இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகள் ஒற்றுமையின்மையால் இரண்டு ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தன. 1996ல் பிற கட்சிகள் எதுவும் ஆதரவளிக்க முன்வராததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாரதிய ஜனதா கட்சி இரு ஆண்டுகளுள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. அதிமுக, பாமக, மதிமுக, சிவ சேனா, லோக் சக்தி, அரியானா முன்னேற்றக் கட்சி, ஜனதா கட்சி, என். டி. ஆர். தெலுங்கு தேசம் (சிவபார்வதி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணி 254 இடங்களை வென்றது. அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லையெனினும் தனிப்பெரும் கூட்டணி என்பதால் குடியரசுத் தலைவர் தேஜகூ கூட்டணியின் தலைமையில் ஆன பாஜக கட்சி தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை ஆட்சியமைக்க அழைத்தார். பிரதமரான பின் வெற்றி பெற்ற இதரக்கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் துணையுடன், 286 உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் தனது தனிப்பெரும்பான்மையை நிருபித்தார்.