உள்ளடக்கத்துக்குச் செல்

கலம்காரி கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தும் கலம்காரி ஆடை. தேசிய கைவினைப் பொருள்கள், மற்றும் கைத்தறி அருங்காட்சியகம், புது தில்லி

கலம்காரி கலை (தெலுங்கு: కలంకారి) (ஆங்கில மொழி: Kalamkari or Qalamkari) என்பது ஆந்திராவின் பழமையான கலையாகும். இக்கலை வடிவம் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் பருத்தி காடா துணி ஆகும். கலம்காரி என்பதன் பொருள் என்ன? பாரசீக மொழியில் கலம் என்றால் பேனா என்று பொருள். காரி என்பது கலைவடிவம் என்று பொருள்படும். கலம்காரி என்பது பேனாவால் செய்யப்படும் வேலைப்பாடு ஆகும். இந்த ஒவியங்கள் பெரும்பாலும் காளஹஸ்தி பகுதியில் உள்ள கோயில்களின் திரைச்சீலைகள், சுவரில் மாட்டும் ஓவியங்கள், தேரில் கட்டும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவற்றில் காண இயலும். போச்சம்பள்ளி துணி வகைகளிலும் காண முடியும்.[1] முகலாயர்கள் மற்றும் கோல்கொண்டா சுல்த்தான்களின் ஆதரவு பெற்ற இக்கலை ஆந்திரபிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் நகர் அருகே அமைந்துள்ள பெத்தனா என்னுமிடத்தில் தொடங்கி வளர்ந்தது.

இரண்டு கலம்காரி பாணிகள்

[தொகு]

இந்திய கலம்காரி கலையில் இரண்டு பாணிகள் உள்ளன. முதலாவது திருக்காளத்தி பாணி மற்றொன்று மச்சிலிப்பட்டணம் பாணி. முழுவதும் கைவேலைப்பாடுகளால் தயாராகும் திருக்காளத்தி கலம்காரியில் பேனாவைப் பயன்படுத்திக் கையால் வரைந்து பின் வண்ணம் அடிக்கப்படுகிறது. இந்த கலம்காரி பாணி இந்துக் கோவில்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எனவே இதற்கு இந்து மத அடையாளம் உண்டு. எடுத்துக்காட்டாக கோவில்களில் பயன்படும் அழகிய திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் ஓவியங்கள், தேரில் இடம்பெறும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவை இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்டக் காட்சிகளுடனும் கடவுளர் உருவங்களுடனும் கலம்காரி வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளன. திருக்காளத்தி கலம்காரி கலை இந்த அளவிற்கு வளர்ந்து புகழடைந்ததற்கு அகில இந்திய கைவினைக் கழகத்தின் தலைவி திருமதி.கமலாதேவி சட்டோபாத்யாயா அவர்களே முழுமுதற்காரணம் ஆவார். இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தும் கலம்காரி கலையில் கடினமான பதினேழு படிகள் உள்ளன.

மும்பையில் உள்ள ஜே.ஜே.கலைப் பள்ளி (J. J. School of Art, Mumbai) கலம்காரி கலையால் பெரிதும் பயனடைந்துள்ளது. இந்நிறுவனம் பட்டுத்துணிகளில் இக்கலையை முயன்று வருகிறது. (எடுத்துக் காட்டு முடிச்சிட்டு சாயமிடும் (tie and dye textiles) ஆந்திரப் பிரதேசம், போச்சம்பள்ளி துணி வகைகள்).

வரலாறு

[தொகு]
புரூக்ளின் அருங்காட்சியகத்தில் உள்ள 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கலம்காரி திரைச்சீலை

கலம்காரி கலை மிகவும் பழமை வாய்ந்தது. இடைப்பட்ட காலத்தில் இக்கலை பெற்ற வளர்ச்சி வசதி படைத்த கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் ஐதராபாத் நிசாம்கள் ஆகியோரைச் சுற்றியே அமைந்திருந்தது. ஆந்திரபிரதேசத்தில் பல குடும்பங்கள் இக்கலையைத் தொழிலாகவும் வருவாயீட்டும் வழியாகவும் ஆக்கிக்கொண்டனர்.

கலம்காரி என்பது பேனாவைப் பயன்படுத்தித் துணியில் அழகுபடுத்தும் பழங்காலக் கலை. அழகிய வேலைப்பாடு மிகுந்த மாதிரியுருக் கோலங்களைத் (patterns) தாவரச் சாயங்கள் மூலம் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்டத் துணி வகையைக் குறிப்பதற்கு இந்தக் கலம்காரி என்ற சொல் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான துணிகள் தற்போது இந்தியாவில் பல பகுதிகளிலும் தயாராகின்றன. எனினும் தென்மாவட்டங்களில் தான் இன்னமும் பழங்காலக் கலைமுறைப்படி தயாரிக்கப்படுவதால் கலம்காரி என்றால் அது தென்மாவட்டங்களில் தயாராகும் துணிகளையே குறிக்கிறது. பேனாவால் பல கோலங்கள் வரையும் கலை ஆந்திரபிரதேசத்தில் தான் தொழிலாக வளர்ந்து வருகிறது. அச்சிடப்பட்டத் துணிகளிலும் கூட நுண்ணிய மாதிரியுரு கோலங்கள் மற்றும் கண்கவர் வண்ணக்கலவைகள் எல்லாம் பேனாவினாலேயே வரையப்படுகின்றன. ஆந்திரபிரதேசத்தில் கடற்கரை ஆந்திரா மற்றும் கோல்கொண்டா பகுதிகளில் பணிபுரியும் கலம்காரி கலைஞர்களை ஆதரித்த முகலாயர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரில் இந்த துணிகளுக்குப் பெயரிட விரும்பினர். இவர்கள் இந்த வகை துணிகளுக்குச் சூட்டிய பெயர் கலம்கார் (Qua-lamkars) என்பதாகும்.[2]

பழங்காலத்தில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ஒரு குழுவாக இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று, மக்களிடம் இந்து சமய புராணக் கதைகளைச் சொல்லுவது வழக்கம். நாளடைவில் இந்தக் கதைகளைச் பெரிய ஓவியச்சீலைகளைகளில் (large bolts of canvas) சாயங்களைப் பயன்படுத்திக் காட்சிகளாக வரைந்து அவற்றின் உதவியோடு கதை சொல்லத் தொடங்கினர். இவ்வாறுதான் முதல் கலம்காரி ஓவியம் தோன்றியது. இந்துக் கோவில்களில் பெரிய ஓவியச்சீலைகளில் புராணக் கதைகள் கலம்காரி ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதைப் போன்றே வண்ணக் கண்ணாடிகளில் வரையப்பட்ட ஓவியங்கள் கிறித்துவ தேவலாயங்களிலும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

இடைப்பட்ட நாட்களில் சற்றே தளர்ச்சியுற்றாலும் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் இக்கலை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.கடந்த 18ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆங்கிலேயர்கள் இவ்வாறு அலங்காரப் படுத்தப்பட்ட துணிவகைகளில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

கலம்காரி செய்முறை நுட்பம், உத்திகள்

[தொகு]

முரடான பருத்திக் காடாத் துணியானது குங்கிலியம் (பிசின்) மற்றும் பசும்பாலில் ஒரு மணி நேரம் மூழ்கியிருக்கும்படி வைக்கப்படுகிறது. இதனால் துணிக்குப் பளபளப்பும், வழவழப்பும் கிடைக்கின்றன. பின்பு நொதிக்க வைக்கப்பட்ட வெல்லம் மற்றும் நீர் கலந்த கலவையில் கூரான மூங்கில் குச்சி நனைக்கப்பட்டு துணியில் வடிவ விளிம்பு வரைவு கோடுகளாலான (contour) ஓவியம் வரையப்படுகிறது. பின்பு அக்கோட்டிலேயே தாவரச் சாயம் பயன்படுத்தி ஓவியம் வரையப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வண்ணமாகத் தனித்தனியே வரையப்படுகிறது. இறுதியாகக் கலம்காரி துணி நீரில் அலசப்படுகிறது. ஒரு துணி மீண்டும் மீண்டும் குறைந்தது 20 முறைகளாவது இவ்வாறு அலசப்பட வேண்டியிருக்கும். வேண்டிய நுணுக்கங்களைப் (effects) பெற பசுஞ்சாணம், விதைகள், செடிகள், நசுக்கிய மலர்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது

குங்கிலியத்துக்குப் பதிலாக கடுக்காயைப் பயன்படுத்தலாம். ஆனால் கடுக்காயிலுள்ள அதிக அளவு பதத்துவர் (tannin) காரணமாக கடுக்காயுடன் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் கலந்த கலவையில் காடாத்துணி ஊறவைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பேசும் பொற்சித்திரங்கள்". தி இந்து (தமிழ்). 2016 -சூன் 4. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Bhatnagar, Parul. "Kalamkari". Traditional Indian Costumes and Textiles. suraj. பார்க்கப்பட்ட நாள் 2004. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலம்காரி_கலை&oldid=3928655" இலிருந்து மீள்விக்கப்பட்டது