திருப்பதி லட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பதி லட்டு
Tirupati Laddu
Tirupati Laddu
திருப்பதி லட்டு
வேறு பெயர்கள்ஸ்ரீவாரி லட்டு
குறிப்புதிருப்பதி திருமலையில் திருவேங்கடவனுக்கு நெவேத்தியமாக படைக்கப்படும் லட்டு
வகைஉணவுப்பொருள்
இடம்திருப்பதி, ஆந்திரப்பிரதேசம்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2009
பொருள்கடலை மாவு , முந்திரி , ஏலக்காய் , நெய் , சர்க்கரை , கற்கண்டு, திராட்சை போன்றவை.
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.tirumala.org

திருப்பதி லட்டு (Tirupati Laddu) அல்லது ஸ்ரீவாரி லட்டு[1] என்பது திருமலை திருப்பதி வெங்கடாசலபதிக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்ட லட்டு ஆகும். இந்த லட்டு கோயிலில் தரிசனம் செய்துவிட்டுவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.[2][3] 2014 ஆம் ஆண்டு 90 மில்லியன் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[4]

வரலாறு[தொகு]

திருமலை திருப்பதி வேங்கடவனுக்கு 1715 ஆகத்து 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது துவங்கியது.[5][6] என்றாலும் 1803இல் இருந்துதான் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது. அப்போது இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்திக்கு பதில் லட்டை பிரசாதமாக வழங்கத்துவங்கினர். [7]

புவிசார் குறியீட்டைப் பெறல்[தொகு]

திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும்விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008 ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவுசெய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது.[8] இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடைசெய்யப்பட்டது.[1]

லட்டு பொட்டு[தொகு]

திருமலைக் கோயிலின் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. இங்கு பொருட்கள் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் மூன்று கடத்துப் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மடப்பள்ளியிலிருந்து விற்பனையகத்துக்கு லட்டுக்களை கொண்டு செல்ல பயன்படுகின்றன.[9] மூன்று கடத்துப்பட்டைகளில் முதல் பட்டை லட்டுகளை எடுத்துச்செல்ல வசதியாக 2007 ஆண்டு நிறுவப்பட்டது. இரண்டாவது பட்டையானது லட்டு, பூந்தி ஆகியவற்றை கொண்டுசெல்ல வசதியாக 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மூன்றாவது கடத்துப்பட்டை முதலிரண்டு பட்டைகளுக்கு உதவியாக 2014ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது.[10] கடந்த காலத்தில் லட்டுகள் தயாரிக்க விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டது, 1984 முதல் சமைக்க எரிவளி பயன்படுத்தப்பட்டு வருகிறது.[6]

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுக்களை நாளொன்றுக்கு தயாரிக்கிறது. தற்போது, பொட்டுவில் நாள் ஒன்றுக்கு 800,000 லட்டுக்களை தயார் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது.[6]

திட்டம்[தொகு]

திட்டம் என்பது திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அதன் விகிதாச்சாரத்தின் பட்டியல் ஆகும். திருப்பதி லட்டுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, அதன் வரலாற்றில் ஆறு முறை திட்டம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.[6] தற்போது திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை.[1] நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தால் இந்த பொருட்களை கொள்முதல் செய்ய ஆண்டு அடிப்படையில் கேள்விப் பத்திரம் கோரப்படுகிறது.[11]

பொட்டு கார்மீகலு[தொகு]

ஏறக்குறைய 200 சமையல் பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சமையல் பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கப்படுகின்றனர்.[11]

திருப்பதி லட்டு வகைகள்[தொகு]

ஆஸ்தான லட்டு[தொகு]

இந்த ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.[12]

கல்யாண உற்சவ லட்டு[தொகு]

இந்த லட்டுக்கள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.[12]

புரோக்தம் லட்டு[தொகு]

இந்த லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் மிகுதியான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகிறது.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Tirupati laddu gets global patent". பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
 2. "Only TTD entitled to make or sell 'Tirupati laddu': High Court". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
 3. "Now, Geographical Indication rights for 'Tirupati laddu'". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
 4. "Tirupati laddu turns 300". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
 5. "Tirupati laddu: Since August 2, 1715". Sify இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150810072722/http://www.sify.com/news/tirupati-laddu-since-august-2-1715-news-national-pifpuvghhfedd.html. பார்த்த நாள்: 22 September 2015. 
 6. 6.0 6.1 6.2 6.3 "Tirupati laddu all set to regain its old taste". பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
 7. என்.மகேஷ்குமார் (28 சூலை 2016). "திருமலை திருப்பதி லட்டு உருவானது எப்படி? - இனிப்பான அரிய தகவல்கள்". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
 9. "Extra laddu-boondi conveyor at Tirumala". பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
 10. "Laddu conveyor launched". பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
 11. 11.0 11.1 "TIRUPATI LADDUS WILL NO LONGER USE K'TAKA GHEE". பார்க்கப்பட்ட நாள் 2016-01-27.
 12. 12.0 12.1 12.2 "Preparation of Tirumala Srivari Laddu: A Critical Study(Research Paper by Dr. V.Thimmappa" (PDF). The Global Journals. பார்க்கப்பட்ட நாள் 2015-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதி_லட்டு&oldid=3856567" இலிருந்து மீள்விக்கப்பட்டது