துலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துலே (Dhule) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள துலே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். பன்சாரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள துலே நகரமானது மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என்பவற்றின் பிராந்திய தலைமையகமாகும்.

புவியியல்[தொகு]

துலே 20.9° வடக்கு 74.78° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 250 மீட்டர் (787 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. டெக்கான் பீடபூமியின் வடமேற்கு மூலையில் உருவாகும் காண்டேசு பகுதியில் துலே அமைந்துள்ளது.

துலே மாவட்டத்திற்கு மேற்கில் குஜராத் மாநிலமும் , வடக்கே மத்தியப் பிரதேசமும், நந்துபார் மாவட்டமும் , தெற்கு மற்றும் கிழக்கில் முறையே நாசிக் மாவட்டம் மற்றும் ஜல்கான் மாவட்டமும் உள்ளன. இது பன்சாரா ஆற்றின் கரையில் தப்பி ஆற்றின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

காலநிலை[தொகு]

தென்மேற்கு பருவமழை தவிர மாவட்டத்தின் காலநிலை முழு வறண்ட நிலையில் உள்ளது. ஆண்டு நான்கு பருவங்களாக பிரிக்கப்படலாம். திசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலமானது மார்ச் முதல் மே வரை வெப்பமான பருவத்தைத் தொடர்ந்து வரும். அதன் பின்னர் வரும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் மழைக்காலத்திற்கு பிந்தைய பருவமாகும். மாவட்டத்தில் சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 674.0 மி.மீ. ஆகும். பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து, மே வரை வெப்பநிலை சீராக அதிகரிக்கும். இது ஆண்டின் வெப்பமான பருவமாகும். இது சராசரி தினசரி அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகும்.[2]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[3] துலே மக்கள் தொகை 776,093 ஆக இருந்தது. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கட் தொகையில் 52% வீதமும், பெண்கள் 48% வீதமும் உள்ளனர்.

துலே சராசரி கல்வியறிவு வீதத்தை 85% ஆகக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 80% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 69% வீதமாகவும் காணப்படுகின்றது. மக்கட் தொகையில் 13% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்.

பொருளாதாரம்[தொகு]

தூலேயின் பொருளாதாரத்தில் தூய்மையான 'பால் மற்றும் நெய்' உற்பத்தி, நிலக்கடலை உற்பத்தி, வேளாண் சார்ந்த தொழில்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நகரத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

ஷிண்ட்கேடா தாலுகாவில் உள்ள டொண்டிச்சா பகுதி மிளகாய் சந்தைக்கு பிரபலமானது. இங்கே ஒரு மாவு தொழிற்சாலையும் உள்ளது. மாவட்டத்தில் பல குடிசைத் தொழில்கள் செயற்பட்டு வருகின்றன. பீடி உருட்டல், மட்பாண்டங்கள், செங்கல் தயாரித்தல், கைத்தறிகளில் பின்னல் வேலைப்பாடு செய்த புடவைகள், நிலக்கடலை மற்றும் எள்ளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுத்தல் ஆகியவை அவற்றில் சிலவாகும். துலே, ஷிர்பூர் மற்றும் பிம்பால்னர் ஆகிய இடங்களில் மர வெட்டு அலகுகள் இயக்கப்படுகின்றன.[4]

போக்குவரத்து[தொகு]

விமானம்[தொகு]

துலே நகரத்தின் கோண்டூர் பகுதியில் துலே விமான நிலையம் அமைந்துள்ளது. இது 1,400 மீட்டர் (4,600 அடி) நீளமுள்ள ஓடுபாதையைக் கொண்டுள்ளது.

ரயில்[தொகு]

துலே டெர்மினஸ் (நிலையக் குறியீடு: டிஹெச்ஐ) மத்திய ரயில்வேயின் கீழ் உள்ள சாலிஸ்கான் சந்தி ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாலை[தொகு]

மூன்று தேசிய நெடுஞ்சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில நகரங்களில் துலேயும் ஒன்றாகும். அவை என்எச்-3 , என்.எச்-6 மற்றும் என்.எச்-211 என்பனவாகும். ஆசிய நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் துலே வழியாக செல்லும் என்.எச் 3 மற்றும் என்.எச் 6 பகுதிகள் முறையே ஆசிய நெடுஞ்சாலைகளான ஏ.எச் 47 மற்றும் ஏ.எச் 46 ஆக மாற்றப்பட்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலே&oldid=3587252" இருந்து மீள்விக்கப்பட்டது