இந்தியா ஜனவரி 26, 1950ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன.[1] இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவினால் (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்பட்டது.[2]
புதிய தேர்தல் விதிகளின்படி மே 2, 1952ல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த ராஜேந்திர பிரசாத் அனைத்து சாரருக்கும் ஏற்புடையவராக இருந்தார். பல எதிர்க்கட்சிகளும் அவரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட பம்பாய் மாநிலத்தைச் சேர்ந்த பொருளியல் அறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் கே. டி. ஷா, ராஜேந்திர பிரசாத்துக்கு முக்கிய போட்டியாளராக இருந்தார். லட்சுமண் கணேஷ் தட்டே என்ற சுயேட்சை வேட்பாளரை வலதுசாரி இந்து மகாசபா ஆதரித்தது. இவர்கள் தவிர மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராஜேந்திர பிரசாத் 83.8 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.