கிள்ளான் துறைமுகம்

ஆள்கூறுகள்: 3°0′0″N 101°24′0″E / 3.00000°N 101.40000°E / 3.00000; 101.40000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிள்ளான் துறைமுகம்
Port Klang
சிலாங்கூர்
கிள்ளான் துறைமுகம் நார்த்போர்ட்
கிள்ளான் துறைமுகம் நார்த்போர்ட்
Map
கிள்ளான் துறைமுகம் is located in மலேசியா
கிள்ளான் துறைமுகம்
      கிள்ளான் துறைமுகம்
ஆள்கூறுகள்: 3°0′0″N 101°24′0″E / 3.00000°N 101.40000°E / 3.00000; 101.40000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கிள்ளான் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்573 km2 (221 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு42000
மலேசியத் தொலைபேசி எண்+60-3
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்B
இணையதளம்http://www.pka.gov.my

கிள்ளான் துறைமுகம் அல்லது கோலக்கிள்ளான் (மலாய்: Pelabuhan Klang; ஆங்கிலம்: Port Klang; சீனம்: 巴生港); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துறைமுக நகரம். கடல் வழியாகத் தீபகற்ப மலேசியாவுக்குள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கின்றது.[1]

பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் போர்ட் சுவெட்டன்காம் (Port Swettenham) என்று அறியப்பட்டது. 1972 சூலை மாதம், கிள்ளான் துறைமுகம் என பெயர் மாற்றம் கண்டது.

பொது[தொகு]

முன்பு காலத்தில் கிள்ளான் துறைமுகத்தில் கணிசமான அளவிற்கு தமிழர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் கிள்ளான் துறைமுகத்தைக் கோலா கிள்ளான் என்று அழைத்தார்கள். அந்தச் சொல் வழக்கு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கிள்ளான் நகரின் தென்மேற்கே 6 கி.மீ. (3.7 மைல்) தொலைவிலும், கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 38 கி.மீ. (24 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. இது மலேசியாவின் மிகப் பெரிய துறைமுகமாகும்.[2]

அண்மைய புள்ளிவிவரங்களின்படி உலகின் பரபரப்பு மிக்க கொள்கலன் துறைமுகங்களில் 11-ஆவது இடம் வகிக்கிறது. கொள்ளவு நிலையில் 12-ஆவது இடம் வகிக்கிறது.

வரலாறு[தொகு]

முன்னர் காலத்தில் கிள்ளான் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. அத்துடன் மாநிலத்தின் இரயில் சேவை முனையமாகவும் இருந்தது. அதாவது பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கான அரசாங்க மையமாகவும் கிள்ளான் நகரம் விளங்கியது.[3]

1880-ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநிலத் தலைநகர் கிள்ளானில் இருந்து கோலாலம்பூர் நகருக்கு மாற்றப்பட்டது. 1800-களின் பிற்பகுதியில் புதிய கோலாலம்பூர் நிர்வாக மையத்தில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டது.

கிள்ளான் - கோலாலம்பூர் போக்குவரத்து முறை[தொகு]

முன்னர் காலத்தில், குதிரை அல்லது எருமை மாடுகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் தான், கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து ஊடகங்களாக இருந்தன. அல்லது கிள்ளான் ஆற்றின் வழியாக டாமன்சாரா வரையில் படகு சவாரிகள் இருந்தன. அங்கு இருந்து கிள்ளான் நகருக்கு மீண்டும் குதிரை, எருமை மாட்டு வண்டிகளில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக வில்லியம் புளூம்பீல்ட் டக்ளஸ் (William Bloomfield Douglas) என்பவர் இருந்தார். துணை ஆளுநராக பிராங்க் சுவெட்டன்ஹாம் (Frank Swettenham) இருந்தார்.

கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து முறை; மிக நீண்டது, மிக சலிப்பானது; சீர் செய்யப்பட வேண்டும் என்று பிராங்க் சுவெட்டன்ஹாம் கருத்து தெரிவித்தார். மாற்றுப் பாதையாக ஓர் இரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

புதிய இரயில் பாதை இணைப்பு[தொகு]

1882 செப்டம்பர் மாதம் பிராங்க் சுவெட்டன்ஹாம் சிலாங்கூர் மாநிலத்தின் புதிய பிரித்தானிய ஆளுநராக (ரெசிடெண்ட்) நியமிக்கப்பட்டார். போக்குவரத்து சிக்கல்களைச் சமாளிக்க, கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையே ஓர் இரயில் பாதை இணைப்பைத் தொடக்குவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டார்.

அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூர் பகுதிகளில் நிறையவே ஈயம் உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றைப் பத்து துறைமுகத்திற்கு (Pelabuhan Batu) எடுத்துச் செல்ல வேண்டும். கிள்ளான் துறைமுகம், அப்போதைய காலக் கட்டத்தில் பத்து துறைமுகம் என்று அழைக்கப்பட்டது. இரயில் பாதை போடும் வேலைகள் தொடங்கின.

19 மைல் இரயில் பாதை[தொகு]

1886-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கோலாலம்பூரில் இருந்து புக்கிட் குடு (Bukit Kudu) வரையிலான 19 மைல் இரயில் பாதை திறக்கப்பட்டது. 1890-ஆம் ஆண்டில் அந்த இரயில் பாதை மேலும் 3 மைல் வரை நீட்டிக்கப்பட்டு, கிள்ளான் நகரத்துடன் இணைக்கப் பட்டது.[4][5][6][7]

கிள்ளான் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகிய இரண்டு பகுதிகளும் ஏற்கனவே மலேரியா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாக இருந்தன. கிள்ளான் துறைமுகம் சதுப்பு நில காட்டுப் பகுதியில் இருந்ததால் மிகையான மலேரியா தொற்றலுக்கு உள்ளாகி இருந்தது.

பிரித்தானிய மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ்[தொகு]

கிள்ளான் துறைமுகம் திறக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மலேரியாவின் கடும் தாக்கத்தால் துறைமுகமே மூடப்பட்டது.[8] கிள்ளான் துறைமுகத்தில் மலேரியா தாக்கம் ஏற்படுவற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான், அதாவது 1897-ஆம் ஆண்டில், மலேரியா கொசுக்களால் தான், மலேரியா நோய பரவுகிறது என்பதைப் பிரித்தானிய மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்தார்.

அந்த வகையில் அந்தக் கண்டுபிடிப்பில் இருந்து பயன் அடைந்த முதல் காலனித்துவ நாடு மலாயா. தவிர கிள்ளான் துறைமுகமும் மலேரியா தாக்கத்தில் இருந்து விடுபட்டது.[9]

மலேரியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கைகள்[தொகு]

புதர்க் காடுகள் அழிக்கப் பட்டன. சதுப்பு நிலங்கள் நிரப்பப் பட்டன. கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும்; துறைமுக நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்; பல துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் சதுப்பு நிலக் காடுகளில் தேங்கி நின்ற மேற்பரப்பு நீர் திசை திருப்பப் பட்டது. மலேரியாவின் அச்சுறுத்தல், கிள்ளான் துறைமுகத்தில் இருந்து முற்றாகத் துடைத்து ஒழிக்கப் பட்டது.

சிலாங்கூர் போலோ விளையாட்டு மன்றம்[தொகு]

அதன் பின்னர் கிள்ளான் துறைமுகத்தில் வணிகம் வேகமாக வளர்ந்தது. 1914-ஆம் ஆண்டில் பல்வேறு துறைமுக வசதிகளுடன் இரண்டு புதிய அணைக்கரைகள் உருவாக்கப் பட்டன. அதற்கு முன்னர் 1902-இல், கிள்ளான் துறைமுகத்தில் சிலாங்கூர் போலோ விளையாட்டு மன்றம் (Selangor Polo Club) நிறுவப்பட்டது. எனினும் அந்த மன்றம் 1911-இல் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.[10]

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் துறைமுகம் அதிக வளர்ச்சியும்; அதிக விரிவாக்கமும் அடைந்தது. 1940-ஆம் ஆண்டில், அதன் பண்ட பரிமாற்றம் 550,000 டன்னாக உயர்ந்தபோது உச்சத்தையும் தொட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது அரச போர் விமானங்களைப் (Royal Air Force) பராமரிக்க, கிள்ளான் துறைமுகத்தில் இருந்த விமானத் திடல்கள் பயன்படுத்தபட்டன.[11] போரின் போது சேதம் அடைந்த துறைமுகத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள் புனரமைப்பு செய்யப்பட்டன.

அப்போதைய மலாயாவின் முக்கியமான இரண்டு ஏற்றுமதி பொருட்களான ரப்பர்; பனை எண்ணைய். இவற்றின் ஏற்றுமதி பெருகியது. அதைக் கையாளும் வகையில் துறைமுகத்தின் தெற்குப் பகுதி விரிவு செய்யப்பட்டது. இறக்குமதியும் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சாத்தியம் அல்ல என்று எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இறக்குமதிப் போக்குவரத்து அமைந்தது.[12]

தற்சமயம் கிள்ளான் துறைமுகம், கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கிள்ளான் துறைமுகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சாண்டியாகோ பிரதிநிதிக்கின்றார் (2022).

கிள்ளான் துறைமுகத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

சிலாங்கூர்; கிள்ளான் மாவட்டம்; கிள்ளான் துறைமுகத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. வாட்சன் தமிழ்ப்பள்ளி. 569 மாணவர்கள் பயில்கிறார்கள். 43 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD0077 கிள்ளான் துறைமுகம் SJK(T) Persiaran Raja Muda Musa[13] வாட்சன் தமிழ்ப்பள்ளி 42000 கிள்ளான் துறைமுகம் 569 43

காட்சியகம்[தொகு]

கிள்ளான் துறைமுகம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Port of Port Klang West (Pelabuhan Klang) (MYPKG), Malaysia: Detailed latest information". www.cogoport.com. Archived from the original on 22 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. "Port Klang (Kelang) (Selangor - Malaysia)". www.sea-seek.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
 3. United States. Division of Entomology, United States. Bureau of Entomology (1910), Bulletin, vol. 88, Govt. Print. Office
 4. Official Government Reports for Selangor, 1886, 1890.
 5. "Various reports in The Straits Times, 1886-1890 at". Archived from the original on 2014-02-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
 7. Raffles, S (1921) "One hundred years of Singapore: being some account of the capital of the Straits Settlements from its foundation". London:Murray
 8. "Effective War on Mosquitos" (PDF). The New York Times. 19 April 1905. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
 9. L. P. Mair (2007), Welfare in the British Colonies, Read Books, ISBN 978-1-4067-7547-1, பார்க்கப்பட்ட நாள் 22 January 2022
 10. "The Selangor Polo Club". About us – The Selangor Polo Club. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 11. "Royal Air Servicing Commandos 1942 - 1946". www.combinedops.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 12. "Milestone". www.northport.com.my/npv2/milestone.html. Archived from the original on 16 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
 13. "வாட்சன் தமிழ்ப்பள்ளி - SJKT Persiaran Raja Muda Musa" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளான்_துறைமுகம்&oldid=3767933" இலிருந்து மீள்விக்கப்பட்டது