhani weather averages - Climate-Data.org". en.climate-data.org. Retrieved 2019-12-06.
- ↑ "Parbhani City Population Census 2011-2019 | Maharashtra". www.census2011.co.in. Retrieved 2019-12-06.
- ↑ "Brief Industrial Profile of Parbhani District" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04.