ஜெர்மனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செருமனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bundesrepublik Deutschland
ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசு / இடாய்ச்சுலாந்து
ஜேர்மனியின் கொடி ஜேர்மனியின் சின்னம்
குறிக்கோள்
யேர்மன்: Einigkeit und Recht und Freiheit
ஒற்றுமை நீதி மற்றும் விடுதலை
நாட்டுப்பண்
W:en:Das Lied der Deutschen
Location of ஜேர்மனியின்
தலைநகரம்
பெரிய நகரம்
பெர்லின்
52°31′N, 13°24′E
ஆட்சி மொழி(கள்) யேர்மன் 1
அரசு கூட்டாட்சி குடியரசு
 -  அதிபர் கிரிஸ்டியன் உல்ஃப்
 -  முதலமைச்சர் அஞ்செலா மேர்கெல்
 -  பதில் முதலமைச்சர்
யேர்மன் இராச்சியம்
 -  புனித ரோமப் பேரரசு 843 
 -  ஒரு குடையாதல் சனவரி 18 1871 
 -  கூட்டாட்சி குடியரசு மே 23 1949 
 -  மீள் ஒரு குடையாதல் அக்டோபர் 3 1990 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மார்ச் 25, 1953
பரப்பளவு
 -  மொத்தம் 3,57,050 கிமீ² (63வது)
1,37,858 சது. மை 
 -  நீர் (%) 2.416
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 82,438,000 (14வது)
 -  2000 குடிமதிப்பு N/A 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $2.522 டிரில்லியன் (5வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $30,579 (17வது)
ம.வ.சு (2003) 0.930 (high) (10வது)
நாணயம் யூரோ (€) 2 (EUR)
நேர வலயம் மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒ.ச.நே.+2)
இணைய குறி .de
தொலைபேசி +49
1 டனிசு மொழி, கீழ் யேர்மன், சோர்பிய மொழி, உறேமானி மொழி, மற்றும் பிரிசியன் மொழி என்பன ஐரோபிய சிறுபான்மை மொழிகளுக்கான மையத்தி மூலம் பாதுகாக்பட்ட மொழிகளாகும். 2 1999க்கு முன்: டொயிசு மார்க்

ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] ), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: , IPA[ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².

82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது[1].

ஜெர்மனி கிழக்கு-ஜெர்மனி மற்றும் மேற்கு-ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.

ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.

ஜெர்மானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே ஜெர்மானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனியப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன.[2] 16ம் நூற்றாண்டில் வடக்கு ஜெர்மன் பகுதிகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டஸ்தாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது.[3] நெப்போலியப் போர்களின் போது, ஜெர்மானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871ல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான ஜெர்மானியப் பகுதிகள் ஜெர்மன் பேரரசாக எழுச்சி பெற்றன.

1918-1919 ஜெர்மானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918ல், பாராளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933ல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945ன் பின், ஜெர்மனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டன. 1990ல் ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்தது.

1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் ஜெர்மனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்ஜென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உருப்பினராகவும் ஆனது. ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது.

ஜெர்மனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. ஜெர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. ஜெர்மனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாசார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும்.

வரலாறு[தொகு]

ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும்[தொகு]

ஜெர்மானியாவினதும் புனித உரோமப் பேரரசினதும் வரைபடம்

ஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்திய இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர்.[4] அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் ஜெர்மானியா என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன.[5]

3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.[6] 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது.[5]

புனித உரோமப் பேரரசு[தொகு]

டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது.[7] இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது.[7] ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது.

ஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன.[8] 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது.[9] 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.[10]

1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது.[11] ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது.[12] வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.[13] 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.[14]

புவியியல்[தொகு]

செருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் , 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது.

உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள்.

தட்ப வெப்பம்[தொகு]

செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது.

உயிரிப்பல்வகைமை[தொகு]

செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன.

நடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் பீவர்களும் உள்ளன.

செருமனியின் மாநிலங்கள்[தொகு]

தமிழில் செருமன் மொழியில்
செருமனியின் மாநிலங்கள் தலைநகரம் Bundesland Hauptstadt
1 பாடன் - வூர்ட்டம்பெர்க் ஸ்டுட்கார்ட் Baden-Württemberg Stuttgart
2 பயர்ன் முன்ச்சென் (Freistaat) Bayern München
3 பெர்லின் - Berlin Berlin
4 பிரண்டென்பேர்க் போட்ஸ்டம் Brandenburg Potsdam
5 பிறேமன் பிறேமன் (Freie Hansestadt) Bremen Bremen
6 ஹாம்பேர்க் - (Freie und Hansestadt) Hamburg Hamburg
7 ஹெஸன் வீஸ்பாடன் Hessen Wiesbaden
8 மெக்லென்பேர்க் - ஃபோர்போமென் சுவேரீன் Mecklenburg-Vorpommern Schwerin
9 நீடர்சாக்ஸன் ஹனோஃபர் Niedersachsen Hannover
10 நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் டுஸ்சல்டோர்ப் Nordrhein-Westfalen Düsseldorf
11 ரைன்லண்ட் - ஃபால்ஸ் மைன்ஸ் Rheinland-Pfalz Mainz
12 சார்லாந்த் சார்புருக்கன் Saarland Saarbrücken
13 சாக்ஸ்சன் டிரேஸ்டன் (Freistaat) Sachsen Dresden
14 சாக்ஸ்சன் - அன்கால்ட் மாக்டபேர்க் Sachsen-Anhalt Magdeburg
15 ஷ்லேஸ்விக் - ஹோல்ஷ்டைன் கீல் Schleswig-Holstein Kiel
16 தூறிங்கென் ஏர்ஃபூர்ட் (Freistaat) Thüringen Erfurt
செருமனி

நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெர்மன் மொழி[தொகு]

ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் [15]. கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், பாலற்றது எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - பொதுப்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது.

இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது[16].

முக்கிய ஆறுகள்[தொகு]

ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.

புகழ் பெற்ற ஜெர்மானியர்கள்[தொகு]

உணவு[தொகு]

செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது.

வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.

ஜெர்மனியில் கோயில்கள்[தொகு]

ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது [17]. ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர்.

ஜெர்மனியில் கல்வி வாய்ப்புகள்[தொகு]

ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன [18]. அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

செருமனி தேசிய காற்பந்து அணி

மேற்கோள்கள்[தொகு]

 1. Germany: Inflow of foreign population by country of nationality, 1994 to 2003
 2. The Latin name Sacrum Imperium (Holy Empire) is documented as far back as 1157. The Latin name Sacrum Romanum Imperium (Holy Roman Empire) was first documented in 1254. The full name "Holy Roman Empire of the German Nation" (Heiliges Römisches Reich Deutscher Nation) dates back to the 15th century.
  Zippelius, Reinhold (2006) [1994] (in German). Kleine deutsche Verfassungsgeschichte: vom frühen Mittelalter bis zur Gegenwart [Brief German Constitutional History: from the Early Middle Ages to the Present] (7th ed.). Munich: Beck. p. 25. ISBN 978-3-406-47638-9. 
 3. "Germany". Berkley Center for Religion, Peace, and World Affairs. பார்த்த நாள் 15 December 2011.
 4. Claster, Jill N. (1982). Medieval Experience: 300–1400. New York University Press. p. 35. ISBN 0-8147-1381-5. 
 5. 5.0 5.1 Fulbrook 1991, pp. 9–13.
 6. Bowman, Alan K.; Garnsey, Peter; Cameron, Averil (2005). The crisis of empire, A.D. 193–337. The Cambridge Ancient History. 12. Cambridge University Press. p. 442. ISBN 0-521-30199-8. 
 7. 7.0 7.1 Fulbrook 1991, p. 11.
 8. Fulbrook 1991, pp. 13–24.
 9. Nelson, Lynn Harry. The Great Famine (1315–1317) and the Black Death (1346–1351). University of Kansas. http://www.vlib.us/medieval/lectures/black_death.html. பார்த்த நாள்: 19 March 2011. 
 10. Fulbrook 1991, p. 27.
 11. Philpott, Daniel (January 2000). "The Religious Roots of Modern International Relations". World Politics 52 (2): 206–245. 
 12. Macfarlane, Alan (1997). The savage wars of peace: England, Japan and the Malthusian trap. Blackwell. p. 51. ISBN 978-0-631-18117-0. 
 13. Gagliardo, G., Reich and Nation, The Holy Roman Empire as Idea and Reality, 1763–1806, Indiana University Press, 1980, p. 12-13.
 14. Fulbrook 1991, p. 97.
 15. http://german.about.com/library/anfang/blanfang_abc.htm
 16. http://www.goethe.de/ins/in/lp/enindex.htm
 17. http://www.kamadchi-ampal.de/englisch/index.php
 18. http://en.wikipedia.org/wiki/List_of_universities_in_Germany

வெளி இணைப்புகள்[தொகு]


ஜி8
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மனி&oldid=1695012" இருந்து மீள்விக்கப்பட்டது