யூலியசு சீசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யூலியசு சீசர் (ஜூலியஸ் சீசர், ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 - மார்ச் 15, கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்.

யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.

யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி.மு.78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.

சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி.மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி.மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.

ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=யூலியசு_சீசர்&oldid=1342386" இருந்து மீள்விக்கப்பட்டது