பூஜாங் பள்ளத்தாக்கு
மலேசிய வரலாறு |
---|
பூஜாங் பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Bujang Valley; மலாய்: Lembah Bujang; சீனம்: 布央谷) என்பது மலேசியாவில் உள்ள ஒரு வரலாற்று வளாகமாகும். கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தின், மெர்போக் ஆற்றுப் படுகையில் இந்தப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
லெம்பா பூஜாங் என்று அழைக்கப்படும் இந்தச் சமவெளி, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான தொல்பொருள் தளமாகும். இந்தத் தளம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு; அத்துடன் கி.பி.110-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நினைவுச் சின்னம் ஆகும். ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.[1]
இந்த வரலாற்று வளாகத்தின் வடக்கில் ஜெராய் மலை (Gunung Jerai); தெற்கில் மூடா ஆறு உள்ளன. ஏறக்குறைய 224 சதுர கி.மீ. (86 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
தீபகற்ப மலேசியா எனும் மூவலந்தீவுப் பகுதியின் வடக்கு நிலப் பரப்பில் கெடா மாநிலத்தில் அமைந்துள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் பழைமையானது; மிகவும் புகழ் பெற்றது.
வரலாறு
[தொகு]1936 - 1937-ஆம் ஆண்டுகளில் எச்.ஜி. குவாரிச் வேல்சு (HG Quaritch Wales) என்பவரும்; அவருடைய மனைவி டோரதி வேல்சு (Dorothy Wales) என்பவரும்; பூஜாங் பள்ளத்தாக்கு பகுதிகள் இருப்பதை அகழ்வாராய்ச்சிகள் மூலமாகக் கண்டுபிடித்தார்கள். இவர்களுக்கு அல்சுதாயர் லேம்ப் (Alastair Lamb) எனும் வரலாற்று ஆய்வாளரும் உதவியாக இருந்தார்.
அவர்களின் அகழ்வாராய்ச்சியின் போது நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் மெர்போக், பெங்காலான் பூஜாங் (Pengkalan Bujang) எனும் இடத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
சைத்தியம் எனும் பௌத்தர்களின் வழிபாட்டு மண்டபங்கள்; ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்கால இந்து; பௌத்தக் கோயில்களும் (Chandi) கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தோண்டி எடுக்கும் பணிகளைச் செய்தார்கள். 1974-ஆம் ஆண்டில் மீண்டும் புனரமைப்புகள் செய்யப்பட்டன.
சுங்கை பத்து
[தொகு]சுங்கை பத்து எனும் இடத்தில் பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம் (Bujang Valley Archaeological Museum) உள்ளது. அந்த அருங்காட்சியகம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது.[3] [4]
படகுத்துறை எச்சங்கள், இரும்பு-உருவாக்கும் தளங்கள் மற்றும் கி.பி 110-க்கு முந்தைய களிமண் செங்கல் நினைவுச் சின்னங்கள் போன்றவை கண்டறியப்பட்டன. இவை தென்கிழக்கு ஆசியாவில் பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான கட்டமைப்பாகும்.[5] இந்தப் பகுதி 2,540 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இடிபாடுகளைக் கொண்டது என பதிவு செய்யப்பட்டு உள்ளது.[6]
கடந்த 20 ஆண்டுகளாக, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்; அவர்களின் ஆராய்ச்சிகளுக்காக இந்தப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் தங்களின் தங்கள் பட்டப்படிப்புப் பணிகளை இங்கு செய்து உள்ளனர்.[7][8]
உள்ளூர் ஆட்சியாளர்கள்
[தொகு]பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்த உள்ளூர் ஆட்சியாளர்கள் இந்து-பௌத்தம் கலந்த இந்திய கலாசார அரசியல் பாணிகளைப் பின்பற்றி உள்ளனர். கிழக்கு போர்னியோவில் இருந்த கூத்தாய் பேரரசு (Kutai Kingdom: 350–1605); மேற்கு ஜாவாவில் இருந்த தருமநகரா பேரரசு (Tarumanagara Kingdom: 400–500) பின்பற்றிய கலாசார அரசியல் பாணிகளைப் பூஜாங் ஆட்சியாளர்களும் பின்பற்றி உள்ளனர்.[9]
ஆனால், கூத்தாய் பேரரசு; தருமநகரா பேரரசு; ஆகிய பேரரசுகள் தோன்றுவதற்கு முன்னரே தீபகற்ப மலேசியாவின் பூஜாங் பள்ளத்தாக்கில் இந்திய பௌத்த நாகரிகங்கள் தடம் பதித்து விட்டன.
புயங்கம்
[தொகு]ஏறத்தாழ 4-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்திற்கும்; மேற்கு ஆசியா, ஆசியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாகரிகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே கடல் வழியாக வாணிபம் நடந்து வந்தது.
புயங்கம் (சமசுகிருதம்: Bhujanga) எனும் தமிழ்ச் சொல்லின் திரிபே "பூஜாங்" என்ற சொல். புயங்கம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இந்தப் பள்ளத்தாக்கில் "(Serpent Valley)" உள்ள மெர்போக் ஆறு பாம்பைப் போல் வளைந்து இருப்பதால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் புயங்கம் என்று பெயர் வைத்தனர்.[10][11][12]
ஸ்ரீ விஜய பேரரசு
[தொகு]இந்தத் துறைமுகம் பெரும்பாலும் ஸ்ரீ விஜயா ஆட்சியுடன் தொடர்பு படுத்தப் படுகிறது. பூஜாங் பள்ளத்தாக்கில் சீனா, இந்தியா, மேற்கு ஆசியா போன்ற நாகரிகங்களின் சுட்டாங்கல் (செராமிக்) பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை பௌத்த, இந்து மதங்கள் சம்பந்தப்பட்ட கோயில் கல்வெட்டுகள், கோயில் சிலைகள் போன்றவை ஆகும். இந்த நாகரிகங்கள் மறைந்த கடாரம் வரலாற்றுத் தடத்துடன் தொடர்பு படுத்துப் படுகின்றன.
இன்றைய நிலை
[தொகு]பூஜாங் பள்ளத்தாக்கின் பெரும்பாலான வரலாற்று இணைப்புகள்; அதாவது வரலாற்றுப் படிமங்கள் இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளன. ஏனெனில் பல பழங்காலத்துப் படிமங்கள் மற்றும் பழங்காலத்து எழுத்துக்கள், காலப் பரிணாமங்களினால் சிதைந்து விட்டன.
மரத்தால் செய்யப்பட்ட சில கட்டுமானக் கூரைகள் சிதைந்து போய்விட்டன. 1,200 ஆண்டுகளுக்கும் மேலான கோயில்கள் கூட காலப் பரிணாமங்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவில்லை.[9]
நாட்டுப்புறக் கதைகள்
[தொகு]பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள அருங்காட்சியகத்தில்கூட போதுமான தகவல் படிமங்கள் இல்லை. இந்த அருங்காட்சியகம் முறையாக அமைக்கப்படவில்லை. பூஜாங் பள்ளத்தாக்கின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் மலேசிய அருங்காட்சியகத்தில் (Museum Negara) இருந்து சிங்கப்பூர் அருங்காட்சியகம் (National Museum of Singapore) வரை சிதறிக் கிடக்கின்றன.
பூஜாங் பள்ளத்தாக்கு தொடர்பான நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வாய்வழி வரலாறுகள் உள்ளன. அவை நவமணிகள் நிறைந்த ஓர் அற்புதமான இராச்சியம் அங்கு இருந்தது என்பதைப் பறைசாற்றுகின்றன.[9]
ராஜா பெர்சியூங் சிம்மாசனம்
[தொகு]தென்கிழக்கு ஆசியாவிற்கு வெளியே, பூஜாங் பள்ளத்தாக்கு மற்றும் [[ஜெராய் மலை[[யில் மறைவாக உள்ல குகைகளில் தங்க ரதங்கள் மற்றும் நகைகள் இருப்பதை இந்தியாவின் வாய்வழி வரலாறு தெரிவிக்கின்றது.
10 அடி உயரமுள்ள ராஜா பெர்சியூங் சிம்மாசனம் (Raja Bersiung Throne); சிலைகள் மற்றும் சில அற்புதமான பொருட்களை நேரில் பார்த்ததாகச் சிலர் சொல்கின்றனர்.[9]
கோயில் இடிப்பு
[தொகு]2013-ஆம் ஆண்டில், கோயில் தள எண். 11 (Candi No. 11); என அடையாளம் கொடுக்கப்பட்ட இடத்தில் இருந்த 1,200 ஆண்டுகள் பழமையான ஓர் இந்துக் கோயில்; ஒரு நில மேம்பாட்டாளரால் இடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.[13]
இந்தத் தளத்திற்கு 11-ஆவது தளம் (Candi Sungai Batu in Lembah Bujang, Kedah) என்று பெயர். யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியத் தளம். அதுவே பூஜாங் வெளியில் உடைக்கப்பட்ட மிகப் பழைமையான உலகப் பாரம்பரியத் தளம் ஆகும்.
கோயில் தள எண். 11 என்பது கெடா துவா (Old Kedah) இராச்சியத்தின் மிகப் பழமையான கோயில் தளங்களில் ஒன்றாகும். மேலும் அங்கு பதிவுசெய்யப்பட்ட 17 கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[14]
சர்ச்சைகளும் விமர்சனங்களும்
[தொகு]இந்த இடிபாட்டிற்கு எதிராகப் பொது மக்கள் விமர்சனங்கள் செய்தனர். அவற்றை எதிர்கொள்ளும் வகையில்; கெடா மாநில அரசு (Kedah State Government), அந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் எதையும் செய்ய இயலாது என்றும்; மேலும் அந்த இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும்; கூறி பழியைத் திசை திருப்ப முயன்றது.[15]
அந்தச் சர்ச்சைக்குப் பிறகு, பூஜாங் பள்ளத்தாக்கை ஒரு பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க மலேசியச் சுற்றுலா பாரம்பரிய அமைச்சகம் (Tourism and Heritage Ministry) ஒப்புக் கொண்டது.[16]
பூஜாங் பள்ளத்தாக்கு காட்சியகம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Bujang Valley impetus to tourism, By Subhadra Devan, 2010/09/19".
- ↑ Wahab, Mohd Rohaizat Abdul; Zakaria, Ros Mahwati Ahmad; Hadrawi, Muhlis; Ramli, Zuliskandar (2018-03-07). Selected Topics on Archaeology, History and Culture in the Malay World (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-10-5669-7.
- ↑ Kathirithamby-Wells, J. (1990). The Southeast Asian Port and Polity: Rise and Demise (in ஆங்கிலம்). Singapore University Press, National University of Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-69-141-7.
- ↑ Malaysia, Persatuan Sejarah (1980). Bujang Valley (in ஆங்கிலம்). Persatuan Sejarah Malaysia.
- ↑ Mok, Opalyn (9 June 2017). "Archaeologists search for a king in Sungai Batu | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "New interest in an older Lembah Bujang, 2010/07/25". Archived from the original on 29 June 2011.
- ↑ Chia, Stephen (2017), "A History of Archaeology in Malaysia", Handbook of East and Southeast Asian Archaeology, New York, NY: Springer New York, pp. 125–141, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4939-6521-2_12, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4939-6519-9, பார்க்கப்பட்ட நாள் 2021-01-20
- ↑ "Lembah Bujang". www.trekearth.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ 9.0 9.1 9.2 9.3 "Bujang Valley Museum". www.photodharma.net. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ http://veda.wikidot.com/an-archaeological-region-older-than-angkor-wat
- ↑ http://www.tamilvu.org/library/dicIndex.htm
- ↑ http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/remnants-of-a-relationship/article582099.ece
- ↑ "Centuries-old temple ruins in Bujang Valley furtively destroyed". 1 December 2013.
- ↑ Murad, Dina. "Candi controversy: Bulldozing 1,000 years of history - Nation - The Star Online".
- ↑ "After uproar, Kedah scrambles bid to salvage Lembah Bujang ruins". 1 December 2013.
- ↑ "Candi controversy: Ministry has agreed to consider gazetting Lembah Bujang as heritage site, says Mukhriz - Nation - The Star Online". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பூஜாங் பள்ளத்தாக்கு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பூஜாங் பள்ளத்தாக்கு சுற்றுச்சூழல் சுற்றுலா மேலாண்மை வாரியம்
- சுற்றுலா மலேசியா - பூஜாங் பள்ளத்தாக்கு பரணிடப்பட்டது 2019-06-06 at the வந்தவழி இயந்திரம்
- பூஜாங் பள்ளத்தாக்கின் பண்டைய இராச்சியம்[தொடர்பிழந்த இணைப்பு]
- பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம், புக்கிட் பத்து பகாட்
- லெம்பா பூஜாங்: காணாமல் போன இராச்சியம்
செய்திக் கட்டுரைகள்
[தொகு]- "Lobbying Unesco to recognise Bujang Valley as world heritage site". New Straits Times (online). 2019-04-25. https://www.nst.com.my/news/nation/2019/04/482880/lobbying-unesco-recognise-bujang-valley-world-heritage-site.