தெர்னாத்தே சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசிய வரலாறு
ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமநகரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுந்தா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கெடிரி அரசு (1045–1221)
சிங்காசாரி அரசு (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முசுலிம் அரசுகளின் எழுச்சி
இசுலாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தான் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத்தே சுல்தானகம் இந்தோனேசியத் தீவுகளின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும் பிலிப்பீன்சின் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தெர்னாத்தே சுல்தானகம் அக்காலத்தில் உலகிலேயே ஆகக் கூடியளவு கிராம்பு உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்ந்ததுடன், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் பிராந்திய வல்லரசாகவும் திகழ்ந்தது.

வரலாறு[தொகு]

குடியேற்ற காலத்துக்கு முற்பட்ட வரலாறு[தொகு]

தொடக்கத்தில் இவ்வரசின் பெயர் காப்பி இராச்சியம் என்றே இருந்தது. பின்னர் இதன் தலைநகரமான தெர்னாத்தே நகரின் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. தெர்னாத்தே சுல்தானகமும் இதன் அண்டைய அரசாகிய திடோரே சுல்தானகமும் இணைந்த பகுதியே உலகின் மிக முக்கியமான கிராம்பு உற்பத்திப் பகுதிகளாக இருந்தன. அதன் காரணமாக, இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களே இந்தோனேசியத் தீவுகளிலேயே செல்வம் மிக்கோராயும் வல்லமை பொருந்தியோராயும் விளங்கினர். எனினும் இவ்விரு அரசுகளினதும் செல்வத்திற் பெரும் பகுதி ஒன்றுக்கொன்று போரிடுவதிலேயே வீணாகியது. 19 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் மலுக்கு தீவுகளைத் தமது குடியேற்றத்தின் கீழ்க் கொண்டுவந்த வேளையில் தெர்னாத்தே அரசின் சுல்தான்கள் அம்பொன், சுலாவெசி, பப்புவா ஆகியவற்றை உள்ளடக்கிய பேரரசைக் கொண்டிருந்தனர்.[1]

வணிகம் சார் பண்பாட்டைக் கொண்டிருந்ததன் விளைவாக, இப்பகுதில் இசுலாமிய சமயம் பரவிய முதல் இடங்களுள் தெர்னாத்தே அரசும் ஒன்றாகும். சாவகத்திலிருந்தே இங்கு 15 ஆம் நூற்றாண்டில் இசுலாம் பரவியதெனக் கருதப்படுகிறது. தொடக்கத்தில் தெர்னாத்தே அரசின் ஆட்சியாளர் குடும்பத்தினரே இசுலாத்தைத் தழுவிக் கொண்டனர். அதன் பின்னரே சிறிது சிறிதாக ஏனைய மக்களிடம் பரவியது.

தெர்னாத்தே அரச குடும்பம் மன்னர் மர்ஹூம் (1465–1486) ஆட்சி செய்த காலத்திலேயே இசுலாத்தைத் தழுவியது. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவரது மகன் சைனுல் ஆபிதீன் (1486–1500) இசுலாமிய சட்டத்தையே தெர்னாத்தேயின் சட்டமாக்கியதுடன், தன்னுடைய அரசை ஓர் இசுலாமிய சுல்தானகமாக மாற்றினார். அதுவரை கொலானோ (மன்னர்) என அழைக்கப்பட்ட அதன் ஆட்சியாளர், அப்போது முதல் சுல்தான் என அழைக்கப்பட்டார்.

தெர்னாத்தே சுல்தானகத்தின் அதிகாரம் மிக உச்ச நிலையில் இருந்த காலம், பதினாறாம் நூற்றாண்டில் சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) ஆட்சி செய்த காலமாகும். அக்காலத்திலேயே இவ்வரசு சுலாவெசியின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும், அம்பொன், செராம் பகுதி, திமோர் தீவு, மிண்டானாவோ தீவின் பெரும் பகுதி, பப்புவா தீவின் பகுதிகள் என்பவற்றைத் தன்னுடைய அதிகாரத்தின் கீழ்க் கொண்டிருந்தது. இவ்வரசு இதனை அடுத்திருந்த திடோரே சுல்தானகத்துடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. வரலாற்றாளரான லியொனார்டு அண்டாயாவின் கூற்றின் படி, மலுக்கு தீவுகளின் வரலாற்றில் தெர்னாத்தே சுல்தானகம் திடோரே சுல்தானகத்துடன் "இரட்டைப்" போட்டியைக் கொண்டிருந்தது.

ஐரோப்பியர்[தொகு]

தெர்னாத்தேயில் தங்கிய முதலாவது ஐரோப்பியக் குடியேற்றவாத இனத்தினர் போர்த்துக்கேயரான பிரான்சிசுக்கோ செராயோ என்பவரின் குழுவினர் ஆவர். மலாக்காவிலிருந்து அவர்கள் வெளிச் சென்றிருந்த போது செராம் என்னுமிடத்துக்கு அருகில் அவர்களது கப்பல் உடைந்து போயிருந்த வேளை, உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அவ்வாறு கரையொதுங்கியமையைக் கேள்விப்பட்ட அப்போதைய ஆட்சியாளரான சுல்தான் பயானுல்லாஹ் (1500–1522), அதிகாரம் மிக்க வெளிநாட்டு அரசொன்றுடன் கூட்டுச் சேரும் வாய்ப்பை உணர்ந்து, 1512 இல் அவர்களைத் தெர்னாத்தேவுக்கு வருமாறு அழைத்தார். அத்தீவில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்குப் போர்த்துக்கேயர் அனுமதிக்கப்பட்டனர். அதன் கட்டுமாணம் 1522 இல் தொடங்கியது. எனினும் அது முதலே தெர்னாத்தேவாசிகளுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் சிக்கல்கள் எழத் தொடங்கின.

ஐரோப்பாவிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்த ஒரு வெளிக் காவலரண் திக்கற்றிருந்தோரை மட்டுமே கவர்வதாக இருந்தது. அத்தகைய ஒரு மோசமான சூழ்நிலையில், போர்த்துக்கேயர்கள் அத்தீவைக் கிறித்தவமயப்படுத்த முனைந்தமையானது, தெர்னாத்தேவின் முஸ்லிம் ஆட்சியாளருடனான உறவை மோசமடையச் செய்தது.[2] 1535 இல் தெர்னாத்தே சுல்தான் தபரீஜீ போர்த்துக்கேயரால் பதவியிறக்கப்பட்டு கோவாவுக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவரைக் கிறித்தவராக மாற்றி டொம் மனுவேல் என்று பெயரிடப்பட்டது. அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லையெனக் கூறிய போர்த்துக்கேயர் அதன் பின்னர் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகத் தெர்னாத்தேவுக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவரது பயணத்தின் இடைவழியில் 1545 ஆம் ஆண்டு மலாக்காவில் அவர் இறந்து விட்டார். எனினும் அவர் அம்பொன் தீவைப் போர்த்துக்கேயரிடம் தாரை வார்த்துவிட்டார். அதன் பின்னர், தெர்னாத்தேயில் ஆட்சியிலிருந்த அதன் சுல்தான் ஹைருன் என்பவரைப் போர்த்துக்கேயர்கள் கொலை செய்தமையைத் தொடர்ந்து, தெர்னாத்தேவாசிகளால் ஐந்து ஆண்டுகள் முற்றுகையிடப்பட்ட போர்த்துக்கேயர்கள் 1575 இல் இவ்வரசை விட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். எனினும் போர்த்துக்கேயர் வசமிருந்த அம்பொன் தீவு மலுக்குவில் போர்த்துக்கேயரின் செயற்பாடுகளுக்குக் களமமைத்தது. சுல்தான் பாபுல்லாஹ் (ஆட்சி 1570–1583) மற்றும் அவரது மகன் சஈது ஆகியோரின் கீழ் இசுலாமிய அரசாகிய தெர்னாத்தே சுல்தானகம் வல்லமை மிக்கதாகவும் போர்த்துக்கேயருக்கு எதிராக, மிகக் கடுமையானதாகவும் விளங்கியமையால் இப்பகுதியில் ஐரோப்பியரின் ஆதிக்கம் வலுவற்றிருந்தது.[3]

1606 இல் எசுப்பானியப் படைகள் முன்னைய போர்த்துக்கேயக் கோட்டையைக் கைப்பற்றியதுடன், தெர்னாத்தே சுல்தானையும் அவரசு பரிவாரத்தையும் மணிலாவுக்கு நாடுகடத்தினர். 1607 இல் மீண்டும் தெர்னாத்தேவுக்கு வந்த ஒல்லாந்தர், தெர்னாத்தேயரின் ஒத்துழைப்புடன் மலாயோ என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினர். அத்தீவு இரண்டு வல்லரசுகளிடம் பிரிக்கப்பட்டது: எசுப்பானியர்கள் திடோரே அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த அதேவேளை, ஒல்லாந்தர் தெர்னாத்தேயினருடன் கூட்டுச் சேர்ந்தனர். தெர்னாத்தே ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஒல்லாந்தர்கள் பயன் மிக்கோராகவும் அல்லது வரவேற்புப் பெறுவோராகவும், திடோரே அரசுக்கும் எசுப்பானியருக்கும் எதிராகப் படைத்துறை வலிமையை வழங்குவோராகவும் இருந்தனர். குறிப்பாகச் சுல்தான் ஹம்சா (1627–1648) என்பவரின் கீழ், தெர்னாத்தே தனது ஆள்புலத்தை விரிவாக்கியதுடன், எல்லைகளிலே தனது அதிகாரத்தை வலுக்கூட்டிக் கொண்டது. சில கலவரங்களை அடக்கியமைக்குப் பரிசாகத் தெர்னாத்தே சுல்தான் ஹம்சாவும், அவரைத் தொடர்ந்து ஆட்சியாளரான அவரது பேரர் சுல்தான் மந்தார் ஷாஹ் (1648–1675) என்பவரும் ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனிக்குச் (VOC) சில தீவுகளைத் தாரை வார்த்துக் கொடுத்த போதிலும், இவ்வரசினுள் ஒல்லாந்தரின் அதிகாரம் மட்டுப்பட்டதாகவே இருந்தது. 1663 இல் எசுப்பானியர்கள் மலுக்கு தீவுகளைக் கைவிட்டு விட்டனர்.

தெர்னாத்தே அரசை அதன் முன்னைய சிறப்பில் விளங்கச் செய்யவும், மேற்கத்தியரை வெளியேற்றவும் விரும்பிய சுல்தான் சிபோரி (1675–1691) ஒல்லாந்தருடன் போர்ப் பிரகடனம் செய்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் தெர்னாத்தேயின் அதிகாரம் சுருங்கியதுடன், அவரது அதிகாரத்துக்குட்பட்ட நிலங்களில் பல பகுதிகளை ஒல்லாந்தருக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறும் அநீதியான ஓர் ஒப்பந்தத்திற் கைச்சாத்திடுமாறு 1683 இல் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அவ்வொப்பந்தத்தின் காரணமாக, ஒல்லாந்தருடன் சமநிலையில் இருந்த தெர்னாத்தே அரசு, ஒல்லாந்தரின் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசாகியது. எனினும், தெர்னாத்தே சுல்தான்களோ அதன் குடிமக்களோ ஒருபோதும் ஒல்லாந்தரின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு ஆட்படவில்லை.

18 ஆம் நூற்றாண்டில், தெர்னாத்தே அரசு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தது. அப்போது ஒல்லாந்தர்கள் வடக்கு மொலுக்கா தீவுகளின் முழு வணிகத்தையும் தம் கட்டுப்பாட்டிற் கொண்டுவர முனைந்தனர். 19 ஆம் நூற்றாண்டாகும் போது, வாசனைத் திரவிய வணிகம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாக, இப்பகுதி நெதர்லாந்தின் குடியேற்றவாத அரசின் நடுநிலையமாக இருக்கும் தன்மை குறைந்தது. எனினும் வேறொரு குடியேற்றவாத வல்லரசு இப்பகுதியைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, ஒல்லாந்தர் தம் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். 1800 ஆம் ஆண்டு ஒல்லாந்து அரசினால் ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனி தேசியமயமாக்கப்பட்ட பின்னர், தெர்னாத்தேயானது மொலுக்கா அரசாங்கம் (Gouvernement der Molukken) என்பதன் பகுதியாகியது. 1810 இல் தெர்னாத்தே பிரித்தானியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போதிலும், 1817 இல் ஒல்லாந்தரிடம் கையளிக்கப்பட்டது. 1824 இல் ஹல்மாஹெரா, நியூகினித் தீவின் மேற்குப் பகுதி, சுலாவெசியின் கிழக்குப் பகுதி என்பவற்றை உள்ளடக்கிய குடியேற்றத்தின் (நிருவாகப் பகுதியின்) தலைநகராக இது விளங்கியது. 1867 ஆகும் போது, ஒல்லாந்தராற் கைப்பற்றப்பட்ட நியூகினித் தீவுப் பகுதிகள் அனைத்தும் இக்குடியேற்றத்துடன் இணைக்கப்பட்டன. பின்னர் இதன் பகுதிகள் அனைத்தும் படிப்படியாக அம்பொன் (அம்பொனியா) பகுதியுடன் சேர்க்கப்பட்டு, 1922 இல் அம்பொன் குடியேற்றத்துடன் முற்றாக இணைக்கப்பட்டது.

சுல்தான் ஹாஜி முகம்மது உஸ்மான் (1896–1914) இப்பகுதியில் கலவரங்களைத் தூண்டி விடுவதன் மூலம் ஒல்லாந்தரை வெளியேற்றவிட ஓர் இறுதி முயற்சியை மேற்கொண்டார். அவர் அதில் தோல்வியுற்ற பின்னர் பதவியிறக்கப்பட்டு, அவரது உடைமைகள் ஒல்லாந்தரால் அபகரிக்கப்பட்டன. ஒல்லாந்தரால் பண்டுங் நகருக்கு நாடுகடத்தப்பட்ட அவர் 1927 இல் இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். 1914 முதல் 1927 வரை தெர்னாத்தே அரியணையில் எவரும் ஆட்சியிலிருக்கவில்லை. அதன் பின்னர் அப்போதைய முடிக்குரிய இளவரசரான இசுக்கந்தர் முகம்மது ஜாபிர் என்பவரைத் தெர்னாத்தேவின் அடுத்த சுல்தானாக, ஒல்லாந்தரின் அனுசரணையுடன் தெர்னாத்தேவின் அமைச்சர்கள் அறிவித்தனர்.

அரசு மரபு[தொகு]

1930 இல் தெர்னாத்தே அரண்மனை
தெர்னாத்தேயின் கொலானோ ஆட்சி[4][5][6][7]
பாப் மசூர் மலாமோ 1257 - 1277
போயித் [ஜமீன் கத்ரத்] 1277 - 1284
கொமாலா அபூ சஈது [சியாலே] 1284 - 1298
வக்குக்கு [கலாவாத்தா] 1298 - 1304
ஙரா மலாமோ [கொமாலா] 1304 - 1317
பத்சராஙா மலாமோ [ஐத்சி] 1317 - 1322
சிலி ஆயியா [சிடாங் ஆரிப் மலாமோ] 1322 - 1331
பாஞ்சி மலாமோ [ஆஅலி] 1331 - 1332
ஷாஹ் அலாம் 1332 - 1343
துலு மலாமோ [புலு] 1343 - 1347
கியே மவிஜி [புகாயாத்தி I] 1347 - 1350
ஙொலோமா காயா [முகம்மது ஷாஹ்] 1350 - 1357
மமோலி [மொமோலே] 1357 - 1359
காப்பி மலாமோ I [முகம்மது பக்கர்] 1359 - 1372
காப்பி பாகுனா I 1372 - 1377
கொமாலா புலு [பெஸ்ஸி முகம்மது ஹஸ்ஸான்] 1377 - 1432
மர்ஹூம் [காப்பி பாகுனா II] 1432 - 1486
சைனுல் ஆபிதீன் 1486 - 1500
பயானுல்லாஹ் 1500 - 1522
ஹிதாயத்துல்லாஹ் 1522 - 1529
அபூ ஹயாத் 1529 - 1533
தபரீஜீ 1533 - 1534
கைருன் ஜமீல் 1535 - 1570
பாபுல்லாஹ் தாத்து ஷாஹ் 1570 - 1583
சஈது பரக்காத் ஷாஹ் 1583 - 1606
முளப்பர் ஷாஹ் I 1607 - 1627
ஹம்சா 1627 - 1648
மந்தர் ஷாஹ் [மன்ளர்சாகா] 1648 - 1650
மனிள்கா 1650 - 1655
மந்தர் ஷாஹ் 1655 - 1675
சிவோரி 1675 - 1689
சஈது பத்ஹுல்லாஹ் 1689 - 1714
அமீர் இசுக்கந்தர் சுல்கர்னைன் சைபுத்தீன் 1714 - 1751
அயான் ஷாஹ் 1751 - 1754
ஷாஹ் மர்ளான் 1755 - 1763
ஜலாலுத்தீன் 1763 - 1774
ஹாரூன் ஷாஹ் 1774 - 1781
அஹ்ரால் 1781 - 1796
முகம்மது யாசீன் 1796 - 1801
முகம்மது அலீ 1807 - 1821
முகம்மது சர்மோலி 1821 - 1823
முகம்மது சைன் 1823 - 1859
முகம்மது அர்சத் 1859 - 1876
அயான்ஹார் 1879 - 1900
முகம்மது இல்காம் [கொலானோ அரா ரிமோயி] 1900 - 1902
ஹாஜி முகம்மது உஸ்மான் ஷாஹ் 1902 - 1914
இசுக்கந்தர் முகம்மது ஜாபிர் ஷாஹ் 1927 - 1975
ஹாஜி முளப்பர் ஷாஹ் II [கலாநிதி முளப்பர் ஷாஹ்] 1975–தற்காலம்

தெர்னாத்தேவை ஆட்சி செய்த அரச மரபும், தெர்னாத்தே சுல்தானகமும் தற்போதும் இருந்தாலும், அவர்கள் தற்காலத்தில் ஆட்சி அதிகாரங்களைக் கொண்டோராக இல்லை. தெர்னாத்தேயின் முதலாவது மன்னர் பாப் மசூர் மலாமோ முதல், 13 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை ஒரே அரச மரபினரே தெர்னாத்தே ஆட்சியாளர்களாக இருந்து வருகின்றனர். சுல்தான் கலாநிதி ஹாஜி முளப்பர் II ஷாஹ் 1975 முதல் இதன் சுல்தானாக இருந்து வருகிறார்.

அரண்மனை[தொகு]

தெர்னாத்தே சுல்தானின் அரண்மனை

தற்போதிருக்கும் தெர்னாத்தே அரண்மனை 1796 இல் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதி ஓர் அருங்காட்சியகமாகவும், மறு பகுதி சுல்தானின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 1257 முதல் ஆட்சி செய்த தெர்னாத்தே அரச மரபினரின் பொருட்களும், போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தத் தலைக் கவசங்கள், வாட்கள், கவசங்கள், முன்னைய சுல்தான்களின் ஞாபகச் சின்னங்கள் போன்றவை காணப்படுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet. பக். 821. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-74059-154-2. https://archive.org/details/indonesia0000unse_i2g4. 
  2. Ricklefs, M.C. (1993). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  3. Ricklefs, M.C. (1993). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  4. [1]
  5. [2]
  6. [3]
  7. [4]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெர்னாத்தே_சுல்தானகம்&oldid=3877228" இலிருந்து மீள்விக்கப்பட்டது