முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
முயல்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
லின்னேயஸ், 1758
மாதிரி இனம்
மலை முயல், Lepus timidus
லின்னேயஸ், 1758
உயிரினங்கள்

கீழே காண்க

முயல்கள் (Hares) மற்றும் கழுதை குழிமுயல்கள் (Jackrabbits) லெபோரிடே என்ற குடும்பத்தின் கீழ் லெபுஸ் (Lepus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குழிமுயல்கள் எந்த குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவோ அதே குடும்பத்தின் கீழ் தான் குழி முயல்களும் (Rabbits) வகைப்படுத்தப்பட்டுள்ளன. முயல்கள் அளவு மற்றும் வடிவத்தில் குழிமுயல்களை விட பெரியவையாக உள்ளன. ஒரே விதமான உணவை உண்கின்றன. முயல்கள் பொதுவாக தாவர உண்ணிகளாகவும் மற்றும் நீண்ட காதுகளை உடையவையாகவும், வேகமாக ஓடக்கூடியவையாகவும் உள்ளன. இவை வழக்கமாக தனியாகவோ அல்லது இரண்டு முயல்களாகச் சேர்ந்தோ வாழ்கின்றன. முயல் இனங்கள் ஆப்பிரிக்கா, யுரேசியா, வட அமெரிக்கா மற்றும் சப்பானியத் தீவுக் கூட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை.

"முயல்" என்ற சொல்லைத் தங்கள் பெயரில் கொண்டுள்ள ஐந்து லெபோரிடேக் குடும்ப உயிரினங்கள் உண்மையான முயல்களாகக் கருதப்படுவதில்லை: ஹிஸ்பிட் முயல் (Caprolagus hispidus) மற்றும் நான்கு இனச் சிவப்புப் பாறை முயல்கள் (புரோனோலகுஸ் (Pronolagus) பேரினம்). அதேநேரத்தில், கழுதை குழிமுயல்கள் (Jackrabbits) எனப்படுபவை முயல்கள் ஆகும், குழிமுயல்கள் அல்ல.

ஒரு வயதுக்கும் குறைவான முயல் ஆங்கிலத்தில் லெவெரெட் (leveret) என்று அழைக்கப்படுகிறது. பல முயல்கள் சேர்ந்த ஒரு கூட்டம் ஆங்கிலத்தில் "ட்ரோவ்" (drove) என்று அழைக்கப்படுகிறது.

உயிரியல்[தொகு]

முயல்கள் வேகமான விலங்குகள் ஆகும்: ஐரோப்பிய முயல் (Lepus europaeus) மணிக்கு 56 கி.மீ. (35 மைல்) வரை ஓடக் கூடியது ஆகும்.[1][2] வட அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் காணப்படக்கூடிய ஐந்து இனங்களைச் சேர்ந்த குழிமுயல்கள் மணிக்கு 64 கி.மீ. (40 மைல்) வரை ஓடக்கூடியவையும், ஒரே தாவலில் 3 மீ (10 அடி) வரை தாவக்கூடியவையும் ஆகும்.[3]

குழி முயல்களிலிருந்து வேறுபாடுகள்[தொகு]

நகரின் தோட்டத்தில் காட்டு முயல்

லெபோரிடே குடும்பத்தின் மற்ற இனங்கள் போல முயல்கள் தங்கள் குட்டிகளை தரைக்குக் கீழ் வளைகளில் அல்லது குழிகளில் பெற்றெடுப்பதில்லை. மாறாக, பள்ளமற்ற தாழ்வான பகுதிகள் அல்லது புற்களால் ஆன தட்டையான கூட்டின் மேல் பெற்றெடுக்கின்றன. முயல் குட்டிகளுக்கு குழிமுயல் குட்டிகளைப் போல் குழிகள் அல்லது வளைகளால் ஏற்படுத்தப்படும் பாதுகாப்புக் கிடைப்பதில்லை. மாறாக இயற்கையானது முயல் குட்டிகளுக்கு பிறக்கும்போதே உரோமத்தையும், திறந்த கண்களையும் கொடுத்துள்ளது. இவற்றால் பிறந்தவுடன் தன்னிச்சையாக இருக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் முடியும். மாறாகக் குழிமுயல் குட்டிகள் மற்றும் பஞ்சுவால் குழிமுயல் குட்டிகள் கண்பார்வையற்று, உரோமமின்றிப் பிறக்கின்றன.[4]

அனைத்துக் குழிமுயல்களும் (பஞ்சுவால் குழிமுயல்களைத் தவிர) நிலத்தினடியில் குழிகள் அல்லது வளைகளில் வாழ்கின்றன. அதேநேரத்தில் முயல்கள் (மற்றும் பஞ்சுவால் குழிமுயல்கள்) தரையின் மேலே உள்ள எளிய கூடுகளில் வாழ்கின்றன. இவை பொதுவாகக் கூட்டமாக வாழ்வதில்லை. முயல்கள் பொதுவாகக் குழிமுயல்களை விடப் பெரியவை ஆகும். மேலும் குழிமுயல்களைவிட நீண்ட காதுகளைப் பெற்றுள்ளன. முயல்களின் உரோமத்தில் கறுப்பு அடையாளங்கள் காணப்படுகின்றன. முயல்கள் கொல்லைப்படுத்தப்படவில்லை, ஆனால் குழி முயல்கள் வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. "பெல்ஜிய முயல்" என்று அழைக்கப்படும் வளர்ப்பு முயலானது குழிமுயல் ஆகும். இது முயலைப் போன்றே இருப்பதற்காகத் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறையால் உருவாக்கப்பட்டது ஆகும்.[5]

முயல்கள் இணைந்த அல்லது இயங்கக் கூடிய மண்டையோடுகளைக் கொண்டுள்ளன. இது பாலூட்டிகளிலேயே ஒரு தனித்துவமானது ஆகும். முயல்கள் 48 நிறப்புரிகளைக் கொண்டுள்ளன, அதேநேரத்தில் குழிமுயல்கள் 44 நிறப்புரிகளைக் கொண்டுள்ளன.

வகைப்படுத்தல்[தொகு]

முயல்களில் பட்டியலிடப்பட்டுள்ள 32 இனங்கள் உள்ளன. அவை

முயல்
புரூக்லின் அருங்காட்சியகம் - கலிபோர்னிய முயல் - ஜான் ஜே. அவுடுபோன்
முனை முயல் Lepus capensis

நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களில்[தொகு]

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகளில் முயல்கள் ஏமாற்றும் குணம் கொண்டவையாகக் கூறப்படுகின்றன. இந்தக் கதைகள் அமெரிக்காவில் இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் இடையேயும் கூறப்பட்டன. இக்கதைகளே பிரெர் குழிமுயல் கதைகள் எனப்படும் கதைகளுக்கு அடிப்படையாகும்.

சீனா, சப்பான் மற்றும் மெக்சிகோ உட்பட பல நாடுகளின் கலாச்சாரங்களில் நிலவின் கருப்புப் பகுதிகள் ஒரு முயலாகக் கருதப்படுகின்றன. லெபுஸ் விண்மீன் கூட்டமும் ஒரு முயலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பியப் பாரம்பரியத்தில், முயல் இரு குணங்களான வேகம்[7] மற்றும் துணிவின்மையைக்[8] குறிக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டாவது குணத்தின் காரணமாக ஐரோப்பிய முயலானது லின்னேயப் பெயரான (உயிரியல் பெயர்) லெபுஸ் டிமிடஸைப் (Lepus timidus)[9] பெற்றது. ஆனால் அப்பெயர் இப்போது மலை முயலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பல பண்டைய கட்டுக்கதைகள் முயல்கள் ஓட்டமெடுப்பதைப் பற்றிக் கூறுகின்றன; முயல்கள் மற்றும் தவளைகள் எனும் கதையில் தங்களைவிட துணிவற்ற, தங்களிடம் பயப்படும் ஒரு உயிரினத்தைக் காணும் வரை அவை மொத்தமாகத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதாகக் கூடக் கூறப்படுகிறது. மாறாக, ஈசாப்பின் நீதிக்கதைகளில் நன்கு அறியப்பட்ட ஆமை மற்றும் முயல் கதையில் முயலானது தன் வேகத்தின் மீது வைத்த அபரிமிதமான நம்பிக்கையின் காரணமாக ஓட்டப்பந்தயத்தில் தோற்கிறது. அயர்லாந்து நாட்டுப்புறக் கதைகளில் முயலானது பெரும்பாலும் சித் (தேவதை) அல்லது மற்ற சிறு மதக் கடவுள்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கதைகளில், முயல்களுக்குத் தீங்கு செய்யும் கதாபாத்திரங்களுக்குப் பெரும்பாலும் பயங்கரமான விளைவுகள் ஏற்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. McKay, George; McGhee, Karen (10 October 2006). National Geographic Encyclopedia of Animals. National Geographic Books. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7922-5936-7. 
  2. Vu, Alan. "Lepus europaeus: European hare". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்க்கப்பட்ட நாள் 9 January 2013.
  3. "Jackrabbits, Jackrabbit Pictures, Jackrabbit Facts – National Geographic". Animals.nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-12.
  4. Langley, Liz (19 December 2014). "What's the Difference Between Rabbits and Hares?". National Geographic.
  5. Pet Planet – Small Breed Profile – Belgian Hare
  6. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 195–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=13500099. 
  7. As fast as a hare
  8. Ebenezer Cobham Brewer, Dictionary of Phrase and Fable, Cambridge University 2014, p.32
  9. The Popular Encyclopaedia 3.2., Glasgow 1836, p.634

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lepus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முயல்&oldid=3835559" இலிருந்து மீள்விக்கப்பட்டது