கெடா துவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெடா துவா அல்லது பழைய கெடா (மலாய் மொழி: Kerajaan Kedah Tua; ஆங்கிலம்: Old Kedah; சீனம்: 古吉打) என்பது தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் இருந்த ஒரு பண்டைய இராச்சியம் ஆகும். வரலாற்று ஏடுகளில் இந்த இராச்சியம், கத்தகா (Kataha); கடாரம் (Kadaram); சாய் (Sai); காலா (Kalah); கலா பார் (Kalah Bar); கல புரா (Kalah Pura); கலாகிராம் (Kalagram) என்றும் அழைக்கப்படுகிறது.

சீன பௌத்த துறவியான யி சிங் (635-715) (Yijing) என்பவரின் பதிவுகளில், கெடா துவா என்பது செ-சா (Cheh-Cha); செய்ச்சா (Chiecha) என்று குறிப்பிடப்படுகிறது).[1]

அத்துடன் கிமு 788 வாக்கில், கோலா மூடா மாவட்டத்தின், மெர்போக் (Merbok River) ஆற்றுப் படுகையின் வடக்குக் கரையில் ஒரு பெரிய குடியேற்றம் நிறுவப்பட்டது. இருப்பினும் 2-ஆம் நூற்றாண்டில் தான் பழைய கெடா இராச்சியம் (Kerajaan Kedah Tua) அங்கு நிறுவப்பட்டது.[2]

பொது[தொகு]

கெடா துவா வரலாற்றில் புகழ்பெற்ற ஜெராய் மலை

மெர்போக் ஆறு (Merbok River) மற்றும் மூடா ஆறு (Muda River) ஆகிய இரு ஆறுகளையும் உள்ளடக்கிய ஆற்றுப் படுகை ஏறக்குறைய 1000 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இதை பூஜாங் பள்ளத்தாக்கு பகுதி என்று அழைக்கிறார்கள். அந்தப் பகுதியில் உருவான பல குடியேற்றங்களில் கெடா துவா குடியேற்றமும் ஒன்றாகும்.

மற்றொரு குடியேற்றம் நடந்து உள்ளது. அதன் பெயர் மெர்போக் குடியேற்றம் (Merbok Settlement). இந்தக் குடியேற்றம் பத்து ஆறு (Sungai Batu) என்ற துணை நதியின் முகத்துவாரத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டது. அந்த முதல் குடியேற்றத்தின் தலைநகரம் மெர்போக் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இந்தப் பகுதி தான் இப்போது சுங்கை பத்து என்று அழைக்கப்படுகிறது.[3][4]

வரலாறு[தொகு]

தெற்காசிய மதக் குழுக்கள்[தொகு]

பொ.ஆ. 170-ஆம் ஆண்டுகளில் தெற்காசியாவில் இருந்து இந்து மதக் குழுக்கள் கடாரத்தை வந்தடைந்தன. அதே காலக் கட்டத்தில், கடாரத்திற்கு அருகில் உள்ள தீவுகளில் வாழ்ந்த மக்களும்; மற்றும் வடக்கு வியட்நாம் (Mon-Khmer) பகுதியில் வாழ்ந்த மக்களும்; தீபகற்ப மலாயாவுக்கு வந்த இந்து மதக் குழுக்களுடன் இணைந்து கொண்டனர்.

அதே நேரத்தில் இந்தியா, பாரசீகம் மற்றும் அரேபியா நாடுகளின் வர்த்தகர்களும் மலாக்கா நீரிணைப் பகுதிகளுக்கு வந்தனர். அவர்கள் கெடா சிகரம் (Kedah Peak) என்று அழைக்கப்படும் ஜெராய் மலையை அடையாளப் புள்ளியாகப் பயன்படுத்தினர்.

ஜெராய் மலை[தொகு]

கெடா துவா பகுதி, கோலா கெடா (Kuala Kedah), கோலா பாரா (Kuala Bara), கோலா பிலா (Kuala Pila) மற்றும் மெர்ப்பா (Merpah) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. 330-ஆம் ஆண்டில் இருந்து; 1136-ஆம் ஆண்டு வரையில் கெடா துவா எனும் பெயரில் அறியப்பட்டது.[5]

தொடக்கக் காலத்தில் தென்கிழக்காசியாவில் கடற்கரை வணிக மையங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தன. அதனால் கடாரம் பிரபலம் அடையத் தொடங்கியது. வங்காள விரிகுடாவில் இருந்து மலாக்கா நீரிணைக்குள் நுழையும் கப்பல்களுக்கு முதலில் தெரிவது ஜெராய் மலை ஆகும்.

இந்து பௌத்த மதங்களின் தாக்கங்கள்[தொகு]

மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் கடாரம் அமைந்து இருந்தது. கடாரத்தின் புவியல் அமைப்பினால் வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் தொலைந்து போகும் அபாயம் குறைவாக இருந்தது. அந்த வகையில் கடாரம் புகழ்பெறத் தொடங்கியது.

கெடா துவா முதன்முதலில் பௌத்த மதத்தால் பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு இந்து மதம் பின்பற்றப்பட்டது. இந்த இந்து-பௌத்த செல்வாக்கு பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கோயில்களின் எச்சங்கள் மூலம் நிரூபிக்கப் படலாம்.

உள்ளூர் தயாரிப்புகள்[தொகு]

அரேபியா, இந்தியா, இலங்கை, பாரசீகம் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் வர்த்தகர்கள் கிழக்கிற்கு தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு சரக்குகளைப் பரிமாறிக் கொள்ளவும்; தங்கள கப்பல்களை பழுதுபார்க்கும் இடமாகவும் கெடா துவா துறைமுகம் இருந்து உள்ளது.

கெடா துவா சமூகத்தினர் பல்வேறான விளைப் பொருட்களை உற்பத்தி செய்தனர். ஈயம், தங்கம், அரிசி, கருப்பு மிளகு, தந்தம், பிசின், பிரம்பு, மான் கொம்பு மற்றும் உள்ளூர் மக்களால் சேகரிக்கப்பட்ட பல்வேறு உள்ளூர் தயாரிப்புகளுக்கான வர்த்தக மையமாகவும் இருந்து உள்ளது.

புக்கிட் பத்து பகாட் கோயில்[தொகு]

கெடா துவாவில் எஞ்சி இருக்கும் புக்கிட் பத்து பகாட் கோயிலின் அடித்தளம்

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடா_துவா&oldid=3518861" இருந்து மீள்விக்கப்பட்டது