அச்சே சுல்தானகம்
அச்சே சுல்தானகம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1496–1903 | |||||||||
கொடி | |||||||||
தலைநகரம் | குதாராஜா அல்லது பந்தர் அச்சே தாருசலாம் (இன்றைய பண்டா அச்சே) | ||||||||
பேசப்படும் மொழிகள் | அச்சே, மலாய், அரபு | ||||||||
சமயம் | இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
சுல்தான் | |||||||||
• 1496-1528 | அலீ முகாயத் சேக் | ||||||||
• 1874-1903 | முகம்மது தாவூத் சேக் | ||||||||
வரலாறு | |||||||||
• முதலாவது சுல்தானின் முடிசூடல் | 1496 | ||||||||
1903 | |||||||||
நாணயம் | அச்சே தங்க, வெள்ளி நாணயங்கள் | ||||||||
|
இந்தோனேசிய வரலாறு ஒரு பகுதி |
---|
மேலும் பார்க்க: |
வரலாற்றுக்கு முன் |
பண்டைய அரசுகள் |
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு) |
தருமநகரா (358–669) |
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்) |
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்) |
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்) |
சுந்தா அரசு (669–1579) |
மெடாங்க அரசு (752–1045) |
கெடிரி அரசு (1045–1221) |
சிங்காசாரி அரசு (1222–1292) |
மயாபாகித்து (1293–1500) |
முசுலிம் அரசுகளின் எழுச்சி |
இசுலாத்தின் பரவல் (1200–1600) |
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்) |
மலாக்கா சுல்தானகம் (1400–1511) |
தெமாகு சுல்தானகம் (1475–1548) |
அச்சே சுல்தானகம் (1496–1903) |
பந்தான் சுல்தானகம் (1526–1813) |
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்) |
ஐரோப்பியக் குடியேற்றவாதம் |
போர்த்துக்கேயர் (1512–1850) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942) |
இந்தோனேசியாவின் தோற்றம் |
தேசிய விழிப்புணர்வு (1908–1942) |
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45) |
தேசியப் புரட்சி (1945–50) |
இறைமையுள்ள இந்தோனேசியா |
தாராளமய மக்களாட்சி (1950–57) |
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65) |
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66) |
புத்தாக்கம் (1966–98) |
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்) |
அச்சே சுல்தானகம் (Aceh Sultanate) எனப்படும் அச்சே தாருசலாம் இராச்சியம் இன்றைய இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவின் வடகோடிக்கருகேயுள்ள அச்சே மாநிலத்தில் அமைந்திருந்தது. பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் அச்சே சுல்தானகம் அப்பகுதியின் வலு மிக்க அரசாகத் திகழ்ந்தது. அதன் தலைநகராகக் குதராசா எனப்பட்ட இன்றைய பண்டா அச்சே திகழ்ந்தது.
அக்காலத்தில் மலாக்கா நீரிணையூடான மிளகு மற்றும் வெள்ளீய ஏற்றுமதிக்கான வர்த்தகப் போட்டி இருந்தது. இந்த ஆதிக்கப் போட்டியில் மலாயத் தீபகற்கத்தில் திகழ்ந்த ஜொகூர் சுல்தானகம், மலாக்காவில் ஆட்சி செலுத்திய போர்த்துக்கல் ஆகியவற்றிற்கு அச்சே சுலதானகம் போட்டியாக இருந்ததுடன் அதில் வெற்றியீட்டியும் வந்தது.
அச்சே சுல்தானகம் அதன் இராணுவ வலிமை காரணமாக மட்டுமன்றி அதில் காணப்பட்ட இசுலாமிய அறிவு வளங்கள் மற்றும் வணிக வெற்றிகள் காரணமாகவும் சிறப்பு பெற்றது.
தோற்றமும் எழுச்சியும்
[தொகு]1471 ஆம் ஆண்டு வியட்நாமியரால் சம்பா இராச்சியத்தின் தலைநகரான விசய சம்பா அழிக்கப்பட்டது எனவே சம்பா இராச்சியத்தின் அரசர் சேக் பாவு குபா என்பவர் தம் அரசுக்கு உட்பட்டிருந்த அச்சே பகுதியில் தலைநகரை அமைக்க எண்ணினார்.
அங்கு தனது மகன் 'சேக் பாவு லிங்' என்பவரை நியமித்தார். இதிலிருந்தே அச்சே சுலதானகத்தின் வரலாறு தோற்றம் பெறுகிறது.
அதன் பின்னர் வந்த அச்சே அரசின் ஆட்சியாளர் இசுலாம் மதத்தைத் தழுவினார்.[1] 15 ஆம் நூற்றாண்டில் இதன் மன்னர் அலீ முகாயத் சேக் என்பவரால் இது சுல்தானகமாகியது.
அலாவுத்தீன் அல்-கக்கார்
[தொகு]அவர் 1520-ஆம் ஆண்டு வடக்கு சுமத்திராவில் தன்னுடைய அதிகாரத்தை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[2] டெலி சுல்தானகம், பெடிர், பசாய் என்பவற்றை வெற்றிகொண்ட அவர் சுமத்திராவில் நிலவிய அரு நாட்டு அரசையும் தாக்கினார்.
அவரது மகன் அலாவுத்தீன் அல்-கக்கார் தன்னுடைய அதிகாரத்தைத் தென் சுமத்திரா வரை விரிவாக்கினார். சொகோர் சுல்தானகம், மலாக்கா என்பவற்றை அவர் தொடர்ச்சியாகத் தாக்கிய போதும் மலாக்கா நீரிணையில் கேந்திர நிலையமொன்றைப் பெறுவதில் குறைந்தளவிலேயே வெற்றி பெற்றார்.[3]
சுல்தான் இசுகந்தர் மூடா
[தொகு]அவருக்கு உதவியாக உதுமானியப் பேரரசு, 15 கப்பல்களில் ஆட்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற சுடுகலன்களை குர்தொக்லு கிசிர் ரைசு என்பவரது தலைமையில் அனுப்பி வைத்தது.[1] தென்கிழக்கு ஆசிய இசுலாமிய சுல்தானகங்கள் சுடுகலன்களைப் பயன்படுத்தத் தொடங்கியமைக்கு அதுவே அடிப்படையாகும்.
அச்சே சுல்தானகத்தில் நிலவிய உள்நாட்டுக் குழப்பங்கள் வலிமை மிக்க ஆட்சியாளர் ஒருவர் உருவாவதைத் தடுத்தன. 1607 ஆம் ஆண்டு சுல்தான் இசுகந்தர் மூடா ஆட்சிக்கு வரும் வரை இக்குழப்பங்கள் நீடித்தன. சுமாத்திராவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் தன்னுடைய அதிகாரத்தை விரிவாக்கிய சுல்தான் இசுகந்தர் மூடா மலாயத் தீபகற்பத்தில் வெள்ளீய உற்பத்தியில் முன்னணியில் இருந்த பகாங் பகுதியையும் வெற்றி கொண்டார்.
சுல்தான் இசுகந்தர் தானி
[தொகு]1629 ஆம் ஆண்டு அவர் மலாக்கா மீது போர் தொடுத்தபோது அவரது வலிமை மிக்க கப்பற் படையின் வன்மை அழிந்தது. அப்போரில் போர்த்துக்கேயரும் சொகோர் சுல்தானகமும் இணைந்து அவரை எதிர்த்தன. அவரது படைக் கப்பல்கள் அனைத்தையும் அழித்ததுடன் அவரது படையின் 19000 வீர்ரகள் கொல்லப்பட்டதாகப் போர்த்துக்கேய தகவல்கள் கூறுகின்றன.[4][5]
எனினும், அதே ஆண்டில் கடாரத்தின் மீது போர் தொடுத்து வெற்றி கொண்டதன் மூலம் அச்சே சுல்தானகம் தனது படை வலிமையைக் காட்டியது.[5] சுல்தான் இசுகந்தர் முடாவின் மருமகனும் பகாங் இளவரசருமான இசுகந்தர் தானி அவரைத் தொடர்ந்து ஆட்சியிலமர்ந்தார்.
சுல்தானா ஆட்சி
[தொகு]இசுகந்தர் தானி தனது ஆட்சியின்போது அச்சே சுல்தானகத்தின் உள்ளக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.
சுல்தான் இசுகந்தர் தானியின் ஆட்சியைத் தொடர்ந்து அச்சே சுல்தானகத்தை ஒரு பெண்ணரசி (சுல்தானா) ஆட்சி செய்தார். அப்போது, அச்சே சுல்தானகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அரசுகளின் மக்கள்[5] சுதந்திர வேட்கையுற்று ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இதனால் அச்சே சுல்தானகம் வலுவிழக்கத் தொடங்கியது.
அதே வேளை அப்பகுதியிலிருந்த ஏனைய அரசுகள் வலுப்பெறத் தொடங்கின. அதனால் சுல்தான் பதவி வெறுமனே பெயரளவிலானதாக மாறியது.[6] 1680-களில் அங்கு சென்ற பாரசீகப் பயணி ஒருவர் சுமத்திராவைப் பற்றி விவரிக்கையில், "அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தனியான அரசரோ ஆளுநரோ இருந்தார்.
அங்கிருந்த ஆட்சியாளர் எவரும் வேறெவருக்கும் திறை செலுத்தாமல் தம் சுதந்திரத்தைப் பேணிக் கொண்டிருந்தனர்"[7] என எழுதுகிறார்.
கலாச்சாரம்
[தொகு]அச்சே சுல்தானகம் தென்கிழக்காசியாவின் முதலாவது முஸ்லிம் அரசாகிய பசாய் வழியே இசுலாமியப் பணியில் ஈடுபட்டது. ரோமன் கத்தோலிக்கரான போர்த்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றி ஆட்சி செய்த போதும் மலாக்காவில் தொடர்ந்த இசுலாமியப் பிரச்சாரம் அச்சே சுல்தானகத்தைப் பெரிதும் கவர்ந்தது.
இசுலாமிய அறிவுத் துறையில் சிறந்து விளங்கிய அச்சே சுல்தானகம் புனித குர்ஆன் மற்றும் இசுலாமிய நூல்களை மலாய் மொழியில் பெயர்க்கும் பணியையும் மேற்கொண்டது. அச்சே சுல்தானகம் தன்னை மக்காவின் தாழ்வாரமென அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கண்டது.[1] அம்சா பன்சுரி, சம்சுத்தீன், அப்துர் ரவூப், நூருத்தீன் அர்-ரனீரீ ஆகியோர் அச்சே சுல்தானகத்தின் சிறந்த அறிஞர்களாகத் திகழ்ந்தனர்.[8]
பொருளாதாரம்
[தொகு]மிளகு, சாதிக்காய், கிராம்பு, பாக்கு[9] போன்றவற்றை ஏற்றுமதி செய்து வந்த அச்சே சுல்தானகம், 1617 ஆம் ஆண்டு பகாங் அரசை வெற்றி கொண்ட பின்னர் வெள்ளீய ஏற்றுமதியிலும் முன்னின்றது. குறைந்த வரி மற்றும் தங்க நாணயப் பயன்பாடு அதன் பொருளாதார வன்மையைக் கூட்டின.[10]
எனினும், அச்சே அரசின் இராணுவ, பொருளாதார தேவைகளை நன்கு நிறைவு செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தி போதியளவாக இல்லாதிருந்தமையால் அதன் பொருளாதாரம் சில வேளைகளில் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது.[11]
பதினேழாம் நூற்றாண்டில் வலிமை குன்றியிருந்த அச்சே சுல்தானகம் 1641 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் மலாக்காவை வெற்றிகரமாக முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. அப்பகுதியில் தனது இராணுவ, பொருளாதார வலிமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் வாணிகத்தில் ஈடுபட்டது.[7]
டச்சு வெற்றி
[தொகு]1820களில் உலகின் மிளகு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட அளவு அச்சே சுல்தானகத்தினுள் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் புதிய தலைவர் துவாங்கு இப்றாகீம் தன் அதிகாரத்தை ஓரளவு வலிதாக்கிக்கொள்ளவும் சுல்தானுக்குப் பெயரளவிலேயே கீழடங்கியிருந்த ஆனால் மிளகு உற்பத்தியில் செழித்த இரு சிற்றரசுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
அவர் தன்னுடைய சகோதரர் சுல்தான் முகம்மது சேக் என்பவரது ஆட்சியின்போது அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அதன் பின்னர் பதவிக்கு வந்த சுலைமான் சேக் (1838-1857) என்பவரின் ஆட்சிப் பகுதி முழுவதும் அதிகாரம் செலுத்தினார். அதன் பின்னர் அவரே பதவியேற்றுச் சுல்தான் அலீ அலாவுத்தீன் மன்சூர் சேக் (1857–1870) என்ற பெயரில் ஆட்சி செலுத்தினார்.
ஒல்லாந்தர் தம் ஆளுமையைச் சுமத்திராவின் வடக்கில் நிலைநிறுத்தப் பாடுபட்ட வேளை அவர் தன் அதிகாரத்தைச் சுமத்திரா தீவின் தெற்கு வரை விரிவாக்கினார்.[12] அது வரை அச்சே சுல்தானகம் ஒல்லாந்தரின் கைகளில் வீழ்ந்து விடாதிருப்பதற்காக அதற்குப் பாதுகாப்பளித்து வந்த பிரித்தானியா, தங்கக் கரைப் பகுதியில் ஒல்லாந்தருடன் அதிகாரப்போட்டியைத் தவிர்ப்பதற்காக அவர்களுடன் ஒப்பந்தம் செய்து வட சுமத்திராவிலும் அச்சே பகுதியிலும் ஒல்லாந்தரின் நடவடிக்கைகளைப் பாராதிருந்து விட்டது.
அதன் பின்னர் ஒல்லாந்தர் 1873 இல் அச்சே மீது போர்ப் பிரகடனம் செய்தனர். ஒல்லாந்தர் அச்சே போர் என அழைக்கப்படும் அப்போருக்கு ஆயத்தம் செய்த வேளை அப்போதைய சுல்தான் மகுமூத் சேக் சர்வதேச உதவியை வேண்டினார். ஆனால் எவரது உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை.[13]
1874 இல் அச்சே சுல்தான் தன் தலைநகரத்தைக் கைவிட்டு மலைப் பகுதிக்குத் தப்பிச் சென்றார். ஒல்லாந்தர் அச்சே சுல்தானகத்தைத் தம் ஆட்சியுடன் இணைத்துவிட்டதாக அறிவித்தனர். அப்போது வாந்திபேதி ஏற்பட்டு இரு பக்கமும் இருந்த படைவீரர் பலரும் மடிந்தனர். அச்சே சுல்தானும் நோயினால் இறந்தார்.
உடனடியாக அச்சே மக்கள் சுல்தானின் பேரரான துவாங்கு இப்றாகீம் என்பவரைச் சுல்தானாகப் பிரகடனம் செய்தனர். அச்சே துறைமுக அதிகாரிகள் ஒல்லாந்தருக்குப் பணிந்தவாறு காட்டிக்கொண்ட போதும் அவர்களை எதிர்ப்பதற்காகத் தம் வருமானத்தை மறைமுகமாக வழங்கி வந்தனர்.[14]
எனினும், இறுதியில் அவர்களில் பலர் ஒல்லாந்தருடன் சமரசம் செய்து கொண்டனர். ஒல்லாந்தர் அவர்களது உதவியுடன் அச்சேயில் ஓரளவு நிலையான அரசை அமைத்ததுடன் 1903 இல் அச்சே சுல்தானையும் சரணடையச் செய்தார். அச்சே சுல்தான் 1907 இல் இறந்த பின்னர் அவருடைய வாரிசாக எவரும் அறிவிக்கப்படாவிடினும் ஒல்லாந்தர் மீதான எதிர்ப்பு தொடர்ந்தது.[15]
அவ்வெதிர்ப்பு இயக்கங்களில் சுல்தானின் கடைசி வாரிசுகளில் ஒருவரான அசன் டி திரோ என்பவர் அச்சே சுதந்திர இயக்கம் என்பதைத் தோற்றுவித்தவர் ஆவார்.[16]
அச்சே சுல்தான்கள்
[தொகு]- 1496-1528 அலீ முகாயத் ஷாஹ்
- 1528-1537 சலாகுத்தீன்
- 1537-1568 அலாவுத்தீன் அல்-கஹ்ஹார்
- 1568-1575 ஹுசைன் அலீ முதலாம் ரிஆயத் ஷாஹ்
- 1575 முடா
- 1575-1576 ஸ்ரீ அலாம்
- 1576-1577 சைனுல் ஆபிதீன்
- 1577-1589 இரண்டாம் அலாவுத்தீன் முதலாம் மன்சூர் சேக்
- 1589-1596 புயோங்
- 1596-1604 மூன்றாம் அலாவுத்தீன் ரிஆயத் சேக் சையித் அல்-முகம்மில்
- 1604-1607 இரண்டாம் அலீ ரிஆயத் சேக்
- 1607-1636 இசுகந்தர் முடா (முதலாம் இசுகந்தர்)
- 1636-1641 இசுகந்தர் தானி (இரண்டாம் இசுகந்தர்)
- 1641-1675 ராது சபியதுத்தீன் தாசூல் அலாம்
- 1675-1678 ராது நகியதுத்தீன் நூருல் அலாம்
- 1678-1688 ராது சகியதுத்தீன் இனாயத் சேக்
- 1688-1699 ராது கமலத் சேக் சீனதுத்தீன்
- 1699-1702 பத்ருல் அலாம் சரீப் காசிம் சமாலுத்தீன்
- 1702-1703 பெர்காசா அலாம் சரீப் லம்துயி சேக் சகான் பெர்தௌலத்
- 1703-1726 சமாலுல் அலாம் பத்ருல் முனீர்
- 1726 சௌகருல் அலாம் அமீனுத்தீன்
- 1726-1727 சம்சுல் அலாம்
- 1727-1735 நான்காம் அலாவுத்தீன் அகுமத் சேக்
- 1735-1760 ஐந்தாம் அலாவுத்தீன் சகான் சேக்
- 1760-1781 முதலாம் மகுமூத் சேக்
- 1764-1785 பத்ருத்தீன் சேக்
- 1775-1781 முதலாம் சுலைமான் சேக்
- 1781-1795 ஆறாம் அலாவுத்தீன் முதலாம் முகம்மது தாவூத் சேக்
- 1795-1815 ஏழாம் அலாவுத்தீன் சௌகருல் அலாம்
- 1815-1818 சரீப் சைபுல் அலாம்
- 1818-1824 ஏழாம் அலாவுத்தீன் சௌகருல் அலாம் (இரண்டாவது தடவை)
- 1824-1838 இரண்டாம் முகம்மது சேக்
- 1838-1857 இரண்டாம் சுலைமான் சேக்
- 1857-1870 இரண்டாம் மன்சூர் சேக்
- 1870-1874 இரண்டாம் மகுமூத் சேக்
- 1874-1903 மூன்றாம் முகம்மது தாவூத் சேக் சொகான் பெர்தௌலத்
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Barwise and White, 114
- ↑ Ricklefs, 32
- ↑ Ricklefs, 33
- ↑ Ricklefs, 34
- ↑ 5.0 5.1 5.2 *D. G. E. Hall, தென்கிழக்காசிய வரலாறு. லண்டன்: மெக்மிலன், 1955.
- ↑ Ricklefs, 36
- ↑ 7.0 7.1 Barwise and White, 117
- ↑ Ricklefs, 51
- ↑ Barwise and White, 115-116
- ↑ Barwise and White, 116
- ↑ Ricklefs, 35
- ↑ Ricklefs, 143
- ↑ Ricklefs, 144
- ↑ Ricklefs, 145
- ↑ Ricklefs, 146
- ↑ "ஆட்பக்கம்: அச்சே பிரிவினைவாதிகள்". பிபிசி செய்திகள். 2005-01-24. பார்க்கப்பட்ட நாள் 2007-01-09.
கூடுதல் தகவல்கள்
[தொகு]- J.M. Barwise and N.J. White. A Traveller’s History of Southeast Asia. New York: Interlink Books, 2002.
- M.C. Ricklefs. A History of Modern Indonesia Since c. 1300, 2nd ed. Stanford: Stanford University Press, 1994.